ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முதன்முறையாக நடைபெற்ற எட்டு ஆசிய அணிகளுக்கு இடையிலான, ஆசிய ஆடவருக்கான சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் ஈராக் அணி 3-2 என்ற செட் கணக்கில் சவூதி அரேபிய அணியை வென்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மத்தியக் கிழக்கு நாடுகளாக சவூதி அரேபியா மற்றும் ஈராக் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சவூதி அரேபிய அணி தங்களுடைய அரையிறுதியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததுடன், ஈராக் அணி அரையிறுதியில் இலங்கை அணியை தோல்வியடையச் செய்திருந்தது.
ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு மூன்றாம் இடம்
கொழும்பு சுகததாச உள்ளக…
சவூதி அரேபியா மற்றும் ஈராக் அணிகள் தங்களது முழு பலத்துடன், இறுதிப் போட்டியை எதிர்கொண்டன. திறமையான வீரர்களை கொண்ட சவூதி அரேபிய அணி முதல் செட்டில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஈராக் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்த அந்த அணி, முதல் செட்டின் இரண்டாவது உத்தியோகபூர்வ இடைவேளையில், 16-8 என்ற எட்டு புள்ளிகள் முன்னிலையில் ஆட்டத்தை நகர்த்தியது. தொடர்ந்து வலுவான புள்ளி முன்னிலையைக் கொண்டிருந்த சவூதி அரேபிய அணி 25-14 என 11 புள்ளிகள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்றது.
எனினும், பின்னர் தொடங்கிய இரண்டாவது செட்டில் ஈராக் அணி, புதிய யுத்திகளுடன் ஆட்டத்தின் முன்னிலையை தங்கள் பக்கம் திருப்பியது. இரண்டாவது செட்டின் முதல் இடைவேளையில் 8-5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னேறிய அந்த அணி, இரண்டாவது இடைவேளையில் 16-12 என்ற நான்கு புள்ளிகள் முன்னிலையைப் பெற்றது. இறுதியில் இரணடாவது செட்டை 25-14 என இலகுவாக கைப்பற்றியது.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டிலும் சவூதி அணிக்கு நெருக்கடி கொடுத்த ஈராக் அணி 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை கைப்பற்றி, போட்டியில் 2-1 என முன்னிலையைப் பெற்றது.
இந்த நிலையில் ஈராக் அணியின் வெற்றியை தீர்மானிக்கும் நான்காவது செட் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது. செட்டின் முதல் திட்டமிடல் இடைவேளையில் ஈராக் அணி, 8-6 என முன்னிலைபெற, இரண்டாவது இடைவேளையின் போது, சவூதி அரேபிய அணி 16-14 என இரண்டு புள்ளிகளால் முன்னேற போட்டி சூடுபிடித்தது. இறுதியில் இரண்டு அணிகளும் 26-26 என்ற புள்ளிகளுடன் சமனிலைப்பெற, சவூதி அணி தொடர்ந்து இரண்டு புள்ளிகளை பெற்று, 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி போட்டியை 2-2 என சமப்படுத்தியது.
இதனால் இரண்டு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கிய இறுதிச் செட்டில் போட்டியிட்டன. 15 புள்ளிகளாக நிர்ணயிக்கப்படும் இறுதி செட்டின் முதற்பகுதியில் இரண்டு அணிகளும் சம புள்ளிகளுடன் விளையாடின. எனினும், அடுத்த பாதியில் ஈராக் அணி சிறப்பாக விளையாடி தங்களது முன்னிலையில் 2 புள்ளிகளை உயர்த்திக்கொண்டது. எனினும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய சவூதி அரேபிய அணி 12-12 என புள்ளிகளை சமப்படுத்தியது. எனினும், இறுதிக் கட்டத்தில் 15-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஈராக் அணி இறுதி செட்டை தம்வசப்படுத்தியது.
இதனடிப்படையில் 14-25, 25-14, 25-16, 26-28 மற்றும் 15-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற ஈராக் அணி முதன்முறையாக நடைபெற்ற ஆசிய ஆடவர் சவால் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. இந்த போட்டித்தொடரின் இரண்டாவது இடத்தை சவூதி அரேபிய அணி பிடித்துக்கொண்டதுடன், மூன்றாவது இடத்தை இலங்கை அணியும், நான்காவது இடத்தை பங்களாதேஷ் அணியும் பிடித்துக்கொண்டன.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<