ஹொங்கொங்கில் நடைபெறும் ஆசிய அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி போட்டிகளில், முதலாம் நாளில் இறுதிப் போட்டியில் தென் கொரியா அணியுடனான போட்டியில் 24-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியுற்றதன் மூலம், இலங்கை அணியானது குழுவில் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இலங்கை எதிர் ஜப்பான்
இலங்கை அணியானது தனது முதலாவது போட்டியில் பலம் மிக்க ஜப்பான் அணியுடன் மோதியது. திறமை மிக்க இலங்கை அணியால், பலம் மிக்க ஜப்பான் அணியை வெல்ல முடியவில்லை. இறுதியில் 33-05 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.
இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடியதை ஆராம்பம் முதலே காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அணியானது தரிந்த ரத்வத்த மூலமாக முதலாவது ட்ரையை வைத்தது. எனினும் அந்த ட்ரையை மட்டுமே இலங்கை அணியினால் முழு போட்டியிலும் வைக்க கூடியதாக இருந்தது.
தொடர்ந்து ஜப்பான் அணியானது சிறப்பான 5 கட்டங்களின் பின்னர், சியோசிப்பா லிசாலா மூலமாக முதலாவது ட்ரை வைத்து அசத்தியது. தொடர்ந்து ஜப்பான் அணியானது இன்னொரு ட்ரை வைக்க, இலங்கை அணியானது முதலாம் பாதி முடிவின் போது 7 புள்ளிகள் பின்னடைவில் காணப்பட்டது.
முதல் பாதி: ஜப்பான் 12 – 05 இலங்கை
இரண்டாம் பாதி முழுதும் ஜப்பான் அணியின் ஆதிக்கமே காணப்பட்டது. பலம் மிக்க ஜப்பான் அணியானது இலங்கை அணியின் தடைகளை இலகுவாக முறியடித்தது.
இரண்டாம் பாதியில் வெறும் 30 செக்கன்கள் கடந்த நிலையில், ஜப்பான் அணியின் நகானோ ட்ரை வைத்து இலங்கை அணியின் நம்பிக்கையை உடைத்தார். இலங்கையின் பலவீனமான கிக் ஓப்பை பயன்படுத்திக்கொண்ட ஜப்பான் அணியானது மீண்டும் ஒரு ட்ரை வைத்து வெற்றியை உறுதி செய்துக்கொண்டது.
ஹிரந்த பெரேராவின் பலவீனமான தடுப்பினால், டாவோ மெக்ஸ்வெல் இறுதியாக ட்ரை கோட்டினை கடந்து சென்றார் . இறுதியாக இலங்கை அணி ஜப்பானிடம் தோல்வியைத் தழுவியது.
முழு நேரம்: ஜப்பான் 33(5T 4C ) – 05 (1T) இலங்கை
இலங்கை எதிர் சைனீஸ் தாய்பே
இலங்கை அணியானது தனது இரண்டாவது போட்டியில் சைனீஸ் தாய்பே அணியை இலகுவாக 52-07 என்ற சாதனை புள்ளிகளுடன் வெற்றிபெற்றது.
முற்றிலும் வித்தியாசமான திட்டத்துடன் கலந்துகொண்டது இலங்கை அணியானது, ஆரம்பம் முதலே தமது வேகமான ஆட்டத்தை வெளிக்காட்டியது. அதன் மூலமாக 10ஆவது செக்கனிலேயே தனுஷ் தயான் இலங்கை அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்து அசத்தினார்.
16 வயதிற்குட்பட்ட பாடசாலை ரக்பி லீக் தொடர் ஒத்திவைப்பு
இலங்கை அணிக்கு இரண்டாவது ட்ரை வைக்க வெகு நேரம் செல்லவில்லை. தரிந்த ரத்வத்த 2ஆவது ட்ரை வைத்து இலங்கை அணிக்கு மேலும் முன்னிலை வழங்கினார்.
சைனீஸ் தாய்பே அணியானது சில சிறப்பான பந்துப் பரிமாறல்களின் பின்னர் தனது முதலாவது ட்ரையை வைத்தது. எனினும் இலங்கை அணியானது தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து முதலாம் பாதி நிறைவின் போது 19 புள்ளிகள் முன்னிலையில் காணப்பட்டது.
முதல் பாதி: இலங்கை 26 – 07 சைனீஸ் தாய்பே
இரண்டாம் பாதியில் மழையின் குறுக்கீடு காணப்பட்டாலும், இலங்கை அணி ட்ரை வைப்பதை தடுக்க முடியவில்லை. தனது தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டிய கவிந்து பெரேரா இரண்டாம் பாதியில் முதலாவது ட்ரையை வைத்தார்.
இளம் வீரரான நவீன் ஹெனகண்கனமகே இப்போட்டித் தொடரின் முதலாவது ட்ரையை வைத்தார். சைனீஸ் தாய்பே அணி தவறவிட்ட பந்தை பெற்றுக்கொண்டு நவீன் இலகுவாக ட்ரை வைத்தார்.
தொடர்ந்து கவிந்து பெரேரா இரண்டாவது ட்ரையை வைக்க, நவீனும் தனது இரண்டாவது ட்ரையை வைத்ததன் மூலம் இலங்கை அணி பலமான நிலையை அடைந்தது. இறுதியில் 50 புள்ளிகளுக்கு மேல் குவித்து சாதனை வெற்றியை இலங்கை அணி பெற்றுக்கொண்டது
முழு நேரம்: இலங்கை 52 – 07 சைனீஸ் தாய்பே
இலங்கை எதிர் தென் கொரியா
தென் கொரியா அணியுடனான போட்டியானது, குழுவில் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொள்வதற்கான முக்கியமான போட்டியாக அமைந்தது.
இலங்கை அணியே முதலாவது புள்ளிகள் பெற்று அசத்தியது. தலைவர் சுதர்ஷன முததந்திரி தனது வேகத்தையும் திறமையையும் பயன்படுத்தி இலங்கை அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்தார். தொடர்ந்து தென் கொரிய அணியின் யியோன்சிக் தென் கோரிய அணி சார்பாக ட்ரை வைத்து புள்ளிகளை சமப்படுத்தினார்.
தொடர்ந்து இரண்டு அணிகளும் எதிரணியை தகர்த்து ட்ரை வைக்க முயற்சி செய்தாலும் அவ்வணிகளுக்கு முடியாமல் போனது. எனினும் முதல் பாதி நிறைவடைய முன்னர், தரிந்த ரத்வத்த ஊடாக பந்தை பெற்றுக்கொண்ட ஸ்க்ரம் ஹாப் வீரர் சுதம் சூரியாரச்சி இலங்கை அணிக்கு ட்ரை வைத்து முதல் பாதியில் இலங்கை அணியை முன்னிலைக்கு அழைத்து சென்றார்.
முதல் பாதி: இலங்கை 14 – 07 தென்கொரியா
இரண்டாம் பாதியில் இலங்கை அணியானது தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தென்கொரிய அணியானது தமது அனைத்து பலத்தையும் பயன்படுத்தி சிறப்பாக விளையாடியது.
தென் கொரிய அணியின் யியோன்சிக் மீண்டும் ஒரு முறை ட்ரை வைத்து அசத்தினார். தொடர்ந்து இலங்கை அணி செய்த தவறுகளை பயன்படுத்தி பந்தை பெற்றுக்கொண்ட தென் கொரிய அணியானது 3ஆவது ட்ரை வைத்து போட்டியில் முதன் முதலாக முன்னிலை பெற்றது.
நட்சத்திர வீரர் யியோன்சிக் 3ஆவது முறையாக ட்ரை கோட்டை கடந்து தென் கொரிய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இலங்கை அணியானது போட்டியின் இரண்டாவது நாளில் சீன அணியை காலிறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.
முழு நேரம்: இலங்கை 14(2T 2C ) – 24 (4T 2C) தென் கொரியா
இப்போட்டி தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் இலங்கை அணி உலக கோப்பையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளலாம்.