ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளான நேற்று (26) நடைபெற்ற 4×400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 4×400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
இந்தப் போட்டியில் முதல் கோல் பரிமாற்றத்தின் போது பிரபல இந்திய அணிக்கு பலத்த சவாலைக் கொடுத்த போதிலும், இலங்கை அணியால் மூன்றாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. எவ்வறாயினும், போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள், 28.18 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது.
இந்த நிலையில், வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் காலி மஹிந்த கல்லூரியின் ஜத்ய கிருளு, வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையின் ஜித்மா விஜேதுங்க, குருநாகல் மலியதேவ கல்லூரியின் தேமிந்த ராஜபக்ஷ மற்றும் மாத்தறை மத்திய கல்லூரியின் நுஹன்சா கொடித்துவக்கு ஆகியோர் இடம்பெற்றனர்.
4×400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டத்தில் சீனா அணி (3:14.70) தங்கப் பதக்கத்தையும், இந்தியா அணி (3:15.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
- ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கையிலிருந்து 17 பேர்
- ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் நெத்மிகாவுக்கு வெள்ளிப் பதக்கம்
இதனிடையே, நேற்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தின் தகுதிச் சுற்றில் களமிறங்கிய இலங்கை அணி, போட்டியை 40.32 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆவது இடத்தைப் பிடித்ததுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.
20 வயதுகுட்பட்ட ஆண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியினால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாக இது இடம்பிடித்ததுடன், இலங்கை சாதனையாகவும் பதிவானது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையைச் சேர்;ந்த தருஷி அபிஷேகா விக்ரமபாகு 4ஆவது இடத்தைப் பிடித்தார். அவர் குறித்த போட்டியை 2 நிமிடங்கள் 10.52 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மொனராகலை பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தின் நெத்மிகா மதுஷானி ஹேரத், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.78 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 8 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
மேலும், ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அம்பகமுவ மத்திய கல்லூரியின் அயோமால் அகலங்க, போட்டியை 52.84 செக்கன்களில் நிறைவு செய்து 6ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இறுதியாக இவர் கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<