இந்திய, பாகிஸ்தான் அணிகளின் பங்கேற்போடு ஆசிய கிண்ணம் டுபாயில்

185

ஆசிய கிரிக்கெட் சபைக் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் டுபாயில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இம்முறை ஆசிய கிண்ணம் பாகிஸ்தானில் நடைபெற வேண்டி இருந்தபோதும் பாகிஸ்தான் பயணிக்க இந்தியா தயக்கம் காட்டியுள்ளது. ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்துவது பிரச்சினைக்குரியது என்றும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் சபை கூறிவந்தது.

இந்நிலையில் ஈடன் கார்டனில் நேற்று (28) செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி கூறியதாவது, “ஆசிய கிண்ணம் டுபாயில் நடைபெறுவதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பங்கேற்கும்” என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றங்கள் காரணமாக 2012-13 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே இரு தரப்பு போட்டித் தொடர்கள் நடைபெறவில்லை. எனினும் இரு நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் பிரதான போட்டித் தொடர்கள் மற்றும் ஆசிய கிண்ண போட்டிகளில் விளையாடி வருகின்றன. 

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடரை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான் தனது சொந்த நாட்டில் நடத்தியதில்லை. 2010 ஆம் ஆண்டு தொடரை இலங்கை நடத்திய அதேவேளை அடுத்த மூன்று தொடர்களும் பங்களாதேஷில் நடைபெற்றன. கடைசியாக நடைபெற்ற ஆசிய கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது.  

2016 ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிய கிண்ணம் சுழற்சி அடிப்படையில் நடைபெறுவதோடு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகள் என மாற்றாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. டி20 உலகக் கிண்ண போட்டிகளை எதிர்கொள்ளவிருப்பதால் அதற்கு தயாராகும் வகையில் 2020 ஆசிய கிண்ணத் தொடர் டி20 போட்டிகளாக நடைபெறவுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<