2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடர் பாகிஸ்தானிலேயே நடைபெறும் என ESPNcricinfo செய்திச் சேவை நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது.
ஒருநாள் போட்டிகளாக நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு (PCB) காணப்படுகின்றது. எனவே தொடரினை முழுமையாக பாகிஸ்தானில் நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
எனினும் இந்த தொடர்களில் பங்குபெறும் அணிகளில் ஒன்றான இந்தியா அரசியல் பிரச்சினைகளை காரணம் காட்டி, ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக ஆசிய கிண்ணத் தொடர் வேறு ஒரு நாட்டுக்கு மாற்றப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
>>உலகக்கிண்ணம் ஆரம்பிக்கும் திகதி தொடர்பிலான புதிய தகவல்!
ஆனால் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமுமம் (BCCI) இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
ஆனால், ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானுக்கு வெளியே நடுநிலையான மைதானம் ஒன்றில் இடம்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், இந்திய அணியின் போட்டிகளை நடாத்த இலங்கை, இங்கிலாந்து, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.
முன்னர் குறிப்பிட்டது போன்று இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டி அடங்கலாக மொத்தமாக 13 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
இதில் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிகாண் போட்டியில் தெரிவாகும் அணி என்பன காணப்படுகின்றன. அதேநேரம் இரண்டாவது குழுவில் தொடரின் நடப்புச் சம்பியன் இலங்கை பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் இருந்து இரு அணிகள் ”சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறுவதோடு அந்த சுற்றில் இருந்து இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும். எனவே ஒழுங்கமைப்பட்டிருக்கும் போட்டிகளின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் அதிகபட்சமாக மூன்று இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
>>WATCH – உலகக்கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறுமா இலங்கை? | Cricket Kalam
எனவே மிக விரைவில் ஆசியக் கிண்ணத் தொடர் நடாத்தப்படும் இடங்கள் குறித்து உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஒருநாள் ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாகவும் நடைபெறும் நிலையில், அது ஆசிய அணிகளுக்கு உலகக் கிண்ண தயார்படுத்தல்களுக்கு ஏதுவாகவும இருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<