தென்கொரியாவில் நடைபெற்றுவரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் புரூனே அணியை 82-16 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.
முதல் போட்டியில் தென்கொரியா அணியை 94-08 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருந்த இலங்கை இளையோர் அணி, நேற்று திங்கட்கிழமை (12) புரூனே அணியை எதிர்கொண்டது.
>> ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு அபார வெற்றி
தங்களுடைய ஆரம்ப போட்டியை போன்று இந்தப் போட்டியிலும் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட இலங்கை அணி 19-06 என முதல் காற்பகுதியை கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது காற்பகுதியில் தங்களுடைய முன்னிலையை மேலும் அதிகரித்துக்கொண்டது.
இரண்டாவது காற்பகுதியில் 22-03 என்ற முன்னிலையை பெற்றுக்கொண்ட இலங்கை அணி முதல் அரைப்பகுதியில் 41-09 என்ற மிகச்சிறந்த முன்னிலையை பெற்றது.
அதனைத்தொடர்ந்து ஆரம்பமாகிய மூன்றாவது மற்றும் நான்காவது காற்பகுதிகளை 20-03 மற்றும் 21-04 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கைப்பற்றிய இலங்கை அணி மொத்தமாக 82-16 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வெற்றிக்கொண்டது.
இந்தப் போட்டியை பொருத்தவரை இலங்கை அணிக்காக 41 முயற்சிகளில் 33 புள்ளிகளை அணித்தலைவி சஜினி ரத்நாயக்க பெற்றுக்கொடுத்ததுடன், டில்மி விஜேநாயக்க 35 முயற்சிகளில் 30 புள்ளிளை பெற்றுக்கொடுத்திருந்தார் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<