ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்

1595

2020ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இவ்வருடம் நடைபெறாது என ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் இன்று (09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் ஒத்திவைக்கப்பட்ட குறித்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. 

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 1984ஆம் ஆண்டு முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட ஆசிய அணிகள் பங்குபற்றும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் பின்னர் அடுத்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2020ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

 ஆசியக் கிண்ணப் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன – சௌரவ் கங்குலி

இந்நிலையில் பாகிஸ்தான் சென்று ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா மறுத்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இவ்வருடம் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், இவ்வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸிற்கு மத்தியில் நடைபெறுமா? என்ற கேள்வி நிலவிவருகின்ற நிலையில் தற்போது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதேவேளை ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்திடமிருந்து குறித்த அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னர் நேற்று (08) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி, ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகம் முழுவதையும் காவு கொண்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள பயண காட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல் சட்டங்கள், அடிப்படை சுகாதார கட்டுப்பாடான சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பல்வேறு சவால்களினால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 122

அந்த அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் (2021) ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. அதாவது 2020ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டு உரிமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் காணப்பட்டது. அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டு உரிமை இலங்கை கிரிக்கெட் சபையிடம் காணப்பட்டது.

இந்ந நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட் சபையிடம் காணப்பட்ட உரிமை 2021ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை 2020ஆம் ஆண்டுக்கான ஏற்பாட்டு உரிமை 2022ஆம் ஆண்டுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாவும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

>>மேலும்  பல கிரிக்கெட் செய்திகளுக்கு<<