20 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி கிண்ண தொடரில், அரையிறுதிப்போட்டியில் தென்கொரிய அணியிடம் 22-17 என அதிர்ச்சி தோல்வியடைந்த இலங்கை அணி, 3ஆம் இடத்திற்கான போட்டியில் சிங்கப்பூர் அணியை 26-12 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டது. கடந்த முறை நடைபெற்ற போட்டித் தொடரில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை எதிர் சிங்கப்பூர் – குழுமட்ட போட்டி
இலங்கை அணியானது தனது இறுதி குழுமட்ட போட்டியில் சிங்கப்பூர் அணியை இன்று முதலாவதாக சந்தித்தது. சவாலான போட்டியின் பின்னர் இலங்கை அணி 22-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டு, குழுமட்டத்தை தோல்வியின்றி பூர்த்தி செய்தது.
ஆசிய கிண்ணத்தில் அரையிறுதிக்கு தெரிவான இலங்கை கனிஷ்ட ரக்பி அணி
இலங்கை அணி அவிஷ்க லீ மூலமாக ட்ரை கோட்டை போட்டியில் முதலாவது கடந்து முன்னிலையை பெற்றது. தொடர்ந்து சிங்கப்பூர் அணியும் ட்ரை வைக்க, இலங்கை அணி தொடரில் முதன் முதலாக சவாலை எதிர்நோக்கியது. எனினும் ஹெஷான் ஜென்சென் இலங்கை அணிக்கு மற்றுமொரு ட்ரை வைக்க இலங்கை அணி 7 புள்ளிகள் முன்னிலையுடன் முதல் பாதியை முடித்தது.
முதல் பாதி: இலங்கை 12 – 07 சிங்கப்பூர்
இரண்டாம் பாதியில் தலைவர் நவீன் தனது திறமையை வெளிக்காட்டி ட்ரை வைத்து அசத்தினார். தொடர்ந்து ஜனிது டில்ஷான் ட்ரை வைக்க இலங்கை அணி வெற்றியை உறுதி செய்தது. போட்டி நிறைவடைய 30 செக்கன்கள் எஞ்சி இருந்த நிலையில், சிங்கப்பூர் அணி ஆறுதல் ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்டது
முழு நேரம் : இலங்கை 22(4T 1C ) – 12(2T 2C ) சிங்கப்பூர்
புள்ளிகள் பெற்றோர்
இலங்கை – நவீன் ஹெனகன்கணமகே 1T, அவிஷ்க லீ 1T, ஜனிது டில்ஷான் 1T, ஹேஷான் ஜென்சென் 1T, ஹரித் பண்டார 1C
இலங்கை எதிர் தென்கொரியா – அரையிறுதிப்போட்டி
குழு மட்ட போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி, அரையிறுதிப்போட்டியில் மேலதிக நேரத்தில் 22-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென் கொரிய அணியிடம் தோல்வியுற்று, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
முன்னைய போட்டிகளைப் போன்று இப்போட்டியையும் சிறப்பாக ஆரம்பித்த இலங்கை அணி தொடர்ந்து இரண்டு ட்ரைகளை வைத்து 12 புள்ளிகளைப் பெற்றது. தலைவர் நவீன் ஹெனகன்கணமகே முதலாவது ட்ரை வைக்க, ஸ்க்ரம் ஹாப் வீரர் அவிஷ்க லீ இரண்டாவது ட்ரை வைத்து இலங்கைக்கு மேலும் முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து ஒரு ட்ரை வைத்து தென் கொரிய அணி பதிலடி கொடுத்த பொழுதும், கெமுனு சேத்திய, முதல் பாதி முடிவடைய முன்னர் மற்றுமொரு ட்ரை வைத்து இலங்கை அணிக்கு பலம் சேர்த்தார்
முதல் பாதி: இலங்கை 17 – 07கொரியா
இரண்டாம் பாதியில் இலங்கை அணி முற்றிலும் வேறுபட்ட விளையாட்டை வெளிப்படுத்தியது. 8 ஆவது நிமிடத்தில் தென் கொரிய அணிக்கு ட்ரை வைக்க வழி வகுத்த இலங்கை அணி, 14 ஆவது நிமிடத்தில் தென் கொரியா மற்றுமொரு ட்ரை வைத்ததால், 14 ஆவது நிமிட முடிவில் போட்டியை சமநிலையில் முடித்தது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மேலதிக நேரத்தில் தென் கொரிய அணி ட்ரை வைத்ததன் மூலம் இலங்கை அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
முழு நேரம்: இலங்கை 17 (3T 1C ) – 22 (4T 1C ) தென் கொரியா
புள்ளிகள் பெற்றோர்
இலங்கை – நவீன் ஹெனகன்கணமகே 1T, அவிஷ்க லீ 1T, கெமுனு சேத்திய 1T, ஹரித் பண்டார 1C
இலங்கை எதிர் சிங்கப்பூர் – 3ஆம் இடத்திற்கான போட்டி
தென் கொரிய அணியுடனான தோல்வியின் பின்னர் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை அணி, 3ஆம் இடத்திற்கான போட்டியில் சிங்கப்பூர் அணியை 26-12 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. சிங்கப்பூர் அணி மறுபக்கத்தில் ஹொங்கொங் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் தோல்வி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேல, வெத்தமுனி ஆகியோரால் அங்குரார்ப்பணம்
இலங்கை அணி எதிர்பார்த்தவாறு ஆரம்பம் அமையவில்லை. போட்டியின் முதலாவது ட்ரையை சிங்கப்பூர் அணி பெற்றுக்கொண்ட பொழுதும், சளைக்காத இலங்கை அணி ஹரித் பண்டார மூலமாக ட்ரை வைத்து புள்ளியை சமநிலை செய்தது. எனினும் முதல் பாதியில் மீண்டும் ஒரு முறை ட்ரை கோட்டை கடந்த சிங்கப்பூர் அணி, 12 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் பாதிக்கு 5 புள்ளிகள் முன்நிலை பெற்ற நிலையில் முன்னேறியது.
முதல் பாதி: இலங்கை 07 – 12 சிங்கப்பூர்
முதல் பாதியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த இலங்கை அணி சிங்கப்பூர் அணிக்கு எந்த ஒரு புள்ளியையும் வழங்காது 3 ட்ரைகளை வைத்து போட்டியை தம் பக்கம் ஈர்த்தது. இலங்கை அணி சார்பாக ஜனிது டில்ஷான், ஹரித் பண்டார மற்றும் தினுக் அமரசிங்க இரண்டாம் பாதியில் ட்ரை வைத்து இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.
முழு நேரம்: இலங்கை 26(4T, 3C) -12(2T,1C) சிங்கப்பூர்
புள்ளிகள் பெற்றோர்
இலங்கை – தினுக் அமரசிங்க 1T, ஹரித் பண்டார 1T 1C, ஜனிது டில்ஷான் 1T 1C, அவிஷ்க லீ 1T, சதுர செனவிரத்ன 1C
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க