உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் புதிய மைல்கல்லை எட்டினார் அஸ்வின்

Sri Lanka tour of India 2022

263

ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனையை இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட அஸ்வின், முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதில் இரண்டாவது இன்னிங்ஸில் விஷ்வ பெர்னாண்டோவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 100ஆவது விக்கெட்டை அவர் வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக அஸ்வின் சாதனை படைத்தார்.

அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகள் மற்றும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகள் என மொத்தம் 21 போட்டிகளில் ஆடி அஸ்வின் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

35 வயதான அஸ்வின், இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 442 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 30 ஐந்து விக்கெட் குவியலும், ஏழு 10 விக்கெட் குவியலும் அடங்கும்.

அதுமாத்திரமின்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 8ஆவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

இதில், இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது கபில் தேவின் 434 விக்கெட்கள் என்ற சாதனையைக் கடந்த அஸ்வின், இந்திய பந்துவீச்சாளர்களில் 619 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள அனில் கும்ளேவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இலங்கைக்கு எதிரான மொஹாலி டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின், துடுப்பாட்டத்தில் அரைச்சதமும் எடுத்து அசத்தினார்.

இதேவேளை, பெங்களூரு டெஸ்டில் அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயினை (439 விக்கெட்கள்) பின்னுக்குதள்ளி 8ஆவது இடத்தைப் பிடித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன், ஷேன் வோர்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன், அனில் கும்ப்ளே, கிளென் மெக்ராத், ஸ்டூவர்ட் பிரோட் மற்றும் கர்ட்னி வோல்ஷ் ஆகியோர் முதல் ஏழு இடங்களில் உள்ளனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<