இலங்கையில் நடைபெற்ற அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டிகளின், 3ஆம் கட்ட போட்டிகளில், இலங்கை அணி தென்கொரிய அணியை 22-05 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றதன் மூலம் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது.

காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை வென்ற பொழுதும் , அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியிடம் தோல்வியுற்றதன் காரணமாக இலங்கை அணி 3ஆம் இடத்திற்கான போட்டியில் தென் கொரிய அணியுடன் மோதியது. ஏற்கனவே தென் கொரிய அணியிடம் குழு மட்ட போட்டிகளில் தோல்வியுற்ற இலங்கை அணி இம்முறை வெற்றி பெறும் நோக்குடன் களம் இறங்கியது. நடைபெற்று முடிந்த ஆசிய ரக்பி போட்டிகளின் 3 கட்டங்களிலும் இலங்கை அணி 3ஆம் இட  போட்டிக்கு தகுதி பெற்றமை இதுவே முதன் முறையாகும்.

காலிறுதிப் போட்டி – இலங்கை எதிர் மலேசியா

இலங்கை அணியானது காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை 22-05 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று , கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் நாளில் தென்கொரிய அணியிடம் மட்டும் தோல்வியுற்ற இலங்கை அணியானது, காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை சந்தித்தது. கடந்த கட்ட போட்டிகளில் காலிறுதியில் வெளியேறிய இலங்கை அணிக்கு, இப்போட்டி மிகவும் முக்கியமான ஒரு போட்டியாக அமைந்தது.   

இலங்கை அணி கடந்த போட்டிகளில் மலேசிய அணியை இலகுவாக வென்றாலும், இப்போட்டியில் முதலாவது புள்ளியை மலேசிய அணியே பெற்றுக்கொண்டது. மலேசிய அணியின் சேறு நகாசிமா முதல் ட்ரை வைத்தார். விட்டுக்கொடுக்காத இலங்கை அணியும் ட்ரை மூலம் பதிலடி கொடுத்தது. ஜேசன் திஸாநாயக்க, தனுஷ்க ரஞ்சனின் உதவியுடன் முதலாவது ட்ரை வைத்து இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். கிட்டத்தட்ட 60 மீட்டர் தனியே பந்தே எடுத்து சென்ற ரஞ்சன், ட்ரை கோட்டை நெருங்கி ஜேசனிற்கு பந்தை பரிமாற,ஜேசன் ட்ரை வைத்தார். எனினும் தரிந்த ரத்வத்தவினால் கொன்வெர்சனை புள்ளிகளாக மாற்ற முடியவில்லை. எனவே முதல் பாதி சமநிலையில் முடிந்தது.

முதல் பாதி: இலங்கை 05 – 05 மலேசியா

இரண்டாம் பாதியை இலங்கை அணி அமோகமாக ஆரம்பித்தது. இலங்கை அணியின் தலைவரான சுதர்ஷன முததந்திரி தனது பலத்தை உபயோகித்து, இரண்டு மலேசிய வீரர்களை இழுத்துக்கொண்டு ட்ரை கோட்டை கடந்து இலங்கை அணிக்கு முன்னிலையைக் கொடுத்தார். தொடர்ந்து ரஞ்சன் தனது வேகத்தை பயன்படுத்தி மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். இத்தொடரில் இது இவரது 10ஆவது ட்ரை என்பது குறிப்பிடத்தக்கது. ரத்வத்தவினால் இரண்டு கொன்வெர்சனையும் சிறப்பாக பூர்த்தி செய்ய முடியவில்லை. (இலங்கை 15 – 05 மலேசியா)

சீன அணியை வீழ்த்திய இலங்கை எழுவர் ரக்பி அணி

அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டிகளின் 3ஆம் கட்ட போட்டிகளில்…

தொடர்ந்து 12ஆவது நிமிடத்தில் தனுஷ் தயானின் ட்ரை உடன் இலங்கை அணி வெற்றியை உறுதி செய்துகொண்டது. கெவின் டிக்ஸன் இலகுவான கொன்வெர்சனை தவறவிடவில்லை. இலங்கை காலிறுதிப் போட்டியில் வென்று, அரையிறுதிப் போட்டியில் ஹொங் கொங் அணியை சந்தித்தது

முழு நேரம்: இலங்கை 22 – 05 மலேசியா


அரையிறுதிப் போட்டி – இலங்கை எதிர் ஹொங்கொங்

அரையிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணியிடம் தோல்வியுற்ற இலங்கை அணியானது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. அரையிறுதிப் போட்டியில் 26-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணியிடம் இலங்கை அணி தோல்வியுற்றது.

நடந்து முடிந்த முதலாம் இரண்டாம் கட்ட போட்டிகளில் ஹொங்கொங் அணியிடம் தோல்வியுற்ற இலங்கை அணியானது, இம்முறை வெற்றிபெறும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கியது. எனினும் ஆரம்பம் முதலே இலங்கை அணி தடுமாற்றம் கொண்டது. முதல் 10 செக்கன்களில் ஹொங்கொங் அணிக்கு ட்ரை ஒன்றை விட்டுக்கொடுத்த இலங்கை அணியானது, போட்டியின் ஆரம்பத்திலேயே பின்னிலை அடைந்தது. ஹொங்கொங் அணியின் டொபி பென் முதல் ட்ரை வைத்தார்.

தொடர்ந்து ஸ்ரீநாத் சூரிய பண்டார வழங்கிய பந்து பரிமாற்றத்தை குறுக்கிட்டுப் பெற்றுக்கொண்ட ஹொங்கொங் அணியின் கம் ஷின் இலகுவாக கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். கொன்வெர்சனையும் ஜெமி ஹூட் பூர்த்தி செய்ய, இலங்கை அணி 12 புள்ளிகளால் பின்னிலை அடைந்தது. (ஹொங்கொங் 12 – 00 இலங்கை).

இலங்கை தேசிய ரக்பி அணியின் முன்னாள் வீரருக்கு 2 வருட போட்டித்தடை

முன்னாள் இலங்கை தேசிய ரக்பி அணியின் வீரரும் தற்போதைய கண்டி…

இலங்கை அணியின் நிலை, ரிச்சர்ட் தரமபாலவிற்கு நடுவர் மஞ்சள் அட்டை காட்டியதன் மூலம் மேலும் மோசமானது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஹொங்கொங் அணியானது, ஜேசன் ஜெயம் மூலமாக மூன்றாவது ட்ரையையும் வைத்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தது. (ஹொங்கொங் 19 – 00 இலங்கை)

எனினும் முதல் பாதி நிறைவடைய முன்னர் தனுஷ்க ரஞ்சன் தனது தனிப்பட்ட திறமையினால் ட்ரை வைத்து இலங்கை அணிக்கு புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (ஹொங்கொங் 19 – 05 இலங்கை)

முதல் பாதி: ஹொங்கொங் 19 – 05 இலங்கை

இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடி போட்டியை வெற்றிகொள்ளும் இலங்கை அணியின் கனவானது 9ஆவது நிமிடத்தில் கம் ஷின் மூலமாக தகர்க்கப்பட்டது. தனுஷ்க ரஞ்சனை தாண்டி ஓடிய கம் ஷின் ட்ரை வைத்து ஹொங்கொங் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணியானது இறுதி நிமிடத்தில் ஸ்ரீநாத் சூரிய பண்டார மூலமாக கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தாலும், அது வெறும் ஆறுதல் ட்ரையாகவே இலங்கை அணிக்கு அமைந்தது. அத்துடன் போட்டி நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: ஹொங்கொங் 26 – 12 இலங்கை

அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்றதன் மூலம், இலங்கை அணியானது, 3ஆவது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில் தென் கொரிய அணியை சந்தித்தது.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இலங்கை அணியானது, குழு மட்ட போட்டிகளில் தாம் விட்ட தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாடியது. தென் கொரிய அணியின் பலம் மிக்க வீரர்களை தமது வேகத்தின் மூலம் முறியடித்த இலங்கை அணியானது தென் கொரிய அணிக்கு எதிராக 3 ட்ரைகளை வைத்து தமது திறமையை நிரூபித்தது. எனினும் தென் கொரிய அணியினால் வெறும் ஒரு ட்ரை மட்டுமே வைக்க முடிந்த நிலையில், இலங்கை அணி தொடரில் 3ஆம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற இத்தொடரில், இலங்கை அணி காட்டிய சிறந்த பெறுபேறும் இதுவாகும்.