பொதுநலவாய விளையாட்டு விழா தகுதிகாண் போட்டிகளில் களமிறங்கும் அஷ்ரப், சப்ரான்

547

2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச விளையாட்டு திருவிழாவாக அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா அமையவுள்ளது. இதில் இலங்கை மெய்வல்லுனர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வீரர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதி தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சுமார் ஒரு தசாப்தங்களாக கிழக்கு மாகாணத்தைப் பிரிநிதித்துவப்படுத்தி சர்வதேச மற்றும் உள்ளுர் மெய்வல்லுனர் போட்டிகளில் 100, 200 மீற்றர் மற்றும் 4×100 அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பொத்துவில்லைச் சேர்ந்த ஏ.எல்.எம் அஷ்ரப், முதல் தடவையாக பொதுநலவாயாக நாடுகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

இதன்படி, பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவின் 4×100  அஞ்சலோட்டப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய குழாமில் இடம்பெற்றுள்ள அஷ்ரப், தனது கன்னி பயணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பு

முன்னதாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட அவர், 10.68 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலாவது இடத்தைப் பெற்றுக்கெண்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு, குறித்த போட்டித் தூரத்தை 10.58 செக்கன்களில் ஓடி முடித்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன் பிரதிபலனாக இந்தியாவில் கடந்த வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற 22 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்ட இலங்கை குழாமிலும் அவர் இடம்பிடித்தார்.

இந்நிலையில், 95 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரப், போட்டியை 10.71 செக்கன்களில் ஓடி முடித்து 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, கிரிகிஸ்தான் திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றிய அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.51 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்று இவ்வருடத்துக்கான தனது சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.

அதன் பிறகு மாத்தறையில் நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், போட்டி தூரத்தை 10.86 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றதுடன், 43 வருட கால தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் கிழக்கு மாகாணத்துக்கு 4 x 100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த அணியின் தலைவராகவும் அஷ்ரப் செயற்பட்டார்.

அந்தவகையில், பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இவ்விளையாட்டு விழாவானது உலகின் 2 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் என வர்ணிக்கப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ள முதல் வீரராகவும் அஷ்ரப் வரலாற்றில் இடம்பெறவுள்ளார்.

எனவே, கிழக்கு மண்ணுக்கு மாத்திரமல்லாது, இலங்கையிலுள்ள சிறுபாண்மை இன மக்களின் அடையாளமாக மெய்வல்லுனர் அரங்கில் அண்மைக்காலமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற அஷ்ரப்புக்கு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள தகுதிகாண் போட்டிகளில் சிறந்த காலத்தைப் பதிவு செய்து பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவுக்கு தெரிவாவதற்கு எமது இணையத்தளத்தின் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிலையில், கடந்த 2 தசாப்தங்களாக தேசிய மெய்வல்லுனர் அரங்கில் ஜொலித்துக் கொண்டிருக்கின்ற மற்றுமாரு அனுபவமிக்க வீரரான தென்மாகாணம் வெலிகமையைச் சேர்ந்த மொஹமட் சப்ரானும், இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவின் 4 x 100 அஞ்சலோட்டப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய குழாமில் இடம்பெற்றுள்ளார்.

முன்னதாக 2010 இந்தியா (டெல்லி) 2014 ஸ்கொட்லாந்து (கிளாஸ்கோ) ஆகிய நாடுகளில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிற்கான தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி 4 x 100 அஞ்சலோட்ட குழாமுக்கு சப்ரான் தெரிவாகியிருந்தார். எனினும், தேசிய மெய்வல்லுனர் சம்மேளனம், இறுதி நேரத்தில் 4 x 400 அஞ்சலோட்ட அணிக்கு குறித்த போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளை வழங்கியதால் அவரால் பங்குபற்ற முடியாமல் போனது.

இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக தோள்பட்டை உபாதைக்குள்ளாகி ஒருசில காலம் மெய்வல்லுனர் அரங்கிலிருந்து விலகியிருந்த சப்ரான், சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மெய்வல்லுனர் அரங்கிற்கு திரும்பினார். இதில் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான முதலாவது தகுதிகாண் போட்டிகளில் கலந்துகொண்ட சப்ரான், 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.93 செக்கன்களில் நிறைவுசெய்து 3 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.70 செக்கன்களில் ஓடிமுடித்து 4 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

44ஆவது தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் பெப்ரவரியில்

இதன் பிரதிபலனாக இந்தியாவில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்ட அணியிலும் அவர் இடம்பிடித்தார்.

எனவே தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாகவும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் நோக்கில் களமிறங்கவுள்ள மொஹமட் சப்ரானுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மேற்பார்வையுடன் நடைபெறவுள்ள இத்தகுதிகாண் போட்டிகளில் பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான அடைவுமட்டங்களை பூர்த்தி செய்த மற்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளில் அந்தந்த போட்டிப் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்ற வீரர்களின் அடைவுமட்டத்தினைப் பெற்றுக்கொண்ட வீர, வீராங்கனைகளுக்கு மாத்திரம் இதில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், 13 வீரர்கள் (8 வீரர்கள், 5 வீராங்கனைகள்) மாத்திரம் பொதுநலவாயாக நாடுகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கோலூன்றிப் பாய்தல், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட மைதான நிகழ்ச்சிகளுக்கும், 100, 200, 400, 800, 1500, மற்றும் 3000 மீற்றர் தடை தாண்டல் உள்ளிட்ட சுவட்டு மைதான நிகழ்ச்சிகளுக்கும் இத்தகுதிகாண் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக, இலங்கையின் தேசிய மரதன் ஒட்ட சம்பியனான ஹிருனி விஜயரத்ன, அமெரிக்காவின் டெக்ஸாஸில் கடந்த வாரம் நடைபெற்ற ஹியுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் தனது சிறந்து காலத்தைப் பதிவு செய்து 8 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை 2 மணித்தியாலம் 36 நிமி. 35 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் உறுதிசெய்தார்.

இதேவேளை, இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் 13 வகையான போட்டிகளுக்காக இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, மெய்வல்லுனர், பளுதூக்கல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், மேசைப்பந்து, எழுவர் ரக்பி, கடற்கரை கபடி, கடற்கரை கரப்பந்தாட்டம், துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டிக், பெட்மிண்டன், குவாஷ் மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய போட்டிகளுக்காக இலங்கையிலிருந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டிகளுக்காக தகுதியை பெற்றுக்கொண்ட 11 பேர் கொண்ட இலங்கை பளுதூக்கல் குழாமை இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.