ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் நெத்மிகாவுக்கு வெள்ளிப் பதக்கம்

19th Asian Junior Athletic Championship 2024

200

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (24) ஆரம்பமான 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.  

பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட அவர், 13.01 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும். 

இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுனர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும். 

2014ஆம் ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் விதுஷா லகஷானி முப்பாய்ச்சலில் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு இதே நிகழ்ச்சியில் கிடைத்த 2ஆவது பதக்கம் இதுவாகும். 

மொனராகலை பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நெத்மிகா, கிருஷாந்த குமாரவிடம் பயிற்சி பெற்று வருகிறார். 

அதுமாத்திரமின்றி, இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் தலைவியாக செயல்படுகின்ற நெத்மிகா, இன்று (25) நடைபெறவுள்ள பெண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட அம்பகமுவ மத்திய கல்லூரியின் அயோமால் அகலங்க, 5.296 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 2ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 

அதேபோல, பெண்களுக்கான 800 மீற்றர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையைச் சேர்;ந்த தருஷி அபிஷேகா விக்ரமபாகு 3ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் 

இதேவேளை, ஆண்களுக்;கான 100 மீற்றர் தகுதிச் சுற்றில் பங்குகொண்ட கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மெரோன் விஜேசிங்க, 10.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பிடித்து அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.   

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<