47 வருடங்களின் பின் சமநிலையாகிய ஆஷஸ் தொடர்

161
©AFP

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்களால் வெற்றிபெற, ஆஷஸ் தொடர் 47 வருடங்களின் பின்னர் சமநிலையுடன் நிறைவுற்றுள்ளது.

லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 399 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, நான்காவது நாள் ஆட்ட நேர நிறைவுக்கு முன்னர், 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

குறைந்த வயதில் ஏழாயிரம் ஓட்டங்களைக் கடந்து ஜோ ரூட் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் ……..

ஆஷஸ் தொடரில் 2-1 என அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்க, ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் களம் கண்டிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியிருந்தது. 

வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து அணி துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் முதல் இன்னிங்ஸில் 294 ஓட்டங்களை குவித்தது.  ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஜோ ரூட் 57 ஓட்டங்களையும், ரோரி பேர்ன்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், ஆஷஸ் தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய மிச்சல் மார்ஷ்  46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேங் ஆகியோரின் குறிப்பிடத்தக்க இணைப்பாட்டத்தை பெற்றும், 225 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களையும், லபுஷேங் 48 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற, ஜொப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், 69 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜோ டென்லி (94), பென் ஸ்டோக்ஸ் (67) மற்றும் ஜோஸ் பட்லர் (47) ஆகியோரின் பங்களிப்புடன், 329 ஓட்டங்களை பெற்று, நான்காவது நாள் ஆரம்பத்தில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அத்துடன், அவுஸ்திரேலிய அணிக்கு 399 என்ற கடினமான வெற்றியிலக்கையும் நிர்ணயித்தது. பந்துவீச்சில் நெதன் லயோன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் இங்கிலாந்து அணி நிர்ணயித்திருந்த 399 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, மெதிவ் வேடின் அபார சதத்தை தாண்டியும், ஒரு நாள் மீதமிருந்தும், 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த ஆஷஷ் தொடரில் முதல் முறையாக ஸ்டீவ் ஸ்மித் 50 இற்கும் குறைவான ஓட்டங்களுடன் (23) ஆட்டமிழந்த நிலையில், மெதிவ் வேட் மாத்திரம் அணியை மதிக்கத்தக்க ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச் சென்றார். வேட் 117 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்தபடியாக மிச்சல் மார்ஷ்  24 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார். பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை பகிர்ந்திருந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட …….

இதன் அடிப்படையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 2-2 என சமநிலையாகியுள்ள போதும், இதற்கு முதல் பருவகாலத்தில் கிண்ணத்தை வெற்றிக்கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணி தொடர்ந்தும் கிண்ணத்தை தக்கவைத்துள்ளது. அத்துடன், 1972ஆம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக ஆஷஷ் கிண்ணத் தொடர் ஒன்று சமநிலையில் முடிவடைந்துள்ளது.

முக்கியமாக ஆஷஸ் தொரையும் தாண்டி, தற்போது ஐசிசி இனால் நடத்தப்பட்டு வரும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலின்படி, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 56 புள்ளிகளை பகிர்ந்துக்கொண்டுள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 60 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

  • இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 294 – ஜோஸ் பட்லர் 70, ஜோ ரூட் 57, மிச்சல் மார்ஷ் 46/5
  • அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 225 – ஸ்டீவ் ஸ்மித் 80, மார்னஸ் லெபுசெங் 48, ஜொப்ரா ஆர்ச்சர் 62/6
  • இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 329 – ஜோ டென்லி 94, பென் ஸ்டோக்ஸ் 67, நெதன் லையோன் 69/4
  • அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 263 – மெதிவ் வேட் 117, மிச்சல் மார்ஷ் 24, ஸ்டுவர்ட் ப்ரோட் 62/4, ஜெக் லீச் 49/4 

முடிவு – இங்கிலாந்து அணி 135 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<