பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் அருண தர்ஷன

Paris Olympics 2024

197
aris Olympics 2024

இலங்கையின் இளம் மத்திய தூர ஓட்ட வீரர் அருண தர்ஷன பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்மூலம் இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதிபெற்ற 3ஆவது மெய்வல்லுனராகவும், 6ஆவது இலங்கை வீரராகவும் அவர் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்காக ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெற்ற முதல் இலங்கை வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டிகக்கான ‘பாரிஸ் நோக்கிய பாதை’ (Road to Paris) உலக தரவரிசையில் அருண தர்ஷன 51ஆவது இடத்தைப் பெற்றதால் அவருக்கு முதல் 48 வீரர்களில் இடம்பெற முடியாமல் போனதுடன், ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி  பெறும் வாய்;ப்பையும் தவறவிட்டார்.

எவ்வாறாயினும், காயங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் இம்முறை ஒலிம்பிக்கை தவறவிட்ட வீரர்களின் தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பிறகு ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான புதிய தரவரிசையை உலக மெய்வல்லுனர் சங்கம் இன்று வெளியிட்டிருந்தது. இதில் அருண தர்ஷன ஒலிம்பிக் தகுதியை பெற்றுக் கொண்டுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு முதல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அருண, தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப், உலக கனிஷ்ட சம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு விழா, தெற்காசிய விளையாட்டு விழா, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்காக பதக்கங்களையும், கௌரவத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதேவேளை, அருண தர்ஷன அண்மையில் பஹாமாஸில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.90 செக்கன்களில் நிறைவு செய்து தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதனிடையே, அருண தர்ஷன தவிர இளம் மத்திய தூர ஓட்ட வீராங்கனை தருஷி கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேக்கம்கே ஆகிய இருவரும் இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்ற ஏனைய மெய்வல்லுனர்கள் ஆவர்.

ஓட்டுமொத்தத்தில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு இலங்கையிலிருந்து 6 வீரர்கள் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<