பொதுநலவாய கனிஷ்ட பளுதூக்கல் போட்டியில் இலங்கையின் அஷேன் கருணாரத்ன 61 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
பொதுநலவாய பளுதூக்கல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிஜி தீவுகளின் சுவா நகரில் தற்போது நடைபெற்று வரும் பொதுநலவாய சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பளுதூக்கல் போட்டியில் ஆண்களுக்கான 61 கிலோ கிராமுக்குக் குறைவான எடைப் பிரிவில் போட்டியிட்ட அஷேன் கருணாரத்ன வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இவர் Snatch முறையில் 103 கிலோ கிராம் எடையையும், Clean and Jerk முறையில் 130 கிலோ கிராம் எடையையும் உள்ளடங்கலாக மொத்தமாக 233 கிலோ கிராம் எடையைத் தூக்கி 3ஆவது இடத்தைப் பிடித்தார்.
கொழும்பு வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவரான அஷேன் கருணாரத்னவின் பயிற்சியாளராக தனுஷ்க நிக்கலஸ் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>2026 பொதுநலவாய விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தில்
30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீர, வீராங்கனைகளின் பங்கேற்புடன் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகிய பொதுநலவாய சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பளுதூக்கல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இம்முறை இலங்கை சார்பில் 3 வீரரகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் வெண்கலப் பதக்கம் வென்ற அஷேன் கருணாரத்னவுடன், சிரேஷ்ட பிரிவு ஆண்களுக்கான 80 கிலோ கிராம் எடைப் பிரிவில் பசிந்து மல்வான மற்றும் சிரேஷ்ட பிரிவு ஆண்களுக்கான 96 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஆபித் ஜெமீல் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளனர்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<