தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் ஞாயிற்றுக்கிழமை (04) ஆரம்பமான 20ஆவது 20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இலங்கை வீராங்கனைகளான தருஷி தில்ஹாரா கருணாரத்ன 53.70 செக்கன்களில் குறித்த போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜயேஷி உத்தரா 55.51 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹினா மாலிக் ரெசோனா 53.31 செக்கன்களில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். எனவே, இந்த இரண்டு பதக்கங்களுடன், போட்டியின் முதலாவது நாளில் இலங்கை அணி, பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.
அண்மைக்காலமாக பெண்களுக்கான 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தி வரும் வலள ஏ ரத்நாயக்க கல்லூரி மாணவி தருஷி தில்ஹாரா, சில மாதங்களுக்கு முன்னர் தியகமவில் நடைபெற்ற கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டினார்.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் இலங்கையின் முன்னணி வீராங்கனையும் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரருமான கயன்திகா அபேரட்னவை தருஷி வெற்றிகொண்டமையாகும்.
மறுபுறத்தில் கம்பஹா திருச்சிலுவை கல்லூரி வீராங்கனை ஜயேஷி உத்தரா, அண்மையில் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 400 மீட்டரை 55.76 செக்கன்களில் ஓடிக்கடந்து அதிசிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்திருந்தார்.
- இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி தென் கொரியா பயணம்
- ஆசிய இளையோர் மெய்வல்லுனரில் அயோமாலுக்கு வெண்கலப் பதக்கம்
- நிலுபுல் வெள்ளிப் பதக்கம் வெல்ல; உபாதையுடன் பதக்கம் வென்றார் கசுனி
இதேவேளை, இலங்கையின் மெருன் ஜூலியன் விஜேசிங்க ஆண்களுக்கான 100 மீட்டர் முதல் சுற்றுப்போட்டியை 10.79 செக்கன்களில் ஓடிமுடித்து வெற்றியீட்டினார். ஆனால், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் (10.75 செக்.) தோல்வியடைந்ததால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார்.
இதனிடையே, பெண்களுக்கான 100 மீட்டர் முதல் சுற்று போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட தினாரா தேல பண்டார, 12.04 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக் கெண்டார்.
இது இவ்வாறிருக்க, திங்கட்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீட்டர் முதல் சுற்றில் பங்குகொண்ட இலங்கை வீரர் ஷெஹான் தில்ரங்கவிற்கு 6ஆவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது.
இதேவேளை, போட்டித் தொடரின் 2ஆவது நாளான திங்கட்கிழமை (05) ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டல் முதல் சுற்றில் வினோத் ஆரியவன்ச, ஆண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியில் மலித் யசிரு, பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் தருஷி கருணாரத்ன மற்றும் பெண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் தினாரா தேல பண்டார ஆகியோர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<