18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் மிகவும் கோலகலமாக நடைபெற்று வருகின்றன. இதில், இலங்கையின் மகளிர் கபடி அணி இன்று (21) இந்திய மகளிர் கபடி அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியினை சந்தித்த காரணத்தினால் பதக்கம் ஒன்றை பெறும் வாய்ப்பினை இழந்திருக்கின்றது.
>> ஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி
மகளிருக்கான கபடி போட்டிகளில் குழு A இல் போட்டியிட்டிருந்த இலங்கை மகளிர் கபடி அணி தாய்லாந்து, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் இடம்பெற்ற ஆட்டங்களில் முன்னதாக மோதியிருந்தது.
இதில் தாய்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை மகளிர் கபடி அணி, 15-41 என்கிற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி மோசமான ஆரம்பத்தினை காட்டியிருந்தாலும், பின்னர் இந்தோனேசிய மகளிர் அணியுடனான போட்டியில் 17-34 என்கிற புள்ளிகள் கணக்கிலும், ஜப்பான் அணியுடனான போட்டியில் 22-17 என்கிற புள்ளிகளில் கணக்கிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து தமது இறுதி குழு நிலை போட்டியில் இந்தியாவுடன் களம் கண்டிருந்தது.
இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி பதக்கம் ஒன்றை பெற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை மகளிர் கபடி அணிக்கு ஆட்டத்தின் முதல் பாதி மிகவும் மோசமாக அமைந்திருந்தது. இலங்கை மகளிர் முதல் பாதியில் வெறும் 4 புள்ளிகளை மாத்திரமே சேர்த்தனர். எனினும், அபாரமாக செயற்பட்ட இந்திய மகளிர் கபடி அணி 23 புள்ளிகளினை முதல் பாதியில் பெற்றிருந்தனர்.
தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் இந்திய மகளிர் அணி சிறந்த முறையில் செயற்பட்டு இலங்கை மகளிருக்கு எதிராக 15 புள்ளிகளை சேர்த்தது. எனினும், இலங்கை மங்கைகள் 8 புள்ளிகளையே இப்பாதியில் பெற்றனர். இதன்படி, 38-12 என்கிற புள்ளிகள் அடிப்படையில் இந்திய மங்கைகள் இலங்கை மங்கைகளை தோற்கடித்தனர்.
தாய்லாந்து அணியிடம் போராடி தோல்வியை தழுவிய இலங்கை
இந்தோனேசியாவின் ஜகர்த்தா – பலேம்பேங்கில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு…
இந்தியாவுடனான தோல்வியோடு தொடரில் பதக்கம் வெல்லத் தவறிய இலங்கை மகளிர் கபடி அணி, இரண்டு வெற்றிகளுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்து கொள்கின்றது.
இதேநேரம், ஆண்களுக்கான பிரிவில் குழு A இல் போட்டியிட்ட இலங்கை ஆடவர் கபடி அணி நடப்புச் சம்பியன் இந்திய அணியுடனான போட்டியில் 44-28 என தோல்வியுற்றாலும் பின்னர் உலகில் நான்காவது நிலையிலுள்ள கபடி அணியான தாய்லாந்தை 46-29 என்கிற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி நல்ல முறையில் செயற்பட்டிருந்தனர்.
இன்று பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை ஆடவர் கபடி அணி போராடியிருந்த போதிலும், கடைசியில் துரதிஷ்டவசமாக 29-25 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
தாம் பங்குபற்றிய மூன்று போட்டிகளிலும் ஒரு வெற்றியினை மட்டுமே பதிவு செய்திருக்கும் இலங்கை ஆடவர் கபடி அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக தவறிய நிலையில் பதக்கம் பெறும் சந்தர்ப்பத்தினையும் இழந்திருக்கின்றது.
இலங்கை ஆடவர் கபடி அணி தமது இறுதி குழுநிலைப் போட்டியில் தென் கொரியாவை வியாழக்கிழமை எதிர் கொள்கின்றது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<