இலங்கை ரக்பி அணியின் நிலையை வெளியிட்ட ஆசிய ரக்பி சம்மேளனம்

237
Sri Lanka Rugby Team 2017

எழுவர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இலங்கை ரக்பி அணி காலிறுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இலங்கை அணியின் படு மோசமான விளையாட்டு இலங்கை ரசிகர்களை கவலையடையச் செய்திருக்கும் இத்தருணத்தில் முடிவடைந்த முதற்கட்ட ஆசிய எழுவர் போட்டிகளுக்கான புள்ளி நிரலை ஆசிய ரக்பி சங்கம் வெளியிட்டுள்ளது.

ஆசிய எழுவர் கிண்ணத் தொடரின் முதற்கட்டப் போட்டிகள் இம்மாதம் 1ஆம், 2ஆம் திகதிகளில் ஹொங்கொங்கின் கிங்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 3 வருடங்களில் இத்தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகாதது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய 7’s ரக்பி தொடரில் பிளேட் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை

ஆசிய 7’s ரக்பி கிண்ண முதலாம் கட்ட போட்டிகளில், பிலிப்பைன்ஸ் அணியை 32-19…

கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளில் 12 அணிகள் பங்குபற்றியதைப் போலல்லாது இம்முறை 8 அணிகள் மாத்திரமே போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

முதல்நாள் இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்ற இலங்கை அணி காலிறுதிச் சுற்றில் சீன அணியுடன் மோதியது. இலங்கை அணியின் சீரற்ற அணிச் செயற்பாடு காரணமாக சீன அணியுடனான போட்டியில் 36-12 என இலங்கை தோல்வியுற்றது.

காலிறுதியிலிருந்து வெளியேறிய இலங்கை அணி இரண்டாம் நிலை அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் போட்டியிட்டு மீட்சியடைய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டது. மலேசிய அணிக்கு எதிரான குறித்த அரையிறுதிப் போட்டியில் 45 புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இரண்டாம் நிலை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் இலங்கை அணி 32-19 எனும் கணக்கில் பிலிப்பைன்ஸ் அணியை வீழ்த்தி முதற் கட்ட ஆசிய எழுவர் போட்டித் தொடரில் 5ஆம் இடத்தைப் பெற்றது. சென்ற முறை இலங்கை அணி முதல் நிலை அணிகளுக்கான இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முதற்கட்ட போட்டிகளில் பலம் மிக்க அணியாக வலம் வந்த ஜப்பான், போட்டிகளை நடாத்தும் ஹொங்கொங் அணியை இறுதிப் போடடியில் வீழ்த்தி, இறுதி முடிவுகளின் படி முதன்மை அணியாக முடிசூடிக் கொண்டது.

முடிவடைந்த முதற்கட்டப் போட்டிகளின்படி அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள் மற்றும் நிலைகள் கீழே தரப்பட்டுள்ளன.

நிலை   அணி புள்ளி
1 ஜப்பான் 8
2 ஹொங்கொங் 7
3 தென் கொரியா 6
4 சீனா 5
5 இலங்கை 4
6 பிலிப்பைன்ஸ் 3
7 மலேசியா 2
8 சைனீஸ் தாய்பேய் 1