பஹ்ரைனில் நடைபெற்று வருகின்ற 4ஆவது ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் இலங்கை அணி இதுவரை 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இதில் நீச்சல் போட்டியில் கலீனா பஸ்நாயக்க மற்றும் ஜனனி விக்ரமசிங்க ஆகிய இருவரும் ஹெட்ரிக் பதக்கம் வென்று அசத்த, சப்ரான் மொஹமட் மற்றும் ஜேசன் ஜயவர்தன ஆகிய இருவரும் தலா 2 பதக்கங்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.
இதன்மூலம் ஆசிய பாரா விளையாட்டு விழா வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டியில் நேற்று (05) நடைபெற்ற இரண்டு நீச்சல் போட்டிகளில் லைசியம் சர்வதேசப் பாடசாலையின் கலீனா பஸ்நாயக்க தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதில் பெண்களுக்கான 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் S6-10 பிரிவில் பங்குகொண்ட கலீனா பஸ்நாயக்க தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் ஒரு நிமிடமும் 12.09 செக்கன்களில் போட்டியை முடித்தார்.
ஆசிய இளையோர் பாரா போட்டிகளில் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்
அத்துடன், S6-10 பிரிவில் பெண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியிலும் பங்குகொண்ட அவர், போட்டியை ஒரு நிமிடமும் 32.86 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுமதியுடன் கலீனா பஸ்நாயக்க, தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், போட்டிகளின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற S6-10 பிரிவு ஆண்களுக்கான 400 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் நவீட் ரஹீம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இம்முறை ஆசிய பாரா விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை வீரர்கள் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்
நேற்றுமுன்தினம் (04) நடைபெற்ற தட்டெறிதல் போட்டியில் F40-41 பிரிவில் கேட்வே சர்வதேசப் பாடசாலையின் ஜேசன் ஜயவர்தன வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டியில் அவர் 13.84 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்தார். முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய இளையோர் பரா போட்டிகளில் 8 இலங்கையர் பங்கேற்பு
இதனிடையே, நீளம் பாய்தல் போட்டியில் குளியாப்பிட்டிய சூரதூத மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜனனி விக்ரமசிங்க, 4.38 மீட்டர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும், அதே பிரிவில் 100 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இதுஇவ்வாறிருக்க, T42-47 பிரிவிலும் பங்குகொண்ட அவர், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, T42-47 பிரிவில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கெகுனகொல்ல அரக்யால முஸ்லிம் கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் சப்ரான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டியை அவர் 13.39 செக்கன்களில் நிறைவு செய்தார்.
அத்துடன், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 5.60 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் அவர் வெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<