இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழுக்களின் விபரத்தை ஆசிய கிரிக்கெட் சபை தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.
அதன்படி நடப்பு சம்பியனான இலங்கை அணியுடன், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு குழுவில் இடம்பெற்றுள்ளதுடன் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் அணி மற்றுமொரு குழுவில் இடம்பெறவுள்ளன.
>> இந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு சவாலானதா?- கூறும் நவீட் நவாஸ்!
கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு கட்டமைப்பு போன்று இந்த ஆண்டும் குழு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி குழுநிலையில் ஒவ்வொரு அணிகளும் எதிரணியுடன் ஒரு தடவை மோதவுள்ளதுடன், முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.
சுபர் 4 சுற்றில் ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளுடன் ஒரு தடவை மோதவுள்ளதுடன், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இதில் குழுநிலையில் 6 போட்டிகள் மற்றும் சுபர் 4 சுற்றில் 6 போட்டிகள் அடங்கலாக இறுதிப்போட்டியுடன் மொத்தமாக 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இம்முறை தொடரானது ஒருநாள் போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.
தொடரை நடத்துவதற்கான உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றுள்ளபோதும், போட்டித்தொடர் எங்கு நடத்தப்படும் என்ற அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதேவேளை 19 வயதின் கீழ் ஆசியக்கிண்ணத்தொடர் டிசம்பர் மாதத்திர் நடைபெறவுள்ளதுடன், இதற்கான குழு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குழு ஒன்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன், தகுதிபெறும் இரண்டு அணிகள் இடம்பெறவுள்ளன. குழு இரண்டில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிபெறும் அணிகள் இடம்பெறவுள்ளன.
ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு விபரம்
- குழு 1 – இந்தியா, பாகிஸ்தான், தகுதிபெறும் அணி
- குழு 2 – இலங்கை, பங்களாதேஷ், இந்தியா
19 வயதின் கீழ் ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழு விபரம்
- குழு 1 – இந்தியா, பாகிஸ்தான், தகுதிபெறும் 2 அணிகள்
- குழு 2 – இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தகுதிபெறும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<