ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

572
Image Courtesy : AFP

இங்கிலாந்தின் எஜ்பெஸ்டனில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தின் இரண்டு சதங்கள் நெதன் லையோன் மற்றும் பெட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சின் ஊடாக அவுஸ்திரேலிய அணி மிகச்சிறந்த வெற்றியை பதிவுசெய்துள்ளது.

அதேநேரம், அவுஸ்திரேலிய அணி பெற்ற இந்த வெற்றியானது புதிதாக ஆரம்பித்துள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பெறப்பட்ட முதல் வெற்றியாகவும் பதிவாகியுள்ளது.

ஒரே போட்டியில் மூன்று இந்தியர்களின் சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித்

கிரிக்கெட் உலகில் எதிர்பார்ப்பு மிக்க ஆங்கிலேயர்களின் ஆஷஷ்….

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஷ் தொடரின் முதல் போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்பித்தது. மிகவும் சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாகவும், விறுவிறுப்பான டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாகவும் அமைந்திருந்த இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெளிப்படுத்திய நேர்த்தியான துடுப்பாட்டத்தின் ஊடாக 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்திருக்கவில்லை. இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் ப்ரோட் (5 விக்கெட்டுகள்) மற்றும் க்ரிஸ் வோர்க்ஸ் (3 விக்கெட்டுகள்) ஆகியோரின் பந்துவீச்சுக்கு தடுமாறி 287 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என வர்ணிக்கப்படும் அளவிற்கு, தனியாளாக போராடிய ஸ்டீவ் ஸ்மித் 144 ஓட்டங்களை குவித்தார். அத்துடன், பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பின்னர், ஸ்மித் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியென்பதால், இந்த சதமானது மிகவும் வரவேற்பினை பெற்றிருந்தது.

ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் பேசப்பட்டாலும், அவுஸ்திரேலிய அணியை பொருத்தவரை பெறப்பட்டிருந்த ஓட்ட எண்ணிக்கை போதுமானதாக இருக்கவில்லை. இதன் பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை ரோரி பேர்ன்ஸ் வழிநடத்தியதுடன், ஜோ ரூட் (57) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (50) ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை வழங்க, இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களை பெற்று, அவுஸ்திரேலிய அணியை விட 90 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. 

ஸ்டீவ் ஸ்மித் போன்று போராட்டமாக தனது கன்னி சதத்தை பெற்றுக்கொண்ட ரோரி பேர்ன்ஸ் 133 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், நெதன் லையோன் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இங்கிலாந்து அணியின் 90 ஓட்டங்கள் முன்னிலை மற்றும் ஆஷஷ் டெஸ்ட் தொடரின் முதல் வெற்றியை கருத்திற்கொண்டு துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பிராகசிக்க தவறியிருந்தனர். ஆனாலும், மத்தியவரிசை மற்றும் பின்வரிசை வீரர்களின் சிறந்த பங்களிப்பின் உதவியுடன் 4 ஆவது நாள் நிறைவடையும் கட்டத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ஓட்டங்களை குவித்த அவுஸ்திரேலிய அணி ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

ஆஷஸ் – விளையாட்டுக்கு அப்பால் கௌரவத்திற்கான போட்டி

‘1882 ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஓவலில் உயிர் நீத்த இங்கிலாந்து…..

குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டங்களை குவித்திருந்த ஸ்டீவ் ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் துடுப்பாட்டத்தை தாங்கிபிடித்து தனது 25 ஆவது டெஸ்ட் சதத்துடன் 142 ஓட்டங்களை அணிக்காக சேர்த்தார். ஆனால், இம்முறை அணியின் துடுப்பாட்டத்துக்கு மறுபுறத்தில் வலுச்சேர்த்த மெதிவ் வேட் தனது 3 ஆவது டெஸ்ட் சதத்துடன் 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ட்ராவிஸ் ஹெட் 51 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் ஜேம்ஸ் பெட்டின்சன் 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். இங்கிலாந்தின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 398 என்ற வெற்றி இலக்கினை நோக்கி நான்காவது நாள் இறுதிப் பகுதியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட்டிழப்பின்றி 7 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 13 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பின்னர், டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிதானமாக துடுப்பெடுத்தாட முற்பட்ட போதும், மதியபோசண இடைவேளைக்கு முன், அணித் தலைவர் ஜோ ரூட் உட்பட 85 ஓட்டங்களுக்கு தங்களுடைய முதல் 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 

மதியபோசண இடைவேளைக்கு பின்னர், இங்கிலாந்து அணி போட்டியை சமநிலைப்படுத்தும் முயற்சியுடன் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த எதிர்பார்த்த போதும், பெட் கம்மின்ஸ் (4 விக்கெட்டுகள்) மற்றும் நெதன் லையோன் (6 விக்கெட்டுகள்) ஆகிய இருவரின் அபார பந்துவீச்சுக்கு மத்தியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இங்கிலாந்து அணியின் க்ரிஸ் வோர்கஸ் மாத்திரம் அதிகபட்சமாக 37 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இங்கிலாந்து அணி வெறும் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள்

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் முகமாக…..

அவுஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றியினை பெற்றதன் அடிப்படையில், ஆஷஷ் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையை பெற்றுள்ளதுடன், ஐசிசி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அதேநேரம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 90 இற்கும் அதிகமான ஓட்டங்களில் பின்தங்கியிருந்து, அதிகூடிய ஓட்டங்களால் (251) வெற்றிபெற்ற அணி என்ற சாதனையையும் அவுஸ்திரேலிய அணி பெற்றிருக்கிறது.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஆஷஷ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

அவுஸ்திரேலியா (முதல் இன்னிங்ஸ்) – 284 – ஸ்டீவ் ஸ்மித் 144, பீட்டர் சிட்ல் 44, ஸ்டுவர்ட் ப்ரோட் 86/5, க்ரிஸ் வோர்க்ஸ் 58/3

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 374 – ரோரி பேர்ன்ஸ் 133, ஜோ ரூட் 57, பென் ஸ்டோக்ஸ் 50, பெட் கம்மின்ஸ் 84/3, நெதன் லையோன் 112/3

அவுஸ்திரேலியா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 487/7d – ஸ்டீவ் ஸ்மித் 142, மெதிவ் வேட் 110, ட்ராவிஸ் ஹெட் 51, பென் ஸ்டோக்ஸ் 85/3

இங்கிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ்) – 146 – க்ரிஸ் வோர்க்ஸ் 37, ஜேசன் ரோய் 28, ஜோ ரூட் 28, நெதன் லையோன் 49/6, பெட் கம்மின்ஸ் 32/4

போட்டி முடிவு – அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<