2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண T20 தொடரின் இறுதி குழுநிலை போட்டியில் ஹொங் கொங் அணியினை எதிர்கொண்ட பாகிஸ்தான் 155 ஓட்டங்களால் சாதனை வெற்றியினை பதிவு செய்திருப்பதோடு, ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றுக்கு குழு A இல் இருந்து இந்தியாவினை அடுத்து தெரிவாகும் இரண்டாவது அணியாகவும் மாறியிருக்கின்றது.
>> மெண்டிஸ், ஷானக, அசிதவின் அற்புதங்களுடன் திரில் வெற்றிபெற்ற இலங்கை!
ஷார்ஜா நகரில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங் கொங் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 193 ஓட்டங்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசிய மொஹமட் ரிஸ்வான் 57 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 78 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் பகார் சமானும் அரைச்சதம் பெற்று 41 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார்.
இவர்களோடு இறுதிநேர அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குஸ்தில் சாஹ் ஆட்டமிழக்காமல் 15 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்களை பெற்றிருந்தார். ஹொங் கொங் அணியின் பந்துவீச்சில் எஹ்சான் கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 194 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஹொங் கொங் அணி 10.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 38 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.
ஹொங் கொங் அணி பெற்ற 38 ஓட்டங்கள் T20I போட்டிகள் வரலாற்றில் அவர்கள் பெற்ற அதிகுறைவான ஓட்டங்களாக மாற, பாகிஸ்தான் அணியுடன் ஒரு அணி T20I போட்டிகளில் பெற்ற அதிகுறைவான ஓட்டங்களாகவும் அது பதிவாகியது.
ஹொங் கொங் அணி துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் கூட இரு இலக்க ஓட்டங்களை தாண்டியிராத நிலையில், பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் சதாப் கான் 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் நவாஸ் 3 விக்கெட்டுக்களையும், நஸீம் சாஹ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> “ஆப்கானிஸ்தானிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்” – பானுக ராஜபக்
போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ரிஸ்வான் தெரிவாகினார்.
அதேவேளை பாகிஸ்தான் அணி சுபர் 4 சுற்றின் தமது முதல் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) இந்தியாவை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
முடிவு – பாகிஸ்தான் அணி 155 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<