உலக உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்று அஷ்பாக் சாதனை

2024 IFBB World Fitness Championships

83
2024 IFBB World Fitness Championships

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற IFBB  உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் தகுதி சம்பியன்ஷிப்பில் இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி கனிஷ்ட பிரிவில் போட்டியிட்ட அஷ்பாக் அசி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

உடற்தகுதி மற்றும் உடற்கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 2024ஆம் ஆண்டுக்கான IFBB உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் தகுதி சம்பியன்ஷிப் தொடர் கடந்த 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 6 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான உடற்கட்டமைப்பு கனிஷ்ட பிரிவில் இலங்கை சார்பில் போட்டியிட்ட அஷ்பாக் அசி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். சர்வதேச அளவில் அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

இப்போட்டியில் ஜப்பானின் டான் இஷியாமா தங்கப் பதக்கத்தையும், சீனாவின் ஜாங் யான் சென் வெள்ளிப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்.

கொழும்பு – வத்தளையை பிறப்பிடமாகக் கொண்ட 22 வயதான அஷ்பாக், அமல் சர்வதேசப் பாடசாலையில் பாடசாலைக் கல்வியை மேற்கொண்டார். தனது 15 வயதில் இருந்து உடற்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தி அதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த அவர், அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி பல வெற்றிகளையும் பெற்றுக்கொண்டார்.

2022 இல் நடைபெற்ற MR. Novice உடற்கட்டமைப்பு மற்றும் உடல் தகுதி சம்பியன்ஷிப் மற்றும் 2023இல் MR. Sri Lanka உடற்கட்டமைப்பு மற்றும் உடல் தகுதி சம்பியன்ஷிப் ஆகிய போட்டித் தொடர்களில் ஆண்களுக்கான உடற்கட்டமைப்பு கனிஷ்ட பிரிவில் ஒட்டுமொத்த சம்பியனாக அஷ்பாக் மகுடம் சூடினார்.

அதேபோல, இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற கொழும்பு உடற்கட்டமைப்பு போட்டித் தொடரில் உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கட்டழகர் பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு தொடர்ச்சியாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த அஷ்பாக், முதல்தடவையாக ஜப்பானில் நடைபெற்ற IFBB உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடல் தகுதி சம்பியன்ஷிப்பில் பங்குபற்றி வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக, எந்தவொரு அனுசரணையும் இன்றி இந்த போட்டித் தொடரில் பங்குகொண்ட அஷ்பாக், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 7 மில்லியன் ரூபா தனது சொந்த பணத்தை இதற்காக செலவழித்து பதக்கமொன்றையும் வென்று இலங்கை மண்ணுக்கு கௌரவத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<