தனன்ஜய, பிரமோத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? கூறும் ஷானக!

Asia Cup 2022

2441

ஆசியக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பிரமோத் மதுசான் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோருக்கான வாய்ப்புகள் இருக்கும் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக்கிண்ணத்தின் சுபர் 4 சுற்றின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. எவ்வாறாயினும், இந்த இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (11) மோதவுள்ளன.

>> பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி வெற்றிபெற்ற இலங்கை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சுபர் 4 சுற்றில் சரித் அசலங்க மற்றும் அசித பெர்னாண்டோவுக்கு பதிலாக உள்வாங்கப்பட்ட தனன்ஜய டி சில்வா மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரமோத் மதுசான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், தனன்ஜய டி சில்வா துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காவிட்டாலும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

இந்தநிலையில், இறுதிப்போட்டியில் இவர்களுக்கான வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே தசுன் ஷானக, “கட்டாயமாக வாய்ப்பு இருக்கவேண்டும். இறுதி தீர்மானம் தேர்வுக்குழுவிடம் உள்ளது. அவர்களுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்கவேண்டும்” என்றார்.

இதேவேளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தப்போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிய போதும், நிதானமாக ஆடிய பெதும் நிஸ்ஸங்கவின் துடுப்பாட்டம் குறித்தும் தசுன் ஷானக குறிப்பிட்டார்.

“இறுதியாக நடைபெற்ற தொடர்களை எடுத்துக்கொண்டால் பெதும் நிஸ்ஸங்க சிறப்பாக ஆடியுள்ளார். அவுஸ்திரேலிய தொடரில் மாத்திரமே ஓட்டங்களை பெறவில்லை. அவருடைய திறமையை நாம் அறிவோம். எமக்கு தேவையான விடயத்தை அவர் செய்கின்றார். எனவே, பெதுமிடமிருந்து அணிக்கு தேவையான விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்” என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அணியின் தொடர் வெற்றிகள் தொடர்பில் குறிப்பிட்ட இவர், “எமக்கு சரியான தொடர்ச்சி கிடைத்துள்ளது. ஆரம்ப துடுப்பாட்டம், மத்தியவரிசை துடுப்பாட்டம் என வீரர்களுக்கு அவர்களுடைய பணி சரியாக தெரிந்துள்ளது. பந்துவீச்சாளர்களும் இந்தவிடயத்தை சரியாக உணர்ந்துள்ளனர். எமது அணியிடம் உள்ள பல்சுவைத்தன்மையின் காரணமாக எதிரணிகளால் எமக்கு சவால் கொடுப்பது கடினம்” என்றார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ண இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை நேரப்படி இரவு 07.30 இற்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<