இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரும், நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இப்பருவத்துக்கான இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் வொர்செஸ்டர்ஷயார் அணிக்காக முதற்தடவையாக விளையாடவுள்ளார்.
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பல சாதனைகளை நிகழ்த்திய அஷ்வின், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரில் 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இலங்கை மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழத்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழத்தினார்.
எனினும், இலங்கையுடன் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வினுக்கு ஓய்வு அளிக்க இந்திய தெரிவுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனையடுத்து தற்போது இடம்பெற்றுவருகின்ற இங்கிலாந்து கவுண்டி போட்டியில் வொர்செஸ்டர்ஷயார் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்படி இம்மாத இறுதியில் அஷ்வின் கவுண்டி போட்டிகளில் விளையாடவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரிற்காக அஷ்வினுக்கு மீண்டும் நாடு திரும்பவேண்டும் என இந்திய தெரிவுக்குழு அறிவித்துள்ளதால், வொர்செஷ்டர்ஷயார் அணிக்காக 2 போட்டிகளில் மாத்திரம் அவர் விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான காயங்களே தோல்விக்கு காரணம் – சந்திமால்
சரியாக ஓர் ஆண்டுக்கு முன் உலகின் முதல் நிலை அணியான..
ஆனால், இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 50 ஓவர்கள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்த அஷ்வின் 2016ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து அவ்வப்போது நீக்கப்பட்டார். இறுதியாக நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற அஷ்வினுக்கு சிறப்பாக செயற்பட முடியாமல் போனது. அவர் அந்த தொடரில் 31.93 சராசரியை மாத்திரம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது டெஸ்ட் எதிர்காலம் குறித்து கடந்த மாதம் விஸ்டன் இந்தியா இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், இந்திய அணியில் நீடிப்பது என்பது எனக்கு எப்போதும் கத்தியின் விளிம்பில் இருப்பதைப் போல உள்ளது. நான் அணியில் இருந்து வெளியேறிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது ஒரு மோசமான நாள் அல்லது மோசமான போட்டியால் ஏற்பட்ட பின்விளைவுதான் என நினைப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
எனவே எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய ஒருநாள் அணியில் அஷ்வின் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள கவுண்டி போட்டிகளில் அஷ்வின் சிறப்பாக செயற்படும் பட்சத்தில் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இந்திய அணி எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள அதேநேரம், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் சபை ஏற்கனவே அந்நாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியா முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3 – 1 என இழந்த பிறகு அவ்வணியின் தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்தின் கவுண்டி அணிக்காக விளையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான செடிஸ்வர் புஜாரா, நொட்டிங்ஹம்ஷயார் அணிக்கு விளையாடி வருவதுடன், இறுதியாக நடைபெற்ற போட்டியில் அவர் சதம் அடித்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே இலங்கையுடனான டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், புஜாரா, அஷ்வின் மற்றம் இஷான்த் சர்மா ஆகியோர் இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இடதுகை சுழல்பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவும் கவுண்டி போட்டியில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை அவரை எந்தவொரு அணியும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. மேலும் இங்கிலாந்தின் வோர்விக்ஷயார் அணிக்காக விளையாடவுள்ளதாக இஷான்த் சர்மா உறுதிப்படுத்தினாலும், தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் அவ்வாறு எந்தவொரு அணியுடனும் ஒப்பந்தம் செய்யவில்லை என அவர் மறுத்திருந்தார்.