ஆசிய றக்பி 7s சாம்பியன்ஸ்: இலங்கை அணி

319
Sri Lanka Crowned Asian Champs despite going down to HK

ஆசிய 20 வயத்திற்குட்பட்ட றக்பி 7s போட்டியின் இரண்டாம் பாகம் ஹொங்காங் இல் முடிவுற்ற நிலையில் இலங்கை 20 வயத்திற்குட்பட்ட றக்பி அணி ஆசிய சாம்பியனாக மகுடம் சூட்டப்பட்டது.

இரண்டாம் பாகத்தில் இலங்கை அணி ஹொங்காங் அணியிடம் தோல்வியற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற பொழுதும், முதலாம் பாகத்தில் வெற்றிபெற்றதன் காரணமாக 26 புள்ளிகளைப் பெற்று ஆசிய சாம்பியனானது. வெற்றியாளர்களுக்கு 14 புள்ளியும், 2ஆம் இடத்தைப் பெற்ற அணிக்கு 12 புள்ளிகளும், 3ஆம் மற்றும் 4ஆம் நிலை அடைந்த அணிகளுக்கு 10 மற்றும் 8 புள்ளிகள் என புள்ளிகள் வழங்கப்பட்டது.

இப்பாகத்தில் வெற்றிபெற்ற பொழுதும் முதலாம் பாகத்தில் 5ஆம் இடத்தைப் பிடித்ததன் காரணமாக ஹொங்காங் அணி 21 புள்ளிகளுடன் 3ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பாகத்தில் 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட தென் கொரியா அணியானது, முதலாம் பாகத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றதன் காரணமாக 22 புள்ளிகளைப் பெற்று 2ஆம் நிலையை பெற்றது.

முதலாம் நாள்

முதலாம் பாகத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் மீது அனைவரதும் பார்வை இருந்தது. முதலாவது போட்டியில் சைனீஸ் தாய்பேய் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 36-12 என வெற்றி பெற்றது.

சைனீஸ் தாய்பேய் அணி முதலாவது ட்ரை வைக்க சிறந்த ஆரம்பத்தை இலங்கை அணியால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கெவின் டிக்சன் முதலாவது ட்ரை வைக்க பதிலுக்கு சைனீஸ் தாய்பேய் அணியும் ட்ரை வைத்து முதல் பாதியில் 12-07 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் நிலையாக விளையாடிய இலங்கை அணி மேலும் 5 ட்ரைகளை வைத்தது. இதன் மூலம் 36-12 என வெற்றிபெற்றது.

இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி

இலங்கை அணியின் தலைவர் கெவின் டிக்சன் காயம் காரணமாக விளையாடாததால் தேவர் இன்றி களமிறங்கியது இலங்கை அணி. முதல் பாதியில் புத்திம 2 ட்ரைகளும் ரீசா ஒரு ட்ரையும் வைக்க இலங்கை அணி முதல் பாதியில் 21-00 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இலங்கை அணியின் தாரிக் சாலி மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட 6 வீரர்களுடன் இலங்கை அணி விளையாடிய பொழுதும் 40-05 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை மற்றும் மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டி

இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று நம்பிக்கையுடன் களமிறங்கிய இலங்கை அணி மலேசிய அணியை 40-05 என்று தோற்கடித்து குழுவில் முதலாவது இடத்தைப் பிடித்தது. ஒமல்க மற்றும் ரீசாவின் அபார விளையாட்டால் இலங்கை அணிக்கு இந்தப் போட்டி கடினமாக அமையவில்லை. முதல் பாதியில் 21-00 என முன்னிலை வகித்த இலங்கை அணி முழு நேர முடிவின் பொழுது 40-05 என்று வெற்றிபெற்றது.


இரண்டாம் நாள்

குழுவில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை அணி அரை இறுதிப் போட்டியில் தென் கொரியாவுடன் மோதியது. முதலாவது பாகத்தில் இலங்கை அணியிடம் இறுதி போட்டியில் தோல்வியுற்ற நிலையில் தென் கொரியா இப்போட்டியில் வெற்றிபெறும் எண்ணத்தோடு களம் இறங்கியது.

இலங்கை மற்றும் தென் கொரியா அணிகளுக்கிடையிலான போட்டி

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று சுவாரஸ்யமாக இலங்கை அணியின் வசம் முடிந்தது.

முதலாவது தென் கொரியா ட்ரை வைக்க தொடர்ந்து இலங்கை ட்ரை வைக்க, விட்டுக்கொடுக்காத தென் கொரியா மேலும் ஒரு ட்ரை வைத்து முதலாம் பாதியில் 12-05 என முன்னிலை கொண்டது. இரண்டாம் பாதியில் திறமையை வெளிக்காட்டிய இலங்கை அணி தென் கொரியா அணியை ட்ரை வைக்க விடாமல் தடுத்து மேலும் இரு ட்ரை வைத்து போட்டியை 19-12 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இலங்கை அணி மற்றும் ஹாங் கொங் அணிகளுக்கிடையிலான போட்டி

எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாமல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இறுதிப் போட்டியில் ஹொங்காங் அணியிடம் 36-10 என தோல்வியுற்றது.

ஆரம்பம் முதலே தனது வழமையான ஆட்டத்தை ஆடத் தவறிய இலங்கை அணி முதல் பாதியில் எந்த ஒரு புள்ளியையும் பெறாத நிலையில் 19 -00 என பின்னிலையில் காணப்பட்டது. இரண்டாம் பாதியில் இலங்கை அணி முயற்சி செய்த போதும் இலங்கை அணியால் 3 ட்ரை மட்டுமே வைக்க முடிந்தது. எனவே இறுதிப் போட்டியில் 36-10 என இலங்கை தோல்வியுற்றது.

இந்த இறுதிப் போட்டியில் தோற்ற பொழுதும் முதலாம் பாகத்தில் வெற்றிபெற்றதன் காரணமாக இலங்கை அணி மொத்தமாக 26 புள்ளிகள் பெற்று ஆசிய சாம்பியனாக மகுடம் சூட்டப்பட்டது.