பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் இலங்கை வீரர்களுக்கு 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதன் மூலம் ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை அதிகூடிய பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
இம்முறை போட்டித் தொடரில் பெண்களுக்கான நீச்சலில் லைசியம் சர்வதேப் பாடசாலையைச் சேர்ந்த 16 வயதுடைய கலீனா பஸ்நாயக்க, 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தியிருந்தார்.
இதில் S6-10 பிரிவில் போட்டியிட்ட அவர், 100 மீட்டர் சாதாரண நீச்சல் (ஒரு நிமி. 12.09 செக்.), 400 மீட்டர் சாதாரண நீச்சல் (5:25.24) மற்றும் S1-10 50 மீட்டர் சாதாரண நீச்சல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த அவர், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி வகை நீச்சலில் (ஒரு நிமி. 32.86 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதுஇவ்வாறிருக்க, S6-10 பிரிவு ஆண்களுக்கான 400 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியைச் சேர்ந்த நவீட் ரஷீன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இம்முறை ஆசிய பாரா விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை வீரர்கள் ஏழு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்
- ஆசிய இளையோர் பரா போட்டிகளில் 8 இலங்கையர் பங்கேற்பு
- ஆசிய இளையோர் பாரா போட்டிகளில் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்
- ஆசிய இளையோர் பாராவில் சப்ரானுக்கு இரட்டைப் பதக்கம்
F40-41 பிரிவு ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் குண்டெறிதல் ஆகிய போட்டிகளில் கேட்வே சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த 17 வயதுடைய ஜேசன் ஜயவர்தன இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
இதனிடையே, நீளம் பாய்தல் போட்டியில் குளியாப்பிட்டிய சூரதூத மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜனனி விக்ரமசிங்க, 4.38 மீட்டர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும், அதே பிரிவில் 100 மீட்டர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இதுஇவ்வாறிருக்க, T42-47 பிரிவிலும் பங்குகொண்ட அவர், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, T42-47 பிரிவில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கெகுனகொல்ல அரக்யால முஸ்லிம் கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் சப்ரான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியை அவர் 13.39 செக்கன்களில் நிறைவு செய்தார்.
அத்துடன், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 5.60 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் அவர் வெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<