இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே ஆசியக் கிண்ண T20I தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய நிலையில் இரு அணிகளும் ஏற்கனவே திட்டமிட்டபடி மோதும் சுபர் 4 சுற்றுத் தொடரின் போட்டி இன்று (09) துபாய் நகரில் ஆரம்பமாகின்றது.
>> த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் பாகிஸ்தான் அணி
சுபர் 4 சுற்றின் ஆறாவது போட்டியாக காணப்படும் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான மோதல், இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இரண்டு அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கான ஒத்திகை போன்ற ஒரு மோதலாக அமையவிருக்கின்றது.
அத்துடன் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்னர் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான சுபர் 4 மோதல் நடைபெறுகின்றது.
இரு அணிகளும் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் தாம் விளையாடிய முதல் போட்டிகளில் தோல்விகளை சந்தித்ததனை அடுத்து எதிர்பார்ப்புக்கள் குறைந்த அணிகளாக காணப்பட்டிருந்தன. இதில் இலங்கை தமது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோசமான தோல்வியினைச் சந்தித்திருந்ததோடு, இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியினை தழுவியிருந்தது. ஆனால் இரண்டு அணிகளும் தாங்கள் முதல் சுற்றில் தோல்வியடைந்த இரண்டு அணிகளுக்கும் சுபர் 4 சுற்றில் பதிலடி வழங்கியிருந்தன.
குறிப்பாக இலங்கை அணி தாம் விளையாடிய இறுதி மூன்று போட்டிகளிலும் மிகவும் சவாலான வெற்றி இலக்குகளை விரட்டி அடித்திருந்த நிலையில், பந்துவீச்சில் பிரகாசித்திருந்த பாகிஸ்தான் அணியும் த்ரில்லரான முடிவுகளுடன் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறியிருந்தது.
எனவே பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டு துறைகளுக்கும் இடையில் நடக்கும் போராக கருதப்பட வேண்டிய நிலையில் தற்போது காணப்படுகின்றது.
>> T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்கா குழாம் அறிவிப்பு
கடந்தகால மோதல்கள்
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற T20I போட்டிகளில் பாகிஸ்தான் 13 வெற்றிகளையும், இலங்கை 8 வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றன.
கடைசியாக இரு அணிகளும் ஆடிய 3 போட்டிகள் கொண்ட T20I தொடரினை இலங்கை 3-0 என கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. இந்த தொடர் வெற்றி இலங்கை அணிக்கு அப்போது தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்ட தசுன் ஷானக்கவின் தலைமையில் பெறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தசுன் ஷானக்க இப்போது ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் இலங்கையின் நிரந்தர தலைவராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாணய சுழற்சியின் ஆதிக்கம்
சுபர் 4 சுற்றில் நிறைவடைந்திருக்கும் போட்டிகளில் நாணய சுழற்சியானது, போட்டி முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமைந்திருந்ததனை பார்க்க முடியுமாக இருக்கின்றது.
இந்திய – ஆப்கானிஸ்தான் அணியுடனான சுபர் 4 மோதல் தவிர்ந்த ஏனைய போட்டிகளில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. இது ஐக்கிய அரபு இராச்சிய மைதானத்தில் இரண்டாவது துடுப்பாடும் அணிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்பு காணப்படுவதை வெளிப்படுத்துகின்றது.
உபாதை ஆபத்துக்கள்?
இலங்கை அணியினைப் பொறுத்தவரை உபாதைகள் குறித்த அறிவிப்புக்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்ற போதும், பாகிஸ்தான் அணியின் சுழல்பந்துவீச்சாளரான சதாப் கான் மருத்துவ பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது. எனவே அவர் உபாதைச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து ஓய்வு பெறும் நிலையில் அது உஸ்மான் காதிருக்கு பாகிஸ்தான் அணியில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும்.
>> த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் பாகிஸ்தான் அணி
பாகிஸ்தானின் பலம்
முன்னர் குறிப்பிட்டதனைப் போன்று நல்ல பந்துவீச்சாளர்களுடன் பாகிஸ்தான் அணி காணப்படுகின்றது. அத்துடன் போட்டியினை எந்த நேரத்திலும் மாற்றக் கூடிய ஆசிப் அலி போன்ற துடுப்பாட்டவீரர்களும் அவ்வணியில் காணப்படுகின்றனர். சிறப்பான முறையில் துடுப்பாட்டங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் மொஹமட் ரிஸ்வானும் அவ்வணியின் எதிர்பார்ப்பு வீரராக இருக்கின்றார்.
இலங்கையின் பலம் மற்றும் பலவீனம்
இலங்கை அணியின் பெரும் நம்பிக்கையாக இந்த ஆசியக் கிண்ணத்தில் சுழல்பந்துவீச்சுத்துறை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை அணியினைப் பொறுத்தவரை பெரும் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்க இதுவரை ஏமாற்றமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தியிருக்கின்றார்.
நேர்மறையான விடயங்களை பார்க்கும் போது பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கான நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரர்கள் இலங்கை அணியில் காணப்படுகின்றனர். மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் சரித் அசலன்கவிற்கும் தனது திறமையினை நிரூபிக்க பாகிஸ்தானுடனான போட்டி சிறந்த வாய்ப்பாக காணப்படுகின்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை தசுன் ஷானக்க மூலம் இன்னும் பலம் பெறுகின்றது. ஷானக்க 2022ஆம் ஆண்டில் இதுவரை 145.05 என்கிற Strike Rate உடன் அதிரடியாக 396 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, அவரின் துடுப்பாட்ட சராசரி 39.60 ஆக இருக்கின்றது.
எதிர்பார்க்கை குழாம்கள்
இலங்கை XI – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க, தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க
பாகிஸ்தான் XI – மொஹமட் ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர்), பகார் சமான், இப்திக்கார் அஹ்மட், சதாப் கான், மொஹமட் நவாஸ், ஆசிப் அலி, குஸ்தில் சாஹ், ஹரிஸ் ரவுப், நஸீம் சாஹ், மொஹமட் ஹஸ்னைன்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<