இலங்கையில் நடைபெறவிருந்த ஆசியக்கிண்ணத்தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இலங்கை கிரிக்கெட் சபை சிறப்பாக நடத்தி முடித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை தற்போது நடத்திவருகின்றது.
>> ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டோக்ஸ்
ஆசியக்கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமம் இலங்கையிடம் உள்ளபோதும் ஷார்ஜா மற்றும் டுபாயில் ஆகஸ்ட் 27ம் திகதி முதல் செப்டம்பர் 11ம் திகதிவரை தொடரை நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, “பத்து அணிகளுக்கு இடையிலான தொடரை நடத்துவது, இரண்டு அணிகளுக்கு இடையிலான தொடரை நடத்துவது போன்று இருக்காது.
ஒவ்வொரு அணிக்கும் ஒரு பேருந்துகள் வீதம் 10 பேருந்துகளை எரிபொருளுடன் வழங்கவேண்டும். அதுமாத்திரமின்றி வீரர்களின் விளையாட்டு உபகரணங்களை எடுத்து செல்வதற்கான வேன் ஒன்றையும் எரிபொருளுடன் வழங்கவேண்டும். அத்துடன், முகாமையாளர்கள், அனுசரணையாளர்கள், மைதான விளக்குகள் போன்ற தேவைகளுக்கான எரிபொருளும் வேண்டும்” என்றார்.
அதுமாத்திரமின்றி இதுபோன்ற தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு நாட்டின் பொருளாதார சூழ்நிலை சரியாக இல்லை. இரண்டு இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளும் உள்ளன. இதனை பார்வையிடுவதற்கான ரசிகர்கள் அதிகம். ஆனால், ரசிகர்கள் செல்வதற்கான எரிபொருளிலும் சிக்கல்கள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் தொடரை நடத்துவதற்கான சரியான இடமாக ஐக்கிய அரபு இராச்சியம் இருப்பதால், தொடரை அங்கு மாற்றுவதற்கான ஏற்படுகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏற்கனவே ஒரு தடவை ஆசியக்கிண்ணத்தொடர் நடைபெற்றுள்ளது. 2018ம் ஆண்டு ஆசியக்கிண்ணத்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒருநாள் தொடராக நடைபெற்றிருந்தது. இம்முறை தொடர் நடைபெற்றால் T20I போட்டிகளாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<