ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தெரிவான வீர, வீராங்கனைகள்

241

இந்த ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கவுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (22) கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.

இந்த தகுதிகாண் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகளில் நாடுபூராகவும் இருந்து பல்வேறு வீர, வீராங்கனைகள் திறமையினை வெளிப்படுத்திய போதிலும் சில வீர, வீராங்கனைகளால் மாத்திரமே ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அடைவு மட்டங்களை பூர்த்தி செய்து சர்வதேச ரீதியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடிந்தது.

AFC சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இறுதி நாளில் வெளிக்காட்டப்பட்ட முதலாவது சிறந்த பதிவை U.K. நிலானி ரத்னநாயக்க வெளிப்படுத்தினார். நிலானி பெண்களுக்கான 3,000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியினை 9 நிமிடங்கள் மற்றும் 55.15 செக்கன்களில் நிறைவு செய்ததோடு இதன் மூலம் அவர் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 3,000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியினை அதன் அடைவுமட்ட நேரமான 10 நிமிடங்களுக்குள்  நிறைவு செய்து குறித்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டார்.

இதேநேரம் இலங்கை இராணுவப்படை வீரரான சுமேத ரணசிங்க ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் 79.65 மீற்றர் தூரம் எறிந்து ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினை பெற்றுக்கொண்ட அடுத்த நபராக மாறினார். பொதுநலவாய விளையாட்டு போட்டித்தொடரிலும் இறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ள சுமேத ரணசிங்க ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்கு பதக்கம் ஒன்றினை பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஏற்கனவே இலங்கையை பிரதிநிதித்துவம் செய்த வீராங்கனைகளான நிமாலி லியனாரச்சி மற்றும் கயந்திக்கா அபேரத்ன ஆகியோர் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியினை சிறப்பான நேரப்பதிவுகளுடன் நிறைவு செய்த காரணத்தினால் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டனர். 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சி 2 நிமிடங்கள் 02.65 செக்கன்கள் என்கிற நேரப்பதிவினை காட்ட, கயானி அபேரத்ன 2 நிமிடங்கள் 03.65 செக்கன்கள் என்ற நேரப்பதிவை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இலங்கையின் அதிவேக மனிதராக கருதப்படும் ஹிமாஷ ஏஷான் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை 10.24 செக்கன்கள் என்ற நேரப்பதிவுடன் நிறைவு செய்து ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தனக்கான ஒரு இடத்தினை பெற்றுக் கொண்டார். எனினும், ஹிமாஷ ஏஷான் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில்  தனது சொந்த சாதனையான 10.22 செக்கன்கள் என்ற நேரப்பதிவினை இந்த தகுதிகாண் போட்டிகளில் அடைய தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழக வீரரான தனுஷ்க பியரத்ன நீளம் பாய்தலில் சிறப்பான பதிவை காட்டியதன் மூலம் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபெறும் ஏனைய வீரராக மாறிக்கொண்டார். தனுஷ்க பியரத்ன ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.95 மீற்றர் நீளத்தினை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கெப்டன் சோமசுந்தரம் வெற்றிக்கிண்ணத்திற்கு ஏபி – திருநெல்வேலி அணிகள் பலப்பரீட்சை

இவர்கள் தவிர இலங்கையின் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்று அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வந்த செலின்டா ஜான்சென், செர்மிளா ஜான், சதீபா ஹென்டர்சன், கவிந்து ராஜகுர்ன மற்றும் பசிந்து கொடிகார ஆகியோரும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாளுக்கான போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான பதிவுகளை காட்டிய போதிலும் அவர்களினால் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக எதிர்பார்க்கப்பட்ட அடைவு மட்டங்களை பெறத் தவறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<