ஆசிய ஒலிம்பிக் பேரவையின் எண்ணக்கருவின் கீழ் இவ்வருட ஆசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்படும் Asian Games Fun Run ஓட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (07) கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறும் என தேசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை ஊக்குவிக்கும் நோக்கிலும், அதனை ஆசிய பிராந்தியத்தில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 700 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றவுள்ள இந்நிகழ்ச்சியின் இறுதியில் இலங்கை விமானப்படையினரின் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இலங்கை இராணுவத்தினரின் அங்கம்பொர நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் கருத்து தெரிவிக்கையில்,
‘ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவரின் எண்ணக்கருவின் படி, ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள பிரதான போட்டி நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக இன்னும் சில போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இலங்கையிலும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை நாங்கள் காட்ட வேண்டும். இது மிகப் பெரிய வாய்ப்பு, நாங்கள் அதை எங்கள் இரண்டு கரங்களினாலும் எடுத்துக்கொள்கிறோம்’ என தெரிவித்தார்.
இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு ஆசிய ஒலிம்பிக் பேரவையினால் ”அனைவருக்கும் ஆசிய விளையாட்டு விழா” (“Asian Games for All”) என்ற எண்ணக்கருவிற்கு அமைய செயல்பட ஆரம்பித்துள்ளது. மேலும், இந்த Asian Games Fun Run நிகழ்ச்சித் திட்டம் அந்த கருத்தை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பகுதியாகும்.
இதன் மூலம் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் என அனைவரையும் ஒன்றிணைக்க ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- 2023இல் இலங்கை பங்கேற்கும் விளையாட்டு நிகழ்வுகள்
- டாக்கா மரதனில் இலங்கையின் மதுமாலிக்கு வெள்ளிப் பதக்கம்
- ஹிமாஷ ஏஷானின் போட்டித் தடை மேலும் நீட்டிப்பு
எனவே, ஆசிய ஒலிம்பிக் பேரவை, ஆசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டினதும் ஒலிம்பிக் குழுக்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ஆசிய கண்டத்தில் உள்ள ஐந்து மண்டலங்களையும் உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு மண்டல போட்டிகள் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெப்ரவரி – மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள Asian Games Fun Run நடைபெறவுள்ள நாடுகள் விபரம்:
மாலைத்தீவுகள் – பெப்ரவரி 04
இலங்கை – பெப்ரவரி 07
பூட்டான் – பெப்ரவரி 07
கத்தார் – பெப்ரவரி 14
நேபாளம் – பெப்ரவரி 17
பாகிஸ்தான் – பெப்ரவரி 20
சிங்கப்பூர் – பெப்ரவரி 24 அல்லது 25
பிலிப்பைன்ஸ் – மார்ச் 02
லாவோஸ் – மார்ச் 04
வியட்நாம் – மார்ச் 02
புரூனே – மார்ச் 12
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <