இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நிறைவைத் தொடர்ந்து பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருந்த ரங்கன ஹேரத் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டதுடன், ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி முதலிரண்டு இடங்களிலும் முறையே இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோருடன் மூன்றாவது இடத்தில் ரங்கன ஹேரத் காணப்படுகின்றார். இதன் காரணமாக, ஆசிய சுழற்பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டு நிலைகள் முன்னேறி 17 ஆம் இடத்தில் காணப்படுகின்றார். மேலும், திமுத் கருணாரத்ன 36 ஆம் இடத்திற்கும், பந்து வீச்சில் அசத்திய நுவன் பிரதீப் 30ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் இணைக்கப்பட்ட திரிமான்ன, சந்தகன்
அத்துடன் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நிறைவுற்றது. அப்போட்டியில் சகலதுறையிலும் சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 25 ஆவது நிலைக்கு முன்னேறியதுடன் சகலதுறை வீரர்களின் பட்டியலில் வெர்னன் பிலெண்டரை பின்தள்ளி ஐந்தாம் இடத்தை கைப்பற்றிக் கொண்டார்.
இந்திய அணியானது காலி மைதானத்தில் பெற்ற வெற்றியுடன் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்காவை 239 ஓட்டங்களினால் தோற்கடித்த இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளை கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கின்றது.
இதேவேளை, இவ்விரண்டு தொடர்களிலும் திறமையை வெளிக்காட்டி வரும் பல வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கை – இந்திய போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 190 ஓட்டங்கள் விளாசிய ஷிகர் தவான் 21 இடங்கள் முன்னேறி துடுப்பாட்ட வீரர்களுக்கான தர வரிசையில் 39 ஆவது நிலையை தனதாக்கிக் கொண்டார். சேதஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தொடர்ந்தும் நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை தக்கவைத்துக் கொண்டதுடன், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் காணப்படுகின்றார்.
ஐசிசி தரவரிசை பட்டியல்