ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான நகர் வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சம்பியன் பட்டத்தை இலங்கை பாடசாலைகள் அணி முதற்தடவையாகப் பெற்றுக்கொண்டது.
ஆசிய பாடசாலைகள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 3ஆவது ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான நகர் வல ஓட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3ஆம் திகதி ஹொங்கொங்கில் நடைபெற்றன.
தடகள மன்னன் போல்ட்டுக்கு உருவச்சிலை; மீண்டும் சேதமாக்கப்பட்ட மெஸ்சியின் உருவச்சிலை
தடகள மன்னன், ஓய்வுபெற்ற உசைன் போல்ட்டுக்கு சொந்த..
இதில் 17 வயதுப்பிரிவில் வலள ஏ ரத்னாயக்க பாடசாலை வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், அப்பாடசாலையைச் சேர்ந்த சாமினி ஹேரத் தங்கப் பதக்கத்தையும், ஜயந்தி கனகரத்ன வெள்ளிப் பதக்கத்தையும், பிரசந்தி ரத்னாயக்க வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன், குறித்த பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய 4 வீராங்கனைகளும் முதல் 4 இடங்களைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
9 நாடுகள் பங்கேற்ற இம்முறை போட்டித் தொடரில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கேகாலை ரன்திவல கல்லூரியைச் சேர்ந்த சமிது மதுஷங்க ரத்னாயக்க வெண்கலப் பதக்கத்தையும், வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த ஹர்ஷ கருணாரத்ன நான்காவது இடத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த சிதும் சன்ஞய 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர். எனினும், ஆண்கள் பிரிவிலும் கலந்துகொண்ட 4 வீரர்களும் முதல் 10 இடங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.
எனினும், குறித்த தொடரில் 17 வயதுப் பிரிவில் பெண்கள் பிரிவில் 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களை முறையே தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பெற்றுக்கொண்டதுடன், ஆண்கள் பிரிவில் சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய அணிகள் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்டன.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் முயற்சியினால் இப்போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்ட இலங்கை அணியில் 12 வீரர்கள் இடம்பெற்றிருந்ததுடன், இதில் 8 வீரர்கள் வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.