இலங்கையில் நடைபெற்றுவந்த ஆசியக்கிண்ணத் தொடரின் சிறந்த பதினொருவர் அணியை எமது இணையத்தளமான Thepapare.com தெரிவுசெய்துள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட பதினொருவரில் இலங்கை அணியைச் சேர்ந்த 4 வீரர்கள், இந்திய அணியைச் சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
>>ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை T20 குழாத்தில் வியாஸ்காந்த்
Thepapare.comஇன் சிறந்த பதினொவர் விபரம் இதோ
சுப்மான் கில் (இந்திய அணி)
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இடம்பெற்றுள்ளார். இந்த ஆசியக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இவர் 6 இன்னிங்ஸ்களில் 302 ஓட்டங்களை குவித்தார். இவர் 75.50 என்ற ஓட்ட சராசரியை கொண்டுள்ளதுடன், ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதங்களையும் விளாசியுள்ளார்.
ரோஹித் சர்மா (இந்தியா)
இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இடம்பெற்றுள்ளார். இவரும் 6 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ளதுடன் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 194 ஓட்டங்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக இவர் 74 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குசல் மெண்டிஸ் (இலங்கை)
இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளார். இறுதிப்போட்டியில் இவர் ஓட்டங்களை குவிக்க தவறியபோதும், 45 என்ற ஓட்ட சராசரியுடன் 3 அரைச்சதங்களுடன் 270 ஓட்டங்களை குவித்துள்ளார். இரண்டு தடவை 93 மற்றும் 91 ஓட்டங்களை குவித்திருந்த இவர் சதத்தை தவறவிட்டிருந்தார்.
சதீர சமரவிக்ரம (இலங்கை)
இலங்கை அணியின் நான்காவது இலக்க வீரராக பிரகாசிக்க தொடங்கியிருக்கும் சதீர சமரவிக்ரம ஆசியக்கிண்ணத்தில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 215 ஓட்டங்களை குவித்திருந்தார். இவர் 35.83 என்ற ஓட்ட சராசரியில் ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணிக்கு எதிராக 93 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.
>>WATCH – தொடர் உபாதைகளால் தடுமாறும் நடப்பு சம்பியன் ; ஆசியக்கிண்ணம் நிலைக்குமா? | Asia Cup 2023
மொஹமட் ரிஸ்வான் (பாகிஸ்தான்)
பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் மொஹமட் ரிஸ்வான் அணியின் 5வது இலக்க துடுப்பாட்ட வீரராக இடம்பிடித்துள்ளார். மொஹமட் ரிஸ்வான் 4 இன்னிங்ஸ்கள் மாத்திரம் துடுப்பெடுத்தாடியுள்ளதுடன் 97.50 என்ற மிகச்சிறந்த ஓட்ட சராசரியுடன் 195 ஓட்டங்களை குவித்தார். இவர் 2 அரைச்சதங்களை விளாசியிருந்தார்.
ஹர்திக் பாண்டியா (இந்தியா)
ஆசியக்கிண்ணத்தின் சிறந்த பதினொருவர் பட்டியலில் மூன்று சகலதுறை வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரராக ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார்.
ஹர்திக் பாண்டியா இம்முறை துடுப்பாட்டத்தில் 2 இன்னிங்ஸ்களில் மாத்திரம் ஆடியிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறந்த இன்னிங்ஸை ஆடிய இவர் 87 ஓட்டங்களை விளாசியிருந்தார். எனினும் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்திய இவர் 4 இன்னிங்ஸ்களில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இப்திகார் அஹ்மட் (பாகிஸ்தான்)
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற சுப்பர் 4 போட்டியில் அபாரமான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என சகலதுறை பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்த வீரர் பாகிஸ்தான் அணியின் இப்திகார் அஹ்மட்.
இவர் துடுப்பாட்டத்தை பொருத்தவரை 3 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் அடங்கலாக 179 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், அதிகபட்சமாக 109 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
துனித் வெல்லாலகே (இலங்கை)
இம்முறை ஆசியக்கிண்ணத்தில் சகலதுறை பிரகாசிப்பின் ஊடாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தவர் இலங்கை அணி வீரர் துனித் வெல்லாலகே. இந்திய அணிக்கு எதிரான சுப்பர் 4 போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 42 ஓட்டங்களையும் குவித்தார்.
மொத்தமாக 5 இன்னிங்ஸ்களில் 86 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
>>WATCH – மும்பை அணியில் யாழ். வீரர்; T20 லீக்கிற்கு COMEBACK கொடுக்கும் Kusal Perera!
குல்தீப் யாதவ் (இந்தியா)
இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இம்முறை ஆசியக்கிண்ணத்தில் மிகச்சிறப்பாக பந்துவீசியிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இவர் இலங்கை அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இவர் 4 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்டுகளை மொத்தமாக வீழ்த்தியிருந்தார்.
மொஹமட் சிராஜ் (இந்தியா)
ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுத்திருந்த இவர், மொத்தமாக 10 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இதில் இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மொஹமட் சிராஜ் 4 போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதீஷ பதிரண (இலங்கை)
இலங்கை அணியின் வளர்ந்துவரும் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரண. இந்த தொடரில் 11 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், சுப்பர் 4 போட்டியிலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<