ஆசியக் கிண்ணத் தொடரின் ஆறாவது மோதலாக வியாழக்கிழமை (21) நடைபெற்ற பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில், பங்களாதேஷ் அணியினை 136 ஓட்டங்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.
14ஆவது முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், குழு B அணிகளின் மூன்றாவது லீக் ஆட்டமாகவும், ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி லீக் ஆட்டமாகவும் இப்போட்டி அபு தாபி ஷேக் சயேத் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
மாலிங்கவின் பந்துவீச்சு வீண்; ஆசிய கிண்ண முதல் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி
ஆசியக் கிண்ணத் தொடரின், 14 ஆவது அத்தியாயம் இன்று (15)..
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் என இரண்டு அணிகளும் அவர்களது முன்னைய போட்டிகளில் இலங்கை அணியுடன் அதிரடி வெற்றிகளை பதிவு செய்து ஆசியக் கிண்ணத் தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவாகிய நிலையிலேயே தங்களுக்குள் பலப்பரீட்சை நடாத்த தயராகியிருந்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பாடிய ஆப்கான் அணிக்கு சிறந்த துவக்கம் அமையவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இஹ்சானுல்லாஹ்வின் விக்கெட் 8 ஓட்டங்களுடன் வீழ, இலங்கை அணியுடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்வதற்கு அரைச்சதம் ஒன்றுடன் உதவிய றஹ்மத் சாஹ்வும் 10 ஓட்டங்களுடன் ஏமாற்றம் தந்தார்.
இதனை அடுத்து சற்று பொறுமையாக ஆடிய ஆப்கான் அணிக்கு, மற்றைய ஆரம்ப வீரராக வந்த மொஹமட் சஹ்சாத் மற்றும் ஹஸ்மத்துல்லாஹ் சஹிதி ஆகியோர் ஆறுதல் தந்தனர். 47 பந்துகளை எதிர்கொண்ட மொஹமட் சஹ்சாத் 37 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, ஹஸ்மதுல்லாஹ் சஹிதி தனது 3 ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் 58 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இதனை அடுத்து பங்களாதேஷ் இப்போட்டியில் அறிமுகம் செய்திருந்த சுழல் பந்துவீச்சாளரான அபு கைதர் தனது கன்னிப் போட்டியில் திறமையினை வெளிக்கொணர்ந்தார். கைதருக்கு பங்களாதேஷின் சிரேஷ்ட வீரரான சகீப் அல் ஹஸன் உம் கைகொடுக்க ஆப்கான் அணி சடுதியாக விக்கெட்டுக்களை இழக்க தொடங்கி ஒரு கட்டத்தில் 160 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து பின்னடைவை சந்தித்தது.
எனினும், இத் தருணத்தில் நேற்று (20) தனது 20 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய ரஷீத் கான் மற்றும் குல்படின் நயீப் ஜோடி இணைந்து பொறுமையாக ஆடத் தொடங்கினர்.
பின்னர் இரண்டு வீரர்களும் பொறுமைக்கு விடை கொடுத்து விட்டு பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சினை துவம்சம் செய்யத் தொடங்கினர். ஆப்கானிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் எஞ்சியிருந்த 56 பந்துகளையும் எதிர்கொண்ட இரண்டு வீரர்களும் 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
இவர்களின் இணைப்பாட்ட உதவியோடு ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்திற்காக உதவிய ரஷீத் கான் 32 பந்துகளுக்கு 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களையும், குல்படின் நயீப் 38 பந்துகளுக்கு 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக சகீப் அல் ஹஸன் 4 விக்கெட்டுக்களையும், அபு கைதர் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.
தொடர்ந்து 256 என்கிற சற்று கடினமான வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டத் தொடங்கியது. அவ்வணியின் ஆரம்ப வீரர்களாக வந்த நஷ்முல் ஹொசைன் சன்டோ, லிடன் ஹொசைன் ஆகிய இருவரும் பத்து ஓட்டங்களை கூட தாண்டியிருக்கவில்லை.
அதிர்ச்சி தோல்வியுடன் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை
அபுதாபி நகரில் நேற்று (17) நடைபெற்று முடிந்திருக்கும்…
பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்களில் சகீப் அல் ஹஸன் தவிர ஏனைய பங்களாதேஷ் வீரர்கள் ஆப்கானிஸ்தானின் சுழலுக்கு தடுமாறத் தொடங்கினர். அந்த வகையில் மஹமதுல்லாஹ், மொசாதிக் ஹொசைன், மொஹமட் மிதுன் என யாரும் பங்களாதேஷ் அணிக்காக பிரகாசிக்காமல் போக அவ்வணி 42.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படு தோல்வியடைந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சகீப் அல் ஹஸன் 32 ஓட்டங்களைப் பெற்று அவ்வணியின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.
இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்காக ஏற்கனவே துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த ரஷீத் கான், குல்படின் நயீப் மற்றும் இளம் சுழல் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி, இந்த வெற்றியுடன் குழு B அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஆப்கானிஸ்தான் அணிக்காக துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பிரகாசித்த ரஷீத் கானிற்கு வழங்கப்பட்டது.
ஆசியக் கிண்ணத்தில் இன்று (21) அதன் அடுத்த சுற்றான “சுபர் 4” சுற்று இடம்பெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி “சுபர் 4” சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியினையும், பங்களாதேஷ் அணி இந்தியாவையும் எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
ஆப்கானிஸ்தான் – 255/7 (50) ஹஸ்மத்துல்லாஹ் சஹிதி 58(92), ரஷீத் கான் 57(32)*, குல்படின் நயீப் 42(38)*, சகீப் அல் ஹஸன் 42/4(10)
பங்களாதேஷ் – 119 (42.1) சகீப் அல் ஹஸன் 32, ரஷீத் கான் 13/2(9), முஜிபுர் ரஹ்மான் 22/2(8.1), குல்படின் நயீப் 30/2(6)
முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 137 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<