ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (22) ஆரம்பமாகிய தகுதிகாண் போட்டிகளில் பங்குகொண்ட நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான ஹிமாஷ ஏஷான், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.11 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கையின் மின்னல் வேக குறுந்தூர ஓட்ட வீரராக முத்திரை பதித்தார்.
இதன் மூலம் ஆசிய மெய்வல்லுனர் போட்டித் தொடருக்காக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்ட அடைவு மட்டத்தினை (10.25 செக்.) பூர்த்தி செய்த ஹிமாஷ, எதிர்வரும் ஏப்ரல் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.
ஆசிய தகுதிகாண் போட்டியில் சண்முகேஸ்வரன் மற்றும் சப்ரினுக்கு வெற்றி
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக வலம்வந்து…
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள், இன்றும் (22), எதிர்வரும் 24 ஆம் திகதியும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இம்முறை போட்டிகளில் தேசிய மட்டத்தில் உள்ள சுமார் 600 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்ததுடன், போட்டிகளின் முதல் நாளான இன்று 12 வகையான மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கன 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று (22) காலை நடைபெற்றது. இதில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஹிமாஷ ஏஷான், போட்டியை 10.11 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஹிமாஷ, போட்டியை 10.12 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தார்.
எனினும், குறித்த போட்டியை நிறைவு செய்த போது காற்றின் வேகம் திசைகாட்டியில் முறையே 3.1 எனவும், 2.6 எனவும் பதிவாகியிருந்தது. இதனால் அவருடைய போட்டித் தூரத்தை இலங்கை சாதனையாக கவனத்தில் கொள்ளவில்லை.
சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விதிமுறைகளின் படி, குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் வீரரொருவர் போட்டியை நிறைவு செய்த பிறகு காற்றின் திசைகாட்டி இரண்டை விட குறைவாக இருக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக இருந்தால் வெற்றி மாத்திரமே வழங்கப்படும் தவிர, அந்த காலப்பெறுமதி ஒருபோதும் போட்டிச் சாதனையாக கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.
இதன்படி, ஹிமாஷ ஏஷானின் காலப்பெறுமதி 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் ஒருவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதி சிறந்த தூரமாக மாத்திரம் கவனத்தில் கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியாவின், அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தியில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில், தெற்காசியாவின் அதிவேக வீரராகத் தெரிவாகிய ஹிமாஷ ஏஷான், குறித்த போட்டியை 10.26 செக்கன்களில் நிறைவு செய்து புதிய இலங்கை சாதனையும் படைத்திருந்தார்.
இந்த நிலையில், குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற மற்றுமொரு நட்சத்திர வீரரான சுரன்ஜய டி சில்வா, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான இரண்டாவது 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இலங்கை சாதனையையும் சமப்படுத்தியிருந்தார்.
2019இன் முதலாது மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இவ்வாரம் ஆரம்பம்
இவ்வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய, ஆசிய மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…
குறித்த போட்டியை 10.27 செக்கன்களில் நிறைவு செய்த அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற மலேஷியா திறந்த மெய்வல்லுனர் போட்டியில் நிகழ்த்திய தனது சொந்த சாதனையை அவர் சமப்படுத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
முப்பாய்ச்சலில் தேசிய சாதனை
ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட இளம் வீரர் கிரேஷன் தனன்ஜய முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று புதிய இலங்கை சாதனை நிலைநாட்டினார். போட்டியில் அவர் 16.71 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தினார்.
இதேநேரம், ஆண்களுக்கான முப்பாய்சசல் போட்டியின் நடப்புச் சம்பியனான சன்ஜய ஜயசிங்க, 3 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். போட்டியில் அவர் 15.66 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.
இதன்படி, சன்ஜய ஜயசிங்க 2017 ஆம் ஆண்டு நிலைநாட்டிய இலங்கை சாதனையை (16.39 மீற்றர்) சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு கிரேஷன் தனன்ஞய முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
Video -ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 65
குசல் பெரேராவின் துணிச்சலான ஆட்டத்தால் தென்னாபிரிக்காவுக்கு எதிராக மகத்தான…
சிறந்த பெறுபேறு
பெண்களுக்கான நீளம் பாய்தலில் முன்னாள் கனிஷ்ட சம்பியனான சாரங்கி சில்வாவுக்கும், தேசிய சம்பியனான அன்ஜனி புலவன்சவுக்கு பலத்த போட்டி நிலவியது.
எனினும், விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6.07 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த அன்ஜனி புலவன்ச முதலிடத்தையும், 0.01 மீற்றர் வித்தியாசத்தில் சாரங்கி சில்வா இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர். குறித்த போட்டியில் 6.06 மீற்றர் தூரத்தை சாரங்கி பாய்ந்தார்.
இதேநேரம் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் பாடசாலை மட்டப் போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவருகின்ற கேட்வே சர்வதேப் பாடசாலை மாணவியான ஷெலிண்டா ஜென்சன், தேசிய வீரர்களையெல்லாம் பின்தள்ளி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் தகுதிச் சுற்றில் பங்குகொண்டு முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட (12.06 செக்.) ஷெலிண்டா, அதன் பிறகு நடைபெற்ற 200 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியிலும் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<