எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி ஹொங்கொங்கில் ஆரம்பமாகவுள்ள ஆசிய எழுவர் (Asia Sevens) கிண்ண ரக்பி போட்டித் தொடருக்காக, 20 வயதுக்குட்பட்ட அணியிலிருந்து 4 இளம் வீரர்கள் இலங்கை தேசிய எழுவர் ரக்பி குழாமுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிப் போட்டியின் தோல்வியினால் ஆசிய செவன்ஸ் கிண்ணத்தை இழந்த இலங்கை
ஆசியாவின் முக்கிய ரக்பி தொடர்களில் ஒன்றான 20 வயதிற்குட்பட்ட ஆசிய செவன்ஸ் ரக்பி தொடரில் …
கடந்த வருடம் இடம்பெற்ற போட்டித் தொடரில் ஹொங்கொங் அணிக்கு அடுத்தபடியாக இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடமும் போட்டித் தொடர் மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கும் இத்தருணத்தில் இலங்கை அணி மிகப்பொறுப்புடன் ஆட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த வருடம் இப்போட்டித் தொடர் ஹொங்கொங், தென்கொரியா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் மூன்று கட்டங்களாக நடைபெறுவுள்ளது.
முன்னதாக ஆசிய 20 வயதின் கீழ் போட்டித் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இளையோர் அணி, இறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணியுடன் தோல்வியுற்றாலும் இப்போட்டித் தொடரில் இலங்கை அணி விளையாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக 20 வயதின் கீழ் அணியில் விளையாடிய நவீன் ஹேனகன்கானமகே, வாஜித் பவ்மி, அதீச வீரதுங்க மற்றும் சுபுன் தில்ஷான் ஆகியோர் இலங்கை தேசிய அணியுடனான பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, 20 வயதின் கீழ் அணியின் தலைவர் நவீன் ஹேனகன்கானமகே குறித்த போட்டித்தொடரில் 9 ட்ரைகளை பெற்றுக்கொண்டதன் மூலம் தொடரில் அதிக ட்ரைகளைப் பெற்றவர்களில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார். புனித தோமியர் கல்லூரி அணியின் முன்னாள் தலைவரான இவர் இலங்கை சுப்பர் செவன்ஸ் மற்றும் வர்த்தக ரீதியிலான (மேர்க்கன்டைல்) அணிகளுக்காகவும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 வயதின் கீழ் அணியின் துணைத் தலைவரும் இலங்கை கடற்படை அணி வீரருமான சுபுன் பஸ்னாயக்க அதிக அனுபவம் வாய்ந்த வீரராகக் கருதப்படுகிறார். அதீச வீரதுங்க கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றொரு வீரர் என்பதுடன் இவர்கள் இருவரும் மிக முக்கிய வீரர்களாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் வாஜித் பவ்மி கடந்த வருடம் 20 வயதின் கீழ் அணிக்கு தெரிவு செய்யப்பட்டதன் மூலமும் இம்முறை எழுவர் அணிக்கு தெரிவு செய்யப்பட்டதன் மூலமும் தனது முக்கியத்துவத்தை வெளிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் பயிற்சிகளில் ஈடுபடும் எழுவர் அணிக்கான குழாமானது இளமையும் அனுபவமும் கலந்த திறமை மிக்க குழாமாகக் காணப்படுகின்ற நிலையில் சுற்றுப்பயணக் குழாமில் உள்வாங்கப்படப்போகும் அந்த இறுதி 12 வீரர்கள் யாரென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்
இலங்கை அணிக்கு, நியுஸிலாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் வுட்ஸ்சினால் பயிற்சியளிக்கப்படுகின்றது. இப்போட்டித் தொடரே இலங்கை அணியின் பயிற்சியாளராக இவர் செயற்படும் கன்னித் தொடராகும். இவருடன் இணைந்து இலங்கை எழுவர் அணியின் வெற்றிகரமான பொறுப்பாளராகக் கருதப்படும் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த மெட் டர்ணர் பணியாற்ற உள்ளமை முக்கிய அம்சமாகும்.