சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 14 பேர் அடங்கிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாம் இன்று (15) அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாத்திற்குள் துடுப்பாட்ட வீரர்களான ஜோ பேன்ஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
பங்களாதேஷ் இளையோரிடம் படுதோல்வியடைந்த இலங்கை
சுற்றுலா இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் ….
அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இரண்டு வீரர்களும் ஆஸி. டெஸ்ட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட பிரதான காரணமாகும்.
இதேநேரம், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் பின்னர் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் வாய்ப்பினை இழந்த மற்றுமொரு துடுப்பாட்டவீரரான கேமரூன் பென்கிரப்டும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார்.
இதேவேளை அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்து போட்டிகளில் ஆடிவரும் அறிமுக வேகப்பந்துவீச்சாளரான மைக்கல் நெசரும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
எனினும், பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட இடதுகை துடுப்பாட்ட வீரரான வில் புக்கோவ்ஸ்க்கி தனது உளநல ஆரோக்கியத்தினால் பாகிஸ்தான் தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழக்கின்றார்.
அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறிய போதிலும் இந்த டெஸ்ட் தொடரிலும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவராக டிம் பெயின் தொடர்ந்தும் செயற்படுகின்றார். எனினும், துடுப்பாட்ட வீரர்களான மார்கஸ் ஹர்ரிஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் காணப்படும் வீரர்களில் ஸ்டீல் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் முக்கிய துடுப்பாட்ட வீரர்களாக காணப்பட மிச்செல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் ஆகியோர் பிரதான பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர்.
பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 21 ஆம் திகதி பிரிஸ்பேன் நகரில் இடம்பெறவுள்ளதோடு அடுத்த டெஸ்ட் போட்டி எடிலைட் நகரில் இம்மாதம் 29 ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக இடம்பெறவிருக்கின்றது.
அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம் – டேவிட் வோர்னர், ஜோ பேர்ன்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மெத்திவ் வேட், கேமரூன் பென்கிரப்ட், டிம் பெயின் (அணித்தலைவர்), பெட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசல்வூட், ஜேம்ஸ் பெட்டின்சன், மைக்கல் நெசர்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<