ஆசிய கண்டத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலகின் மினி ஒலிம்பிக் என அழைக்கப்படுகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள கலேரா பங் கர்னோ மைதானத்தில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் இன்று (18) மாலை ஆரம்பமாகவுள்ளது.
ஆசிய நாடுகள் இடையே ஒற்றுமை, தோழமையை ஏற்படுத்தும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் இரண்டாவது தடவையாக இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ளது.
முன்னதாக 1951ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இறுதியாக 1962ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்றது.
ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கையிலிருந்து 12 மெய்வல்லுனர்கள் பங்கேற்பு
ஆசியாவின் பலம் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம்முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் 2 நகரங்களில் நடைபெறுவதும் இதுவே முதல் முறையாகும்.
சுமார், 56 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ளதனால் அந்நாட்டு மக்கள் இந்த போட்டிகளை காண ஆவலுடன் காத்துக்கொண்டு இருகின்றனர். ஆசிய விளையாட்டையொட்டி ஜகார்த்தா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமாத்தராவின் தலைநகர் பாலெம்பேங்கிலும் நடைபெறவுள்ளது.
மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் ஜகார்த்தாவில 30 போட்டிகளும், பாலேம்பேங்கில் 10 போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதுடன், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் விளையாட்டு விழாவை கண்டுகளிக்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளை இந்தோனேஷிய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபடுத்தியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வியட்னாம் விலகல்
கடந்த 2012ஆம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வியட்னாமின் ஹனோய் நகரம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக அந்நகரம் போட்டியை நடத்துவதில் இருந்து விலகிக் கொண்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தோனேஷியாவுக்கு வழங்க ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது.
224 மில்லியன் பட்ஜெட்
இந்தோனேஷிய அரசாங்கம் இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக சுமார் 224 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்துள்ளது. இதில் சுமார் 55 வருடங்கள் பழமை வாய்ந்த கலேரா பங் கர்னோ மைதானம் புனர்நீர்மானம் செய்யப்பட்டதுடன், விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்காக 10 ஹெக்டெயர் நிலப்பரப்பில் விளையாட்டு கிராமம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா
பாடசாலைகளுக்கு விடுமுறை
ஆசிய விளையாட்டு விழா நடைபெறுகின்ற காலக்கட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் ஜகார்த்தாவிலுள்ள சுமார் 70 பாடசாலைகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சின்னம்
போட்டிக்கான அதிகாரபூர்வ சின்னங்களாக இந்தோனேஷியாவின் மூன்று விதமான பகுதிகளில் வாழும் பிகின் பிகின் என்ற பறவை, பாவீன் மான் இனத்தைச் சேர்ந்த அட்டுங் மான், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமான இல்கா ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் தடவையாக…
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் ஈ – ஸ்போர்ட்ஸ் மற்றும் கெனோய் போலோ ஆகிய விளையாட்டுக்கள் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஈ – ஸ்போர்டஸ் விளையாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அம்ரித் அல்பிரட் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமான தொடக்க விழா
இன்று ஜகார்த்தாவிலுள்ள கலேரா பங் கர்னோ மைதானத்தில் நடைபெறவுள்ள தொடக்க விழாவுக்காக 120 மீற்றர் நீளத்தைக் கொண்ட இயற்கை மலைகள் சூழ்ந்த பின்புலத்தில் பிரமாண்ட மேடையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தோனேஷியாவிற்கு உரித்தான தாவரங்கள், பூக்கள் என்பன வைக்கப்பட்டுள்ளன. இதை ஜகார்த்தாவின் பிரபல வடிவமைப்பாளர்களில் ஒருவரான பாண்டங்க தயாரித்துள்ளார். அத்துடன் தொடக்க விழாவில் 4000 கலைஞர்களின் பங்குபற்றலுடன் இந்தோனேஷியாவின் பாரம்பரியங்களைப் பிரிதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
அத்துடன், தொடக்க விழாவில் இந்தோனேஷியாவின் பிரபல பாடகர்களான ஆங்குன், ரைசா, துலுஸ், எடோ கோன்டோலோகிட், புத்ரி அயு, பாடின், ஜி.ஏ.சி., காமாசியான், விலா வாலென் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
இலங்கையிலிருந்து 177 வீரர்கள்
ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 30 விளையாட்டு போட்டிகளுக்காக 176 வீர, வீராங்கனைகளும் 78 அதிகாரிகளும் உள்ளடங்கலாக 255 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கையிலிருந்து இவ்வளவு அதிகளவான வீரர்களைக் கொண்ட அணியொன்று பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும். 30 விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக நடைபெறும் இம்முறை போட்டிகளில் 134 வீரர்களும், 43 வீராங்கனைகளும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ளனர்.
இதேநேரம், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல், மெய்வல்லுனர், மற்றும் குத்துச்சண்டை, ஆகிய விளையாட்டுக்களில் இலங்கை அணி பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய கொடியை ஏந்தும் தினூஷா
ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில், இலங்கை தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பு பளுதூக்கல் வீராங்கனை தினூஷா கோமஸ்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட தினூஷா கோமஸ், வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான பளுதூக்கலில் இலங்கைக்காக முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்த வீராங்கனையாகவும் இவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
வட கொரியா, தென் கொரியா இணைவு
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஒருசில விளையாட்டுகளில் ஒருங்கிணைந்த அணியாக முதல் தடவையாக போட்டியிடவுள்ளன. இதன்படி, பெண்களுக்கான கூடைப்பந்தாட்டம், படகோட்டம் ஆகிய போட்டிகளில் இவ்விரு அணிகளும் ஒன்றாக விளையாடவுள்ளன.
முன்னதாக கடந்த வருடம் பியாங்சங்க குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இவ்விரு நாடுகளும் ஒரே அணியாக பெண்கள் ஹொக்கியில் போட்டியிட்டன.
மூன்று நாடுகள்
ஆசிய விளையாட்டு விழாவில் பூட்டான், மாலைதீவுகள் மற்றும் திமோர் – லெண்டி ஆகிய மூன்று நாடுகளும் இதுவரை எந்தவொரு பதக்கத்தையும் வெல்லவில்லை.
நான்கு முறை
ஆசிய விளையாட்டு விழாவை தாய்லாந்து 4 தடவைகள் (1966, 1970, 1978, 1998) ஆகிய ஆண்டுகளில் நடத்தியது. ஜப்பபான் (1990, 2010), இந்தியா (1951, 1982), ஆகியன தலா இரண்டு தடவைகளும், பிலிப்பைன்ஸ் (1954), ஈரான் (1974), கட்டார் (2006) தலா ஒவ்வொரு தடவையும் போட்டிகளை நடாத்தியுள்ளன.
குவைட்டுக்கு அனுமதி
உள்ளுர் விளையாட்டு சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாத காரணத்தினால் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தினால் போட்டித் தடைக்குள்ளாகியிருந்த குவைட் அணிக்கு சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அந்த நாட்டு கொடியின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இந்தத் தடையால் 2016 றியோ ஒலிம்பிக்கின் போது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் கொடியின் கீழ் குவைட் அணி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏழு நாடுகள்
இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் மாத்திரமே இதுவரை நடைபெற்ற 17 ஆசிய விளையாட்டு விழாக்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்றுள்ளன.
ஒன்பது முறை
ஆசிய விளையாட்டு விழா பதக்கப்பட்டியில் சீனா 9 தடவைகள் அதிகளவான தங்கப் பதக்கங்ளை வென்று முதலிடம் பிடித்துள்ளது. ஜப்பான் 8 தடவைகள் அதிகளவான தங்கப் பதக்கங்ளை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
18ஆவது முறை
63 வருடகால வரலாற்றைக் கொண்ட ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி, இதுவரை 10 தங்கம், 11 வெள்ளி மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 46 பதக்கஙக்ளை மாத்திரமே வென்றுள்ளது.
எதிரணிக்கு சவாலாக இருக்கும் அகிலவின் மாய சுழல்
அதிலும், இதுவரை நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்த கௌரவம் மெய்வல்லுனர் விளையாட்டை சாரும்.
இதில் 27 வீரர்கள் 46 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளதுடன், 1951ஆம் ஆண்டு இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் எம். ஏ அக்பர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கடந்த 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை மாத்திரம் வென்ற இலங்கை அணி, இந்த முறை அதிகமான பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஆசியாவில் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் கனவாக இருக்கும் ஒலிம்பிக் கனவுகளை நனவாக்கி கொள்வதற்கு ஆசிய விளையாட்டு போட்டிகள், அத்திவாரமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அத்துடன் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போட்டியாக ஆசிய விளையாட்டு போட்டிகள் அமையவுள்ளதால், வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் சுவாரஷ்யமாக அமையும்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<