அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய செவன்ஸ் ரக்பி போட்டிகளில் 3 ஆம் பாகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஹொங் கொங் அணி வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை, இலங்கை அணிக்கு இத்தொடரில் 4ஆம் இடமே கிடைத்துள்ளது.
மகளிர் போட்டிகளில் சீன அணியை 17-05 என அபாரமாக வென்ற ஜப்பான் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. இலங்கை மகளிர் அணியால் 6 ஆவது இடத்தையே பெற முடிந்தது.
ஆண்கள் பிரிவு
அரையிறுதி
இலங்கை அணி பலம் மிக்க ஹொங் கொங் அணியை அரையிறுதியில் சந்தித்தது. முதலாம் நாளன்று சீன அணியிடம் தோல்வியுற்ற நிலையில் அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி, இதற்கு முன்னர் ஹொங் கொங் அணியுடன் நடைபெற்ற போட்டிகளில் தோல்வியுற்றமையினால் இப்போட்டியை மிகவும் சவால் மிக்க போட்டியாகவே எதிர்கொண்டது. இந்த முறை தாய் மண்ணில் ஹொங் கொங் அணியை வென்று இறுதி போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த போட்டியில் 19-07 என்ற புள்ளிகள் கணக்கில் மீண்டும் இலங்கை அணி தோல்வியுற்றது.
இலங்கை அணியே போட்டியின் முதல் ட்ரையை வைத்தது. தரிந்த ரத்வத்த மற்றும் சுதர்ஷன முதுதந்திரியின் உதவியுடன் தனுஷ் தயான் முதல் ட்ரை வைத்து இலங்கை அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். பின்னர் ஹொங் கொங் அணியும் ட்ரை வைக்க முதல் பாதி 07-07 என சமநிலையில் முடிந்தது.
முதல் பாதி: ஹொங் கொங் 07 – 07 இலங்கை
இரண்டாம் பாதியில் இரு அணிகளிலும் இருந்து தலா ஒரு வீரர் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போட்டியின் இறுதி நிமிடங்களை இரு அணிகளும் தலா 6 வீரர்களை மட்டும் கொண்டு ட்ரைக்காக முயற்சிகளை செய்தன.
எனினும் தனது பலத்தை மீண்டும் நிரூபித்த ஹொங் கொங் அணி தொடர்ந்து இரு ட்ரைகளை வைத்து முன்னிலை அடைந்தது. இலங்கை அணி வெற்றி பெறுவதற்காக இறுதி நிமிடம் வரை விட்டுக்கொடுக்காமல் போராடினாலும் ஹொங் கொங் அணி அதற்கு வழி விடவில்லை. எனினும் இந்தப் போட்டி மிகவும் போராட்டம் மிக்கதாக அமைந்தது.
முழு நேரம்: ஹொங் கொங் 19 – 07 இலங்கை
அதேபோன்று, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தென் கொரிய அணி 19-14 என சீன அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
3ஆம் இடத்திற்கான போட்டி
அரையிறுதி போட்டியில் ஹொங் கொங் அணியிடம் இலங்கை அணி தோல்வியுற்றமையால் 3 ஆம் இடத்திற்கான போட்டியில் சீன அணியை மீண்டும் ஒரு முறை இலங்கை அணி சந்தித்தது. போட்டியின் முதலாம் நாளான சனிக்கிழமை, குழு மட்ட போட்டியில் சீன அணியிடம் இலங்கை அணி தோல்வியுற்ற நிலையில் இப்போட்டியில் மீண்டும் மோதியது.
இலங்கை அணி போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. போட்டி நிறைவடைய 3 நிமிடங்கள் எஞ்சி இருந்த நிலையில் இலங்கை அணி 21-07 என்று முன்னிலையில் காணப்பட்டது. எனினும் இறுதி 3 நிமிடங்களில் சிறப்பாக விளையாடிய சீன அணி, 3 நிமிடங்களில் 15 புள்ளிகளை பெற்று இலங்கை அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இறுதியில் 22-21 என்று போட்டியில் வெற்றி கொண்டு சீன அணி 3ஆம் இடத்தை பிடித்துக்கொண்டது.
கப் இறுதிப் போட்டியில் தென் கொரிய அணியுடன் ஹொங் கொங் அணி மோதியது. போட்டியின் இறுதி நேரத்தில் இரு அணிகளும் 19 புள்ளிகளை பெற்று சமநிலையில் காணப்பட்ட பொழுதும் இறுதி நேரத்தில் ட்ரை மூலம் 5 புள்ளிகளை பெற்ற ஹொங் கொங் அணி 24-19 என்று தென் கொரிய அணியை வென்று 3ஆம் பாகத்தின் கிண்ணத்தை சுவீகரித்தது.
மேலும், நடைப்பெற்ற அனைத்து பாகங்களிலும் வெற்றியீட்டியதன் மூலமாக தர வரிசையில் 1 ஆம் இடத்தை ஹொங் கொங் அணி பிடித்தது. இலங்கை அணி தர வரிசையில் 2ஆம் இடத்தை பிடித்துக்கொண்டதுடன், தென் கொரியா அணி 3ஆம் இடத்தை பிடித்துக்கொண்டது.
மொத்த தர வரிசையில் 2ஆம் இடத்தை பிடித்ததன் மூலம் ஹொங் கொங் அணியுடன் இலங்கை அணியும் அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.
மலேசிய அணி ஜப்பான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்து பிளேட் கிண்ணத்தை கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய மலேசிய அணி 19-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.
மகளிர் போட்டிகள்
குழு மட்ட போட்டியில் தாய்லாந்து அணியிடம் தோல்வியுற்ற போதிலும் ஜப்பான் மகளிர் அணி சீன அணியை இறுதிப் போட்டியில் 17-05 என வென்று கிண்ணத்தை சுவீகரித்தது. அரையிறுதி போட்டியில் ஹொங் கொங் அணியை 14-00 என ஜப்பான் அணி வெற்றி கொண்டது. 3ஆம் இடத்திற்கான போட்டியில் அரையிறுதியில் சீன அணியிடம் தோல்வியுற்ற தாய்லாந்து அணி, ஹொங் கொங் அணியுடன் மோதியது. இப்போட்டியில் தாய்லாந்து அணி 19-05 என வெற்றிப்பெற்று 3ஆம் இடத்தை பெற்றது.
பிளேட் கிண்ண இறுதி போட்டிக்கு தெரிவாகிய இலங்கை மகளிர் அணி, இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதியது. போட்டியின் முதல் பாதி முடிவின் பொழுது 07-07 என இரு அணிகளும் சமநிலையில் காணப்பட்ட பொழுதும் போட்டியின் இறுதி நேரத்தில் ட்ரை வைத்ததன் மூலம் சிங்கப்பூர் அணி 12-07 என வெற்றிப்பெற்று பிளேட் கிண்ணத்தை சுவீகரித்தது. இலங்கை மகளிர் அணி 3ஆம் பாகம் மற்றும் மொத்த போட்டிகளிலும் 6 ஆம் இடத்தை பிடித்துக்கொண்டது.
இறுதிக் கட்ட சுற்றுகளின் முடிவுகள்
# | Time | Gender | Stage | Team 1 | Score 1 | Score 2 | Team 2 |
---|---|---|---|---|---|---|---|
12:45 | Women | SF-P1 | Sri Lanka | 32 | 00 | India | |
13:07 | Women | SF-P2 | Singapore | 12 | 07 | South Korea | |
13:29 | Women | SF-C1 | Hong Kong | 00 | 14 | Japan | |
13:51 | Women | SF-C2 | China | 29 | 00 | Thailand | |
14:13 | Men | SF-P1 | Japan | 26 | 05 | Chinese Taipei | |
14:35 | Men | SF-P2 | Malaysia | 24 | 12 | Singapore | |
15:05 | Men | SF-C1 | Hong Kong | 19 | 07 | Sri Lanka | |
15:27 | Men | SF-C2 | South Korea | 19 | 14 | China | |
15:49 | Women | 7th / 8th | India | 05 | 31 | South Korea | |
16:11 | Women | Plate Final | Sri Lanka | 07 | 12 | Singapore | |
16:33 | Women | 3rd / 4th | Hong Kong | 05 | 19 | Thailand | |
16:55 | Men | 7th / 8th | Chinese Taipei | 22 | 17 | Singapore | |
17:17 | Men | Plate Final | Japan | 14 | 19 | Malaysia | |
17:39 | Men | 3rd / 4th | Sri Lanka | 21 | 22 | China | |
18:01 | Women | Cup Final | Japan | 17 | 05 | China | |
18:23 | Men | Cup Final | Hong Kong | 24 | 19 | South Korea |