அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
T20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது, முதல் 5 பந்துகளை வீசிய நிலையில் தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக பினுர பெர்னாண்டோ களத்திலிருந்து வெளியேறினார்.
>> ‘கோலி ஓய்வுபெற வேண்டும்’ – அக்தர் வேண்டுகோள்
பின்னர் இவருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உபாதையின் தீவிரத்தன்மையின் காரணமாக T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்திலிருந்து இவர் நீக்கப்படுவதாக புதன்கிழமை (26) அறிவிக்கப்பட்டது.
பினுர பெர்னாண்டோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அசித பெர்னாண்டோ, மதீஷ பதிரண மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு பயணித்திருந்தனர். இந்தநிலையில், ஆசியக்கிண்ணத்தில் இறுதியாக விளையாடிய அசித பெர்னாண்டோவுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
T20 உலகக்கிண்ணத்துக்கான ஐசிசியின் தொழிநுட்ப குழு அசித பெர்னாண்டோவை அணியில் இணைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதுடன், இவர் அடுத்த போட்டியில் இலங்கை அணியின் தெரிவுக்குள் உள்வாங்கப்படுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அணி தங்களுடைய அடுத்தப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் சனிக்கிழமை (29) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<