அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய ரக்பி செவன்ஸ் கிண்ண போட்டிகளின் இறுதிப் பாகம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இவ்வார இறுதியில் ஆரம்பமாக உள்ளது. இலங்கை ரக்பி அணி, கடந்த இரு பாகங்களிலும் இரண்டாம் இடத்தை பிடித்த நிலையில் இம்முறை போட்டிகளில் பங்குகொள்ள உள்ளது.
இந்நிலையில், நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் இறுதிப் பாகத்தில் இலங்கை அணி குழு B இல் சீனா, சைனீஸ் தாய்பேய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் போட்டியிட உள்ளது. குழு A இல் ஹொங் கொங், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை அணி, சைனீஸ் தாய்பேய் அணியை 43-12 எனவும் சிங்கப்பூர் அணியை 27-05 எனவும் முன்னைய போட்டிகளில் இலகுவாக வெற்றி கொண்டது. இதனால் இம்முறையும் இலங்கை அணி இவ்விரு அணிகளையும் குழு மட்ட போட்டிகளில் இலகுவாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் சீன அணியை இலங்கை அணி 19-17 என்ற புள்ளிகள் வீதத்தில் கடினமான போட்டியின் பின்னரே ஹொங் கொங்கில் இடம்பெற்ற பாகத்தில் வெற்றிக்கொண்டது. பின்னர் தென் கொரியாவில் நடைப்பெற்ற போட்டியில் 26-21 என்று தோல்வியுற்ற போதிலும் தென் கோரிய அணியை 26-10 என வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இரண்டாம் நாள் நடைபெற உள்ள அரையிறுதி சுற்றுக்கு தெரிவாக, குழு மட்டத்தில் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. ஆசியாவின் ரக்பி ஜாம்பவானாகத் திகழும் ஜப்பான் அணி சார்பாக புதுமுக வளர்ந்து வரும் அணியே பங்கு கொள்வதால் குழு A இல் தென் கொரியா மற்றும் ஹொங் கொங் ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அணி, ஹொங் கொங் அணியுடன் இடம்பெற்ற இறுதி இரண்டு போட்டிகளிலும் விளையாடிய நுட்பங்களில் பாரிய வித்தியாசம் காணப்பட்டது. இலங்கை அணி முதல் பாக இறுதிப் போட்டியில் 17-22 என்று தோல்வியுற்றது. அதுபோல், இரண்டாம் பாக இறுதிப் போட்டியில் 36-00 என தோல்வியுற்றது. இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் ரக்பி வீரருமான மெடீ டர்னர் இது பற்றி கூறும்போது “கண்டிப்பாக அவர்களுடன் மோதும் போது நாம் நமது நுட்பங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இரண்டு வாரங்களாக நாம் இதற்கான பயிற்சிகளிலேயே ஈடுபட்டோம்” எனத் தெரிவித்தார்.
இப்போட்டிகளை பற்றி மேலும் வினவிய பொழுது “ஹொங் கொங் அணியை வெல்வதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் .எமது தாய் நாட்டில் போட்டிகள் நடைப்பெறுகின்றன. இவ்வருடத்தில் எமது வீரர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். அதேபோன்று செயற்பட்டு இப்போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்” என தெரிவித்தார்.
இலங்கை அணி ஹொங் கொங் அணியை இரண்டாம் நாளில் சந்திக்குமிடத்து, அவ்வணியை வெற்றிக்கொள்ள நம்மிடம் சிறந்த நுட்பங்கள் உள்ளதாக இலங்கை அணியின் தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் இலங்கை அணி புள்ளிகளை பெறுவதற்கான இருந்த முதல் சந்தர்ப்பத்தை காட்டுகின்றது. ஹொங் கொங் அணியுடனான போட்டியில் 3 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை அணியினரிடம் பந்து காணப்படுகின்ற பொழுது, ஹொங் கொங் அணியின் ஸ்வீப்பர் பின்னாலிருந்து முன்னால் ஓடி வருவதை காணலாம். எனினும் இதன் பொழுது அவ்வணியின் பின் களத்தில் எந்த வீரரும் இருக்கவில்லை.
அதேபோன்று, கீழே காட்டப்பட்டுள்ள இரண்டாம் படத்தில் தரிந்த ரத்வத்தவின் கையில் பந்து காணப்படுகின்றது. ஆனால் ஒமல்க குணரத்ன விங் இடத்தில மிகவும் நேராக காணப்படுகின்றார். இதன் பொது ரத்வத்த ஹொங் கொங் அணி வீரருடன் மோதினார். அனால் இதற்கு பதிலாக அவர் பந்தை முன்னால் உதைத்து இருக்கலாம். இல்லையெனில் ஒமல்க சற்று பின்னால் நின்று இருந்தால் அவருக்கு பந்தை பாஸ் செய்து இருக்கலாம். ஒமல்க வலு உடையவர் என்பதால் அவரால் முன்னால் இருக்கும் வீரரை மோதி தள்ளிவிட்டு இலகுவாக ஓடி சென்று இருக்கலாம்.
இரண்டாம் பாதியிலும் ஹொங் கொங் அணி தனது நுட்பங்களை மாற்றவில்லை. இலங்கை அணிக்கு பந்து கிடைத்தவுடன் ஹொங் கொங் அணியின் வீரர்கள் உடனடியாக பந்தை தடுக்க வந்துவிட்டனர். பந்தை வைத்திருக்கும் துலாஜ் பெரேராவை இருவர் மறைக்க முற்படுவதை கீழே படத்தில் காணலாம்.
துலாஜ் வேறு வழியின்றி ஹொங் கொங் வீரருடன் மோதுண்டார். ஹொங் கொங் அணி வீரர்கள் எவ்வளவு நேராக பந்தை தடுக்கிறார்கள் என்பதை கீழே படத்தில் காணலாம். ஹொங் கொங் அணிக்கு ஸ்வீப்பர் யாரும் காணப்படவில்லை. ஆனாலும் இலங்கை அணிக்கு முன்னால் உதைத்து விட்டு ஓட நேரமும் அவர்கள் கொடுக்கவில்லை. பந்து இலங்கை அணியின் 22 மீட்டருக்குள் காணப்பட்டதால் பந்தை உதைத்து இருந்தால் திரும்ப சென்று பந்தை பெற நிறைய நேரம் காணப்பட்டிருக்கும்.
7 பேரை கொண்ட போட்டிகளானது விசித்திரமானது. போட்டிக்கு போட்டி, நிமிடத்திற்கு நிமிடம் நுட்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் சென்ற இரு வாரங்களும் இலங்கை அணி பயிற்சியில் ஈடுபடுவதற்கு போதுமானதாக அமைந்திருக்கும். இலங்கை அணி எந்த ஒரு கப் கிண்ணத்தையும் இதுவரை சுவீகரித்தது இல்லை. 18 வயத்திற்குற்பட்ட இலங்கை அணியும், 20 வயதிற்கு உற்பட்ட இலங்கை அணியும் இந்த வருடத்தில் முதன் முதலாக கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது. இலங்கை பிரதான அணியும் கிண்ணத்தை சுவீகரிக்கும் எனில், 2016ஆம் ஆண்டு இலங்கை ரக்பி வரலாற்றிற்கு மறக்க முடியாத ஆண்டாக அமையும்.
அதேவேளையில் இலங்கை மகளிர் ரக்பி அணி பலமிக்க சீனா, ஹொங் கொங் மற்றும் சிங்கப்பூர் அணிகளுடன் மோதவுள்ளது. ஜப்பான் அணி முதலாவது பாக இறுதி போட்டியில் சீன அணியை 14-07 என வென்றதோடு, இரண்டாவது பாகத்தில் சீன அணி, ஜப்பான் அணியை 21-14 என வென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.