பல எதிர்பார்ப்புக்களுடன் இறுதிப் போட்டியில் இலங்கை அணி

829
Sri Lanka vs Pakistan - Final Preview

யாருமே எதிர்பாராத பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றன. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (11) துபாயில் நடைபெறவிருக்கின்றது.

அறிமுகம்

2014ஆம் ஆண்டில் இலங்கை ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்ட போது மொத்தமாக 11 ஆசியக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டியில் ஆடியிருந்தது. 2014ஆம் ஆண்டில் கிண்ணம் வென்ற இலங்கை அதிக தடவைகள் (5) ஆசியக் கிண்ணத்தினை வென்ற அணி என்ற சாதனையை இந்தியாவுடன் சேர்த்து நிலை நாட்டியிருந்தது.

>> WATCH – வனிந்து ஹஸரங்கவின் மீது நம்பிக்கை வைக்கும் தசுன் ஷானக!

அதே ஆண்டில் T20 உலகக் கிண்ணத்தையும் வென்ற இலங்கை அணி, 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப் பெரும் சரிவினை சந்தித்தது. சிரேஷ்ட வீரர்களின் ஓய்வு, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற அணிகளுடனான தொடர் தோல்விகள், அணிக்குள் அடிக்கடி ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக அணித்தலைவர்களின் மாற்றங்கள், பயிற்சியாளர்கள் மாற்றங்கள், போதாக்குறைக்கு இங்கிலாந்தில் இலங்கை வீரர்களின் ஒழுங்கற்ற நடத்தை என அனைத்தும் இலங்கை கிரிக்கெட் அணியினை பாதாளத்திற்குக் கொண்டு சென்றிருந்தன.

ஆனால் ஒரு கிரிக்கெட் சுற்றுத்தொடர் இந்த சிக்கல்களுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் இடையில் சிறு நம்பிக்கை ஒன்று துளிர் விடுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. அது 2019ஆம் ஆண்டில் நடைபெற்றது. சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்ததனை அடுத்து இளம் வீரர்களுடன் தசுன் ஷானக்க இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைவர் பொறுப்பினை எடுத்து பாகிஸ்தான் சென்றதோடு, அங்கே அப்போது முதல் நிலை T20 அணியாக இருந்த பாகிஸ்தானையும் 3-0 என T20 தொடரில் வைட்வொஷ் செய்திருந்தார். காலப்போக்கில் இலங்கையின் ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக மாறிக் கொண்ட தசுன் ஷானக்க இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் நம்பிக்கையாக இருப்பதுடன், 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி ஆடும் முதலாவது பல் அணித்தொடர் (Multiple Team Tournament) ஒன்றின் தலைவராகவும் காணப்படுகின்றார். அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் அணி இரசிகர்களின் எட்டு வருட ஏக்கத்திற்கு ஒரு விடிவாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அமைந்திருக்கின்றது. அத்துடன் 12ஆவது முறையாக இலங்கை இம்முறை ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாடுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மறுமுனையில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் பாகிஸ்தானுக்கும் அதனது சிரேஷ்ட வீரர்களின் ஓய்வின் பின்னரான நாட்கள் சிறப்பாக அமைந்திருக்கவில்லை. ஒப்பிட்டு அளவில் இலங்கையினை விட கடந்த காலங்களில் முன்னேற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரினை வெற்றி கொண்டதன் பின் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அணித்தலைவர் மாற்றம், விமர்சனங்களுக்குள்ளான பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் இன் வருகை, தெரிவுக் குழுவின் பாரபட்சம் குறித்த விமர்சனங்கள், இரண்டாம் நிலை அணிகளுடன் தொடர் தோல்விகள் என பல விடயங்கள் அவ்வணியினையும் பலவீனப்படுத்தியிருந்தது.

எனினும் T20I போட்டிகளில் பாகிஸ்தான் கரம் ஓங்கிய அணியாகவே காணப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் எந்த போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக அரையிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் அதில் துரதிஷ்ட தோல்வியினைத் தழுவிய பின்னர் அடுத்ததாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடுகின்றது.

எனவே இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கும் கௌரவத்திற்குரிய ஒரு மோதலாக 2022ஆம் ஆண்டின் ஆசியக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி மாறியிருக்கின்றது.

>> தனன்ஜய, பிரமோத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? கூறும் ஷானக!

ஆசியக் கிண்ணத்தில் இரு அணிகளதும் பயணம்

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தின் தாம் விளையாடிய முதல் போட்டிகளில் இரு அணிகளும் தோல்வியினைத் தழுவியிருந்தன. ஆப்கானிஸ்தானுடன் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டி வாய்ப்பினை பெறும் என்று எவரும் நினைக்கவில்லை. பாகிஸ்தானும் அதே மாதிரியான எதிர்பார்ப்புக்களையே கொண்டிருந்தது.

ஆனால் தொடரின் எதிர்பார்ப்பு அணிகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்தே ஆசியக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றியதோடு தற்போது கீரிடத்திற்கான மோதலில் காணப்படுகின்றன. இதில் இலங்கை தொடரின் முதல் சுற்றில் ஒரு போட்டியில் தோல்வியினைத் தழுவி, சுபர் 4 சுற்றின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற, முதல் சுற்றில் தோல்வியினைத் தழுவிய பாகிஸ்தான் சுபர் 4 சுற்றில் இலங்கையுடன் தோல்வியடைந்து இறுதிப் போட்டியில் களம் காணவிருக்கின்றது.

இலங்கை – பாகிஸ்தான் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் 1986, 2014 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டிகளில் மோதியிருப்பதோடு இதில் 1986 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் பெற 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இலங்கையினை தோற்கடித்திருந்தது.

புதிய தலைவர்கள்

இரண்டு அணிகளையும் இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்திருக்கும் தலைவர்களான தசுன் ஷானக்க மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சர்வதேச அரங்கில் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் இறுதிப் போட்டியாக ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அமைகின்றது. இந்த வீரர்களில் தசுன் ஷானக்க சிறந்த தலைமைத்துவத்துடன் மட்டுமின்றி, ஒரு வீரராகவும் அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றார்.

ஆனால் பாபர் அசாம் இந்த முறைக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் ஒரு வீரராக எதிர்பார்த்த ஆட்டத்தினை வழங்காத நிலையில் அவருக்கு தனது தாயக அணிக்கு மூன்றாவது ஆசியக் கிண்ணத்தினை வெற்றி கொள்ள இறுதிப் போட்டியில் ஒரு வீரராக பிரகாசிக்க வேண்டிய அழுத்தம் காணப்படுகின்றது.

கற்க வேண்டிய பாடங்கள்

பாகிஸ்தானைப் பொறுத்தவரை சுபர் 4 தொடரில் அவர்கள் விளையாடிய இறுதி இரண்டு போட்டிகளிலும் அவர்களுக்கு எதிர்பார்த்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக இலங்கைக்கு எதிரான மோதலில் அவர்களது துடுப்பாட்ட வரிசை இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்களிடம் பெரிதும் தடுமாறியது. எனவே பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சுக்கு திறமையாக துடுப்பாடும் உத்திகளை இலங்கையுடனான போட்டியில் உபயோகம் செய்ய வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் அணி தமது சுழல்பந்துவீச்சாளர்களின் உபயோகத்தினை கடைசியாக நடைபெற்ற போட்டியிலேயே முழுமையாகப் பெற்றுக்கொண்டது. எனவே சுழல்பந்துவீச்சாளர்கள் மூலம் அபாரம் காட்டிய இலங்கை அணி அதே ஆட்டத்தை தொடர்ச்சியாக (Consistency) வெளிப்படுத்தினால் அது பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆபத்தாக அமையும்.

>> “ஆசியக்கிண்ணத்தை வென்று புதிய பயணத்தை தொடருவோம்” – பியால் விஜேதுங்க

நாணய சுழற்சி அதிஷ்டம்

நாணய சுழற்சி அதிஷ்டம் இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் பல அணிகளுக்கு கைகொடுத்திருக்கின்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தமது கடந்த மூன்று போட்டிகளிலும் இரண்டாவது துடுப்பாட்டத்தை தெரிவு செய்து வெற்றி பெற்றிருக்கின்றது.

கடைசியாக துபாய் மைதானத்தில் நடைபெற்ற 30 T20I போட்டிகளில் 26 முறை இரண்டாவது துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அணிகள் வெற்றி பெற்றதாக தரவுகள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு நாணய சுழற்சி சாதகமாக அமையாது போனால் முதலில் துடுப்பாடும் அணி 190 ஓட்டங்களுக்கு மேல் பெற வேண்டும். ஏனெனில் இங்கே பதிவு செய்யப்பட்ட நான்கு வெற்றிகளில், மூன்று தடவைகள் 190 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன.

2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இரண்டு அணிகளும் T20I போட்டிகளில் இரண்டாவது துடுப்பாடிய தரவுகளை நோக்கும் போது பாகிஸ்தான் தாம் விளையாடிய 17 போட்டிகளில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதோடு, இலங்கை அணி 19 போட்டிகளில் 9 போட்டிகளில் மாத்திரமே வெற்றியீட்டியிருக்கின்றது. இது பாகிஸ்தான் அணி இரண்டாவது துடுப்பாடும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதனை காட்டுகின்றது.

இலங்கையின் பலம்

பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையின் பலம் அதன் சுழல்பந்துவீச்சுத்துறையே. கடந்தகால தரவுகள் பாகிஸ்தான் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் 2021ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டளவில் குறைந்த (120) Strike Rate உடன் துடுப்பாடியதனை காட்டுகின்றது. அத்துடன் இலங்கைக்கு எதிரான மோதலிலும் அவர்கள் சுழல்பந்துவீச்சுக்கு எதிரான துடுப்பாட்டத்தில் தடுமாறியதனை பார்க்க முடியுமாக இருந்தது. வனிந்து ஹஸரங்க T20I போட்டிகளில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக வீசிய 16 ஓவர்களில் 11 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்கின்றார். எனவே சுழல் கைகொடுக்கும் போது பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

பாகிஸ்தானின் பலம்

அணிக்குள் மீள இணைக்கப்படும் சதாப் கான் பாகிஸ்தானின் மத்திய வரிசைக்கு துடுப்பாட்ட வீரராக பலம் சேர்ப்பார் என நம்பப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மோதலில் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட சதாப் கான் இலங்கையுடனான மோதலிலும் திறமை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் ஆசிப் அலி, மொஹமட் நவாஸ் ஆகிய வீரர்களும் விரைவான துடுப்பாட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு பலம் சேர்க்க கூடியவர்களாக காணப்படுகின்றனர்.

உபாதை பிரச்சினைகள் அணி மாற்றங்கள்

கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இரு அணிகளிலும் எந்த உபாதைகளும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியின் இறுதிப் பதினொருவர் அணி எவ்வாறு அமையும் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலையொன்று காணப்படுகின்றது.

>> CLIPS – சரித் அசலங்கவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது இலங்கை அணிக்கு பின்னடைவா? – Cricket Kalam

எதிர்பார்க்கை குழாம்கள்

இலங்கை XI – பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன்க/தனன்ஞய டி சில்வா, தனுஷ்க குணத்திலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, ப்ரமோத் மதுஷான், டில்ஷான் மதுசங்க

பாகிஸ்தான் XI – மொஹமட் ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர்), பகார் சமான், இப்திக்கார் அஹ்மட், சதாப் கான், மொஹமட் நவாஸ், ஆசிப் அலி, குஸ்தில் ஷாஹ், ஹரிஸ் ரவுப், நஸீம் ஷாஹ், மொஹமட் ஹஸ்னைன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<