ஆஷஸ் டெஸ்ட்டில் பட் கம்மின்ஸ் வரலாற்று சாதனை

Ashes- Series - 2021

7767
Getty Image

ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2ஆவது அவுஸ்திரேலிய தலைவர் என்ற சாதனையை பட் கம்மின்ஸ் நிகழ்த்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த ஆஷஸ் கிரிக்கெட்டின் 2021/22 தொடர் இன்று அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது,

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர் ரோரி பர்ன்ஸின் விக்கெட்டை முதல் பந்திலேயே அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தினார்.

இதன்மூலம் 85 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக 1936ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மெக்ரோமிக், இங்கிலாந்து வீரர் வொர்த்திக்டெனை முதல் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார்.

>>தனன்ஜய, மெண்டிஸ், எம்புல்தெனியவின் அபாரத்தால் 2-0 என தொடரை வென்ற இலங்கை

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டாவிட் மலான் 6 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஜோ ரூட் ஓட்டமின்றியும் வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்ததாக நீண்ட நாட்களுக்குப்பின் கிரிக்கெட்டில் களமிறங்கிய நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீட்க போராடிய ஹசீப் ஹமீத் (25), ஒல்லி போப் (35), ஜோஸ் பட்லர் (39) ஓரளவு நம்பிக்கை கொடுத்து ஓட்டங்களை எடுத்து போராடிய போதிலும் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி 147 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில் அதிரடி காட்டிய பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதுஇவ்வாறிருக்க, இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் தலைவராக முதன் முறையாக களமிறங்கிய வேகப் பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்,

>>டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன முன்னேற்றம்

இதன்மூலம் ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2ஆவது அவுஸ்திரேலிய தலைவர் என்ற சாதனையை முன்னாள் தலைவர் ரிச்சி பென்னட்டுக்கு பிறகு சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படைத்தார்.

கடைசியாக கடந்த 1962 ஆம் ஆண்டு முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிச்சி பென்னட் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அத்துடன் ஒட்டுமொத்த ஆஷஸ் கிரிக்கெட்டில் கடந்த 1982க்கு பின் கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்து ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பட் கமின்ஸ் பெற்றார்.

கடைசியாக கடந்த 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து அணித்தலைவர் பொப் வில்ஸ் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அதேபோல, மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னி வால்ஷ், இந்தியாவின் அனில் கும்ப்ளே, நியூசிலாந்தின் டேனியல் விட்டோரி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் வரிசையில் அணித்தலைவராக முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

>>பாலியல் சர்ச்சையினால் பதவி விலகும் அவுஸ்திரேலிய அணித்தலைவர்

எனினும், 2019இல் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அணித்தலைவராக அறிமுகமான ரஷித் கான், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பிக்க முன் காபா மைதானத்தில் தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது,

தற்போதய நிலையில் நாளைய 2 மற்றும் 3வது நாட்களில் இன்று போலவே 50 சதவீத போட்டி மழையால் தடைபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 4 மற்றும் 5வது நாள் போட்டிகள் முழுமையாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<