20 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி போட்டிகளில் முதல் நாளான இன்று (4) இலங்கை அணி தாம் பங்குபற்றிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்ற வருடம் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியானது இவ்வருடமும் கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்பில் ஹொங் கொங் பயணமானது. பாடசாலை மற்றும் கழக வீரர்களை கொண்ட இலங்கை அணியானது இன்றைய தினம் 3 போட்டிகளில் கலந்து கொண்டது.
ஆசிய செவன்ஸ் சம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இலங்கை ரக்பி அணி?
இலங்கை எதிர் பிலிப்பைன்ஸ்
தனது முதலாவது போட்டியில் இலங்கை இளம் அணியானது பிலிப்பைன்ஸ் அணியை சந்தித்தது. முதல் போட்டியின் முதல் சில நிமிடங்களிலேயே இலங்கை அணி சிறிது தடுமாறினாலும், திறமையாக மீண்டு வந்தது. அவ்வகையில் இலங்கை அணியே முதலில் புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
பிலிப்பைன்ஸ் அணியினரின் உதையினை பெற்றுக்கொண்ட வெஸ்லி கல்லூரியின் அவிஷ்க லீ சிறப்பாக செயற்பட்டு இலங்கை அணி சார்பாக முதலாவது ட்ரையினை வைத்தார். சமோத் பெர்னாண்டோ கொன்வெர்சனை சிறப்பாக உதைய இலங்கை அணி 7-0 என முன்னிலை பெற்றது. (இலங்கை 07-00 பிலிப்பைன்ஸ்)
அடுத்த நிமிடமே இலங்கை அணிக்கு புள்ளிகளை பெற மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், சிறு தவறுகளினால் அவ்வாய்ப்பை தவறவிட்டது. எனினும் எதிரணியின் ஸ்க்ரம் இல் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட கடற்படை அணியின் லஹிரு ஹேரத் தனது பலத்தை பயன்படுத்தி எதிரணி வீரர்களை தாண்டி சென்று இலங்கை அணி சார்பாக ட்ரை வைத்தார். இம்முறை அவிஷ்க லீ கொன்வெர்சனை தவறவிட்டார். (இலங்கை 12-00 பிலிப்பைன்ஸ்)
முதல் பாதி: இலங்கை 12-00 பிலிப்பைன்ஸ்
இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தும் எதிர்பார்ப்பில் இலங்கை அணி களம் இறங்கினாலும், இலங்கை அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொள்ள 3 நிமிடங்கள் தேவைப்பட்டது. மீண்டும் ஒரு முறை லஹிரு ஹேரத் தமது முன்னைய ட்ரையை போலவே மற்றுமொரு ட்ரை வைத்தார். சமோத் பெர்னாண்டோ கொன்வெர்சனை தவறவிட்டார். ((இலங்கை 17-00 பிலிப்பைன்ஸ்))
இலங்கை அணி மாற்று வீரர்களை களத்தில் இறக்கியது. அந்தோனியார் கல்லூரியின் தினுக் அமரசிங்க இலங்கை அணி சார்பாக இறுதி ட்ரை வைத்தார். தமது பலத்தினால் எதிரணி வீரர்களைத் தாண்டி சென்ற அமரசிங்க கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். பெர்னாண்டோ கொன்வெர்சனை பூர்த்தி செய்தார்.
முழு நேரம்: இலங்கை 24 – 00 பிலிப்பைன்ஸ்
இலங்கை எதிர் சீனா
இலங்கை அணியானது தமது இரண்டாவது போட்டியில் சீன அணியை சந்தித்தது. இம்முறை இலங்கை அணியானது இலகுவாக சீன அணியை 43-07 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.
முதல் போட்டியில் தாம் மேற்கொண்ட தவறுகளை திருத்திக்கொண்டு இலங்கை அணியானது இம்முறை சிறந்த அணியாக களத்தில் குதித்தது. முன்னைய போட்டியைப் போன்று அல்லாது இப்போட்டியில் இலங்கை மிகவும் குறைவான பெனால்டிகளை வழங்கியதோடு, பந்தை சிறப்பாக கையாண்டது.
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மற்றும் தலைவருமான நவீன் ஹெநகங்கணமகே, இப்போட்டியில் முதலாவது மற்றும் இரண்டாவது ட்ரையினை வைத்து இலங்கை அணியை ஆரம்பத்திலேயே முன்னிலைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து பலம் மிக்க லஹிரு ஹேரத் ட்ரை வைத்தார். சமோத் பெர்னாண்டோ அனைத்து கொன்வெர்சன்களையும் சிறப்பாக உதைத்து 6 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
முதல் பாதி: இலங்கை 21 – 07 சீனா
இரண்டாம் பாதியிலும் தலைவைர் நவீன் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். உலகிற்கு தனது வேகத்தையும் பலத்தையும் காட்டிய நவீன், எதிரணி வீரர்களை தகர்த்தி ட்ரை கோட்டினை கடந்தார். இம்முறை சுபுன் கொன்வெர்சனை பூர்த்தி செய்தார்.( இலங்கை 28-07 சீனா)
தொடர்ந்து இலங்கை அணி சார்பாக சமோத் பெர்னாண்டோ, சந்தேஷ் ஜயவிக்ரம மற்றும் ரணிது பத்மசேகர ட்ரை வைக்க இலங்கை அணி 43 எனும் புள்ளியை எட்டியது. சீன அணியினால் ஒரு ட்ரை மட்டுமே வைக்க முடிந்தது.
முழு நேரம்: இலங்கை 43 – 07 சீனா
இலங்கை எதிர் மலேசியா
இலங்கை இன்றைய தினத்தில் தனது இறுதிப் போட்டியில் மலேசிய அணியை சந்தித்தது. பலம் மிக்க மலேசிய அணியை இலங்கை அணியானது 26-05 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்ற பொழுதிலும், போட்டியின் வலுவான அணியான ஹொங்கொங் அணியை வெல்ல வேண்டுமாயின் இலங்கை அணி இதைவிட சிறப்பாக விளையாட வேண்டும்.
இலங்கை அணியானது தமது தலைவர் நவீன் மூலமாக முதலாவது ட்ரையினை பெற்றுக்கொண்டது. போட்டி ஆரம்பித்து 80 செக்கன்கள் சென்ற நிலையில், இலங்கை அணியின் பகுதியினுள் பந்தை பெற்றுக்கொண்ட நவீன், சிறப்பாக ஓடிச் சென்று முதலாவது ட்ரையினை வைத்தார். சுபுன் டில்ஷான் கொன்வெர்சனை தவறவிடவில்லை. (இலங்கை 07-00 மலேசியா)
தனது திறமையான ஆட்டத்தை தக்கவைத்துக்கொண்ட இலங்கை அணியானது முதலாவது பாதியில் மேலும் இரண்டு ட்ரைகள் வைத்து அசத்தியது. சந்தேஷ் ஜயவிக்ரம மற்றும் அவிஷ்க லீ இலங்கை அணி சார்பாக இரண்டு ட்ரையையும் வைத்தனர். சுபுன் ஒரு கொன்வெர்சனை தவறவிட, முதல் பாதி முடிவில் இலங்கை அணியானது 19 புள்ளிகள் முன்னிலையில் வலுவான நிலையில் காணப்பட்டது.
முதல் பாதி: இலங்கை 19 – 00 மலேசியா
இரண்டாம் பாதியில் மலேசிய அணி ஆதிக்கம் செலுத்தியபோதும் இலங்கை வீரர்கள் சிறப்பாக தடுத்து தமது வெற்றியை உறுதி செய்தனர். இலங்கை அணிக்கும் புள்ளிகள் பெறுவதற்கு ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் கிடைத்த பொழுதும், முதல் முறை நொக் ஒன் செய்ததாலும், இரண்டாம் முறை ட்ரை கோட்டினுள் பந்தை கீழே வைக்க முடியாமல் சென்றதாலும் அவ்வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.
மலேசிய வீரரான அய்மான் தனது திறமையை வெளிக்காட்டி இலங்கை வீரர்களை தாண்டி சென்று மலேசிய அணி சார்பாக முதலாவது ட்ரையை வைத்தார். (இலங்கை 19-05 மலேசியா)
தொடர்ந்து இரண்டு அணிகளும் சிறிது மோசமான விளையாட்டை வெளிப்படுத்தின. பந்து பரிமாறல்களை சரிவர நிறைவேற்றாமலும், தமது நிலைகளை பேணாமல் இரண்டு அணிகளும் விளையாடியமையால், புள்ளிகளைப் பெற இரண்டு அணிகளும் தவறின.
எனினும் இறுதி நிமிடத்தில் தமது திட்டத்தை சரிவர நிறைவேற்றிய இலங்கை அணியானது, தீக்ஷண தசநாயக மூலமாக ட்ரை வைத்தது. தீக்ஷண கம்பத்தின் அடியே ட்ரை வைக்க, சுபுண் இலகுவாக கொன்வெர்சனை உதைந்ததுடன் போட்டி முடிவுக்கு வந்தது.
முழு நேரம்: இலங்கை 26-05 மலேசியா
இலங்கை அணி முதல் நாளில் தாம் போட்டியிட்ட அனைத்து போட்டியிலும் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரிக்கும் எனும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. இரண்டாம் நாளில் இலங்கை அணி சைனீஸ் தாய்பேய் அணியை சந்திக்கவுள்ளது.