இந்தோனேஷியாவில் நடைபெற்றுவருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (19) நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் இலங்கையின் ஷர்மல் திஸாநாயக்க மற்றும் அனிக்கா செனவிரத்ன ஆகியோர் வெற்றிகளைப் பதிவுசெய்து இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.
இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, தேசிய சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனினும், இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான காலத்தை அவரால் பதிவுசெய்ய முடியாமல் போனது.
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு விழா அமர்க்களமாக ஆரம்பம்
18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்றைய தினம் இடம்பெற்ற நீச்சல், டென்னிஸ், கபடி, வூஷூ, கடற்கரை கரப்பந்தாட்டம், மல்யுத்தம் ஆகிய போட்டிகளின் முதல் சுற்று மற்றும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கையின் ஷர்மல் திஸாநாயக்க மற்றும் மாலைதீவுகளின் பசீல் அப்துல்லாஹ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தியிருந்த ஷர்மல் திஸாநாயக்க, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதி 32 பேர் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
மற்றுமொரு ஒற்றையர் பிரிவு ஆட்டமொன்றில் லெபனான் வீரர் ஹபீப் ஹாதியுடன் போட்டியிட்ட இலங்கையின் யசித டி சில்வா, 6-2, 6-1 நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.
இதேநேரம், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டமொன்றில் மொங்கோலிய நாட்டு வீராங்கனை ஏரியன் எர்டனை இலங்கையின் அனிக்கா செனவிரத்ன எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இலங்கையின் அனிக்கா செனவிரத்ன வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
இதேநேரம், கலப்புப் பிரிவு முதல் சுற்று ஆட்டமொன்றில் ஓமான் வீரர்களான மொஹமட் தாலிப் சுலைமான், பாதிமா சல்மா சுலைமாவுடன் போட்டியிட்ட இலங்கையின் யசித டி சில்வா, அனிக்கா செனவிரத்ன ஜோடி 6-4, 6-3 நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.
நீச்சலில் இலங்கை வீரர்களுக்கு ஏமாற்றம்
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெத்திவ் அபேசிங்க, ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியை 1:50:97 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ அபேசிங்க புதிய தேசிய சாதனை
இதேபோட்டிப் பிரிவின் 2ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றிய மற்றுமொரு இலங்கை வீரரான கவிந்திர நுகவெல, 1:56:01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 6ஆவது மற்றும் 26ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டதால் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர்.
இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர நீச்சல் வீரரான சிரந்த டி சில்வா, போட்டியை 2:05:90 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், ஒட்டுமொத்த நிலையில் 14ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சிரந்த பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
கடற்கரை கரப்பந்தாட்டத்தில் தோல்வி
கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் அணி கசகஸ்தானை எதிர்கொண்டது.
இப்போட்டியில் ஆரம்பம் முதல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கசகஸ்தானின் செர்கே பொகாடு மற்றும் டிமிட்ரி ஜோடி 23-21, 21-11 நேர் செட் கணக்கில் இலங்கையின் மலிந்த யாபா மற்றும் அசலங்க பிரதீப் குமார ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகினர்.
கபடியிலும் இலங்கைக்கு ஏமாற்றம்
இலங்கை அணியின் மற்றுமொரு பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த கபடி போட்டிகள் இன்று ஆரம்பமாகியது.
ஆண்கள் பிரிவில் இலங்கை அணி இன்று மாலை பிரபல இந்திய அணியை எதிர்கொண்டது. போட்டியின் ஆரம்பம் முதல் இந்திய அணிக்கு பலத்த போட்டியை இலங்கை வீரர்கள் கொடுத்திருந்தனர். எனினும், ஆட்டத்தின் முதல் பாதியில் 27-13 என இந்திய அணி முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இலங்கை அணி அவ்வப்போது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததுடன், ஓரளவு தடுப்பாட்டத்தையும் கையாண்டது. எனினும், அந்த அணியின் ரைடர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதன்படி, ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 44-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதேநேரம், பெண்கள் கபடியில் A பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை பெண்கள் கபடி அணி, தமது முதல் போட்டியில் தாய்லாந்துடன் மோதியது.
ஆடவர் கடற்கரை கரப்பந்தாட்டம்: இலங்கை ஜோடி முதல் போட்டியில் தோல்வி
ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்த தாய்லாந்து பெண்கள் அணி, ஆட்ட நேர முடிவில 41-15 என மிகப் பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மல்யுத்தம், வூஷுவிலும் தோல்வி
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவின் மல்யுத்தம் மற்றும் வூஷூ போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்று மாலை ஆரம்பமாகியது.
இதில் பெண்களுக்கான வூஷூ போட்டியில் 52 கிலோகிராம் எடைப்பிரிவில் கலந்துகொண்ட இலங்கையின் மலீஷா பத்திரகே 2-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் சீனா தாய்பே அணியின் சேன் வெய்டிங்கிடம் தோல்வியைத் தழுவினார்.
இதேநேரம், ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 57 கிலோகிராம் எடைப்பிரிவில் கலந்துகொண்ட டிவோஷன் பெர்ணான்டோ, முதல் போட்டியில் இந்தோனேஷிய வீரர் சபுத்ரா எக்கோ ரோனியிடம் 10-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
சீனாவுக்கு முதல் தங்கம்
18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் வழங்கபட்ட முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட பெருமை சீன நாட்டு வீரர் சன் பியூவான் வசமானது. ஆண்களுக்கான 63 கிலோகிராம் எடைப்பிரிவுக்காக நடைபெற்ற வூஷூ போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியில் இந்தோனேஷிய வீரர் மார்வெலோ எட்கர் வெள்ளிப் பதக்கத்தையும், சீனா தாய்பே வீரர் ட்ஸாய் ட்செமின் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
சீனா முதலிடத்தில்
ஆசிய விளையாட்டு போட்டிகளின் முதலாம் நாளான இன்று பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தை பெற்றுள்ளது. சீனா இதுவரை 7 தங்கம், 5 வெள்ளி 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 16 பதக்கங்களை சுவீகரித்து முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த பட்டியலில், 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் அடங்களாக 12 பதக்கங்களை வென்ற ஜப்பான் இரண்டாவது இடத்தையும், 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்ற கொரியா மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க