பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்று நோயால் மரணமடைந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தில், இம்மாதம் 30ஆம் திகதி உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. அதற்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் 3 அதிரடி மாற்றங்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழாமில்…..
இந்தத் தொடரில், பாகிஸ்தான் அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கிய ஆசிப் அலி, சிறப்பாக விளையாடியிருந்தார். நான்கு போட்டிகளில் இரண்டு அரைச் சதங்களை விளாசியிருந்ததுடன், இன்று (20) அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட பாகிஸ்தான் உலகக் கிண்ண இறுதி குழாத்திலும் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் பாத்திமா. புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
புற்றுநோயின் 4ஆம் கட்டம் என்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும், அது பலனின்றி நூர் பாத்திமா நேற்று (19) மரணம் அடைந்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகியது. இந்தச் செய்தி, ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களையும், முழு கிரிக்கெட் உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆசிப் அலி விளையாடிவருகிறார். அந்த அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவல் முதலாவதாக உறுதிசெய்யப்பட்டது.
ICC உலகக் கிண்ணத்துக்கான பாடல் மற்றும் பரிசுத் தொகை வெளியீடு
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான….
இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆசிப் அலியின் 2 வயது மகள் காலமாகியுள்ளதற்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். ஆசிப்பிற்காகவும், அவரின் குடும்பத்துக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். வலிமைக்கும் தைரியத்துக்கும் முன் உதாரணம் ஆசிப். மனவலிமை, மன உறுதியுள்ள அவர் நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ISLU family pays its deepest condolences to @AasifAli2018 on the tragic loss of his daughter. Our thoughts and prayers go out to Asif & his family. Asif is a great example of strength & courage. He is an inspiration to us.
— Islamabad United (@IsbUnited) 19 May 2019
முன்னதாக, இங்கிலாந்து தொடருக்கு புறப்பபடும் தருணத்தில், தமது மகளின் உடல்நிலை குறித்து ஆசிப் அலி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார்.அதில் அவர் தனது மகளை சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்ப உள்ளதாகவும், இதற்காக உதவியவர்களுக்கு நன்றி எனவும், எனது இளவரசிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் எனவும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
My daughter is fighting the stage IV cancer and we are taking her to US for her treatment. A big shout out to @usembislamabad and @USCGLahore for issuing the visa to us within an hour. Special thanks to Mike, Elizabeth, Tanveer & @TalhaAisham Bhai. Keep my princess in your Duas!
— Asif Ali (@AasifAli2018) 22 April 2019
இதனிடையே, இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் டி-20 தொடரின் போதுதான், தனது மகளுக்கு இப்படிப்பட்ட நோய் இருப்பதை ஆசிப் அலி தெரிந்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது மகள் உயிரிழந்த தகவல் கிடைத்தவுடன், இங்கிலாந்தில் இருந்து ஆசிப் அலி உடனடியாக அமெரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார். தனது மகளின் இறுதிக் கிரியைகள் உட்பட அனைத்து சடங்குகளும் நிறைவடையும் வரை அவரை அணியிலிருந்து விடுவிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
27 வயதான ஆசிப் அலி, 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். அதிரடியாக விளையாடும் இவர், உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியிருந்தார்.
இலங்கை வருகிறது பாகிஸ்தான் இளையோர் அணி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த….
இதில் நேற்று (19) நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியிலும் விளையாடிய அவர், 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஆசிப் அலி, இரண்டு அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 142 ஓட்டங்களைக் குவித்தார்
இதுவரை பாகிஸ்தானுக்காக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆசிப் அலி, 31.09 என்ற சராசரியில் 342 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதனிடையே, ஆசிப் அலியின் மகளின் திடீர் மரணத்தை கேள்வியுற்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அந்நாட்டின் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், முன்னாள் வீரர்களான சொஹைப் அக்தர், வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் இன்னாள் வீரர்களான சொஹைப் மலிக், சர்பராஸ் அஹமட், மொஹமட் ஆமிர் உள்ளிட்ட வீரர்கள், ரசிகர்கள் என பலர் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<