ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 21 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனையை சமன் செய்துள்ளது.
அவுஸ்திரேலியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது.
>> இலங்கையில் ஒத்திவைக்கப்படும் அடுத்த கிரிக்கெட் தொடர்
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவி ராச்செல் ஹெய்ன்ஸ் 96 ஓட்டங்களையும், அலிசா ஹீலி 87 ஓட்டங்களையும் விளாசினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 27 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனால், அவுஸ்திரேலிய அணி 232 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்ததுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அத்துடன், அந்த அணி தொடர்ச்சியாக வென்ற 7-வது தொடர் வெற்றி இதுவாகும்.
மேலும், அவுஸ்திரேலிய மகளிர் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். 2017 ஒக்டோபர் மாதத்துக்கு பிறகு அந்த அணி தோல்வியையே சந்திக்கவில்லை என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
முன்னதாக, ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய ஆடவர் அணி கடந்த 2003 இல் இந்த உலக சாதனையை எட்டிய நிலையில், 17 வருடங்கள் கழித்து அந்த சாதனையை அவுஸ்திரேலிய மகளிர் அணி சமன் செய்துள்ளது.
>> Video – சிங்கப் பெண்களுடன் மோதும் இந்திய பெண்கள்..!
இந்த உலக சாதனை குறித்து அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவி மெக் லேனிங் கூறுகையில்,
‘மிகப்பெரிய வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது அருமையானது. தொடர்ந்து 21 வெற்றிகளை பதிவு செய்ய அபரிமிதமான முயற்சி வேண்டும். இந்த உலக சாதனைக்காக பெருமை கொள்கிறோம்‘ என்றார்.
அவுஸ்திரேலிய ஆடவர் அணி சாதனையுடன் ஒப்பிடுகையில் மகளிர் அணியின் சாதனை பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இடம்பிடித்தது. ரிக்கி பொண்டிங் தலைமையிலான ஆடவர் அணி கடந்த 2013இல் 5 மாதங்களுக்குள்ளாக தொடர்ச்சியாக 21 வெற்றிகளைப் பதிவு செய்தது. அதில் 2003 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் ஆட்டங்களும் அடங்கும்.
ஆனால், அவுஸ்திரேலிய மகளிர் அணி இந்தச் சாதனையை எட்டுவதற்காக கடந்த 2017 அக்டோபர் முதலே தோல்வியைத் தழுவாமல் இருந்து வந்துள்ளது. இந்த வெற்றியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நியூஸிலாந்து நாட்டு மகளிர் அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<