அணிக்கு 7 பேர் கொண்ட ஆசிய றக்பி கிண்ணத்தின் இரண்டாம் பாகம் இன்று தென்கொரியாவில் நிறைவு பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 36-00 என்ற புள்ளி அடிப்படையில் இலகுவாக தோற்கடித்த ஹொங் கொங் அணியினர் இப் பாகத்தின் வெற்றியாளர்களாக முடி சூடிக்கொண்டனர். இறுதியும் மூன்றாவதுமான பாகம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்களில் வெற்றி பெற்றதன் காரணமாக, ஹொங் கொங் அணிக்கு சுற்றுப்போட்டியை வெற்றி கொள்ள அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு வெற்றி கொள்ளும் தருணத்தில் ஹொங் கொங் அணி 7 பேர் கொண்ட உலக ரக்பி சுற்றுப்போட்டிக்கு தகுதி பெறுவர். ஆசிய பிராந்தியத்தில் இருந்து ஜப்பான் அணியினர் ஏற்கனவே இச் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆசிய ரக்பி சுற்றுப்போட்டியில் ஜப்பான் அணி சார்பாக வளர்ந்துவரும் அணியொன்றே பங்கேற்றிருந்தது.
இரண்டாம் பாக போட்டிகளின் முடிவுகள்
இலங்கை (27) எதிர் சிங்கப்பூர் (05)
முதல் போட்டியில் சிங்கப்பூர் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 27-05 என்ற அடிப்படையில் வெற்றியை சுவீகரித்தது. ஆரம்பத்தில் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அணித்தலைவர் தனுஷ்க ரஞ்சன் ஊடாக தமது முதல் ட்ரையை வைத்து இலங்கை முன்னிலை பெற்றது. கவிந்து பெரேரா மற்றுமொரு ட்ரை வைக்க, இம்முறை துலாஜ் பெரேரா இலகுவாக உதைத்தார். முதல் பாதி நிறைவில் இலங்கை 12-00 என்ற புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆரம்பித்து சொற்ப வேளையில் தரிந்த ரத்வத்த 45 மீட்டர்கள் ஓடி ட்ரை வைத்தார். தொடர்ந்து ஸ்ரீநாத் சூரியபண்டார மற்றுமொரு ட்ரை வைக்க புள்ளி 22-00 என உயர்ந்தது. சிங்கப்பூர் அணி ஆறுதல் ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்ட போதிலும், போட்டி நிறைவுறும் முன் இலங்கை மற்றுமொரு ட்ரை வைத்து 27-05 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கொண்டது.
இலங்கை (41) எதிர் மலேஷியா (05)
தமது இரண்டாவது போட்டியில் மலேஷியா அணியுடன் மோதிய இலங்கை அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41-05 என்ற புள்ளி அடிப்படையில் இலகுவாக வெற்றி பெற்றது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி முதல் பாதியில் தனுஷ்க ரஞ்சனின் இரண்டு ட்ரைகள் உள்ளடங்கலாக 3 ட்ரைகள் வைத்து 15-00 என்று முன்னிலை பெற்றது. இதன் போது இலங்கை அணிக்கு கிடைத்த 3 உதைகளும் தவறவிடப்பட்டன.
இரண்டாம் பாதியிலும் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி சார்பாக ரத்வத்த, சூரியபண்டார மற்றும் ஹிரந்த பெரேரா முறையே ட்ரை வைத்தனர். அவற்றில் 2 உதைகளை துலாஜ் பெரேரா வெற்றிகரமாக உதைக்க புள்ளி வித்தியாசம் 29 இற்கு உயர்ந்தது.
தொடர்ந்து ஹிரந்த பெரேரா மற்றும் சூரியபண்டார தமது இரண்டாவது ட்ரைகளை வைத்தனர். இறுதி வினாடிகளில் மலேஷிய வீரர்கள் ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்ட போதிலும் இலங்கை அணி 41-05 என்ற பாரிய புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இலங்கை (21) எதிர் சீனா (26)
குழுச்சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சீன அணியுடன் மோதிக் கொண்டது. போட்டியின் முதல் ட்ரையை சீன வீரர்கள் பெற்றுக் கொண்ட போதிலும் தரிந்த ரத்வத்த அற்புதமான ஓட்டத்தின் மூலம் கம்பங்களுக்கிடையில் ட்ரை வைத்து உதையையும் வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளை சமனாக்கினார்.
தொடர்ந்து சூரியபண்டார ட்ரை ஒன்றை பெற்றுக் கொடுக்க ராமநாயக்க தனது உதையின் மூலம் இலங்கை அணியின் புள்ளிகளை 14 இற்கு உயர்த்தினார். சீன அணி தம் பங்கிற்கு ட்ரை வைக்க முதல் பாதியில் இலங்கை அணி 14-12 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆரம்பித்து சிறிது நேரத்தில் சீனா ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்டனர். எனினும் மீண்டும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி கவிந்து பெரேரா மூலம் ட்ரை ஒன்றை வைத்தது. துலாஜ் பெரேராவின் துல்லியமான உதை காரணமாக இலங்கை 21-19 என்ற புள்ளி அடிப்படையில் முன்னிலை பெற்றது.
எனினும் துரதிஷ்டவசமாக போட்டி முடிவுற சொற்ப நேரமே எஞ்சியிருந்த நிலையில் சீன அணி ட்ரை ஒன்றை வைத்து வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.
முதல் சுற்றில் பெற்றுக் கொண்ட இரண்டு வெற்றிகள் காரணமாக இலங்கையணி குழுவில் இரண்டாம் இடத்தை பிடித்துக் கொண்டதுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மற்றைய குழுவில் தென்கொரிய அணியானது ஜப்பான் (36-05), சீன தாய்பேய் (45-12) மற்றும் ஹொங் கொங் (28-21) அணிகளை தோற்கடித்து குழுவில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது. ஹொங் கொங் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இலங்கை (26) எதிர் தென்கொரியா (10)
போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் சரி சமமாக மோதிக் கொண்ட போதிலும், சாலிய ஹந்தபங்கொட அடுத்தடுத்து இரண்டு ட்ரைகள் வைக்க, போட்டி இலங்கைக்கு சாதகமாக திரும்பியது. பாதி நேர இடைவேளையின் முன் தென்கொரிய அணி ட்ரை ஒன்றை பெற்றுக் கொண்ட போதிலும் இலங்கை அணி 14-05 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் தென்கொரிய வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும் இலங்கை அணி நன்றாக தடுத்தாடியது. தமக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திய இலங்கை அணி, தனுஷ் தயான் ஊடாக ட்ரை வைத்து. அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் தனுஷ்க ரஞ்சன் தமது அணிக்காக மற்றுமொரு ட்ரையை பெற்றுக்கொடுத்தார்
இதன்படி 26-10 என்ற புள்ளி அடிப்படையில் அரையிறுதியை வென்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றைய அரையிறுதியில் 29-00 என்ற புள்ளி வித்தியாசத்தில் சீன அணியை தோற்கடித்த ஹொங் கொங் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி – இலங்கை (00) எதிர் ஹொங் கொங் (36)
ஆரம்பம் முதலே இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த ஹொங் கொங் வீரர்கள் போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே 2 ட்ரைகள் வைத்தனர். தொடர்ந்து இலங்கை அணியை அழுத்தத்துக்கு உள்ளாக்கிய ஹொங் கொங் அணி, பாதி நேர இடைவேளைக்கு முன்னர் மற்றுமொரு ட்ரையை பெற்றுக் கொள்ள புள்ளி வித்தியாசம் 19-00 என உயர்ந்தது.
இரண்டாவது பாதியிலும் ஹொங் கொங் அணியினரின் அதிரடி ஆட்டத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறியது. ஹொங் கொங் வீரர்கள் மேலும் மூன்று ட்ரைகளை பெற்றுக் கொள்ள, இலங்கை அணியின் வெற்றிக் கனவு சுக்கு நூறாகியது. அதன்படி 36-00 என்ற அடிப்படையில் ஹொங் கொங் அணி வெற்றியை சுவீகரித்து.
சுற்றுப்போட்டியின் தரவரிசைப் பட்டியலில் 24 புள்ளிகளுடன் ஹொங் கொங் முன்னிலை வகிக்கின்றது. இரண்டு இறுதிப்போட்டிகளிலும் ஹொங் கொங் அணியிடம் தோல்வியை சந்தித்த இலங்கை 20 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. அணிகளுக்கு புள்ளிகளை வழங்கும் முறை பின்வருமாறு:
முதலாம் இடம் – 12 புள்ளிகள்
இரண்டாம் இடம் – 10 புள்ளிகள்
மூன்றாம் இடம் – 8 புள்ளிகள்
நான்காம் இடம் – 7 புள்ளிகள்
ஐந்தாம் இடம் – 5 புள்ளிகள்
ஆறாம் இடம் – 4 புள்ளிகள்
ஏழாம் இடம் – 2 புள்ளிகள்
எட்டாம் இடம் – 1 புள்ளி
இதன்படி, இலங்கை அணி சுற்றுப்போட்டியை வெற்றி கொள்ள வேண்டுமாயின், மூன்றாவது பாகத்தில் வெற்றி பெற வேண்டியதுடன் ஹொங் கொங் அணி 4 அல்லது அதற்கு குறைந்த இடத்திற்கு பின்தள்ளப்பட வேண்டும்.
மூன்றாவது பாகத்தில் இலங்கை, சீனா, சீன தாய்பேய் மற்றும் சிங்கப்பூர் அணிகள் ஒரு குழுவிலும் ஜப்பான், தென் கொரியா, மலேஷியா மற்றும் ஹொங் கொங் அணிகள் மற்றைய குழுவிலும் போட்டியிடவுள்ளன.