“இலங்கை ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எமக்கு சக்தி” – சில்வர்வூட்

Asia Cup 2022

1683
Asia Cup 2022 - Chris Silverwood

இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடும் போது எந்தவித அழுத்தமும் இருக்காது என இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.

ஆசியக்கிண்ணத் தொடருக்கான ஊடவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் (25) நடைபெற்றபோதே சில்வர்வூட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

>> ஆப்கானிஸ்தானைவிட அனுபவ ரீதியில் நாம் பலமானவர்கள்” – பானுக ராஜபக்ஷ

ஆசியக்கிண்ணத்தொடரை இலங்கையிலிந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றியதன் மூலம், இலங்கையில் விளையாடும் அழுத்தம் இலங்கை அணியிடமிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டபோது, கிரிஸ் சில்வர்வூட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“என்னுடைய அனுபவத்தை பொருத்தவரை இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடினால், ரசிகர்கள் குவிந்திருப்பதுடன், சொந்த ரசிகர்களுக்கு முன் விளையாடும் போது அற்புதமாக இருக்கும். நான் இலங்கையில் எந்தவித அழுத்தத்தையும் பார்க்கவில்லை. ரசிகர்களிடமிருந்து நேர்மறையான சக்திகள் கிடைக்கின்றன.

இதனை நான் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பார்த்தேன். வீரர்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடியதுடன், இலங்கையில் கிரிக்கெட்டின் மூலமாக மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது. மக்கள் கிரிக்கெட்டை எந்த அளவிற்கு தழுவியிருக்கின்றார்கள் என்பதனை நான் உணர்ந்ததுடன் வீரர்களும் உணர்ந்திருந்தனர். எனவே, இலங்கையில் விளையாடுவது எமக்கு எப்போதும் அழுத்தத்தை கொடுக்கவில்லை. நேர்மறையான சக்திகளை கொடுக்கிறது என நினைக்கிறேன்” என்றார்.

இலங்கை அணி முதல் போட்டியில் நாளைய தினம் (27)ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியானது ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்களுடைய அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளது. எனவே, ஆப்கானிஸ்தான் அணியானது மிகவும் சவாலான அணியாக இருக்கும் என சில்வர்வூட் குறிப்பிட்டுள்ளார்.

“ஆப்கானிஸ்தான் அணி மிகவும் சவாலான அணி. இந்த தொடரில் விளையாடவுள்ள அத்தனை அணிகளும் சவாலானவை. T20I போட்டிகளை பொருத்தவரை குறிப்பிட்ட நாளில் எந்த அணி வேண்டுமானாலும், எந்த அணியையும் வீழ்த்திவிடலாம்.

நாம் எப்போதும் ஒவ்வொரு அணிக்கும் மரியாதை கொடுக்கிறோம். அனைத்து அணிகளையும் ஒரே அளவில் பார்க்கிறோம். இந்த தொடரிலும் நாம் அதனை செய்வோம். ஒவ்வொரு போட்டியிலும் கட்டாயம் வெற்றிபெறவேண்டும். எனவே இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் என அனைத்து அணிகளையும் ஒரே மாதிரியாகக்கொண்டு போட்டியிடுவோம்” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<